Tuesday, September 29, 2020

ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்

 ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்

நவதிருப்பதி.

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.

புளிய மரத்தின் சிறப்பு

நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். 

அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில். இந்த ஆலயம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. பெயர்க்காரணம் இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. 

திருக்கோயில் அமைப்பு: திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார். ராமர் சந்நிதி பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. 

இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது. நம்மாழ்வார் தனி சன்னதி கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன. சிற்பக்கலை அம்சம் இத்திருக்கோயில் சிற்பக் கலையிலும் சிறந்து விளங்குகிறது. 

இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார். குருகாசேத்திர மகிமை பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால். அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார். யானையும் வேடனும் முக்தி முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். 

நம்மாழ்வார் வரலாறு: பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர். இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. 

ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது. 

திருப்புளிய மர வரலாறு ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். 

வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. பழுக்காத புளியமரம் இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும். திருக்கோவில் அமைவிடம் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 

திருத்தல இறைவன் தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு) தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி) தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை விமானம்: கோவிந்த விமானம் கிரகம்: குரு ஸ்தலம் தல விருட்சம்: உறங்காப்புளி



No comments:

Post a Comment