Saturday, September 26, 2020

நெல்லை சுற்றுலா 19

நெல்லை சுற்றுலா19

(வெங்கடேசன் வரதராஜன்)6381369319

சுந்தரபாண்டியபுரத்திலிருந்து கிளம்பி சங்கரன் கோயில் வரோம். இறங்கிய இடத்திலேயே ஒரு லாட்ஜ் கண்ணில் பட இடம் கிடைக்கிறது. ஓய்வுக்குப்பின் அருகிலேயே இருக்கும் சங்கரநாராயணர் கோயில் செல்கிறோம். 

சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

மரபு வழி வரலாறு

சங்கரன்கோவில் வரலாறு

ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின .

அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .

அருள்ட்சொருபம்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடரும். 

படங்கள் கோயில் நந்தி,முகப்பு ஓவியம்

மணிக்கிரீவன்,வான் தோற்றம்


Add caption




No comments:

Post a Comment