Tuesday, September 22, 2020

திருப்புல்லாணி

 🙏 நமஸ்காரம்    


94. திருப்புல்லாணி

மூலவர் - ஆதி ஜகந்நாதர், சக்கரவர்த்தித் திருமகன், தெய்வச்சிலையார், தர்ப்பசயன ராமர்.

தாயார் - கல்யாணவல்லி, பத்மாஸநி

உற்சவர் - கல்யாண ஜகந்நாதர்

விமானம் - கல்யாண விமானம்

தீர்த்தம் - ஹேம தீர்த்தம், ரத்னாகரம்

நாமாவளி - ஸ்ரீ கல்யாணவல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந்நாதாய நமஹ:

வழித்தடம்:

இராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரை செல்லும் பாதையில், தெற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

பாசுரம்:


வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த

வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்

எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்

புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”

பெரிய திருமொழி (1782)


“வில்லால் இலங்கை மாநகரையே கலக்கமுறச் செய்யுமாறு அம்புகளை ஏவிய மாவீரனான ராமனின் பின்னே போய்விட்டது என் நெஞ்சம். அது திரும்பி வரும் வரை யார் பழித்தாலும் சரி, ஏசினாலும் சரி, எம்பெருமானின் பொய் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு நான் நம்பியிருப்பேன் என்கிறார். (பொய்ச் சொல்லாயினும் சரி, அவன் திருவாயினின்று வந்தால் போதும் அதுவே தனக்கு உகப்பு என்கிறாள் பரகால நாயகி)

திருமங்கையாழ்வார் 21 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

பாசுரம் பதவுரை:

இலங்கை - லங்காபுரியானது

மலங்க - நலங்கியழியும்படியாக

வில்லால் - சார்ங்கத்தாலே

சரம் - அம்புகளை

துரந்த - பொழிந்த

வல்லாளன் பின் - மஹாவீரரான பெருமாள் பின்னே

போன - சென்ற

நெஞ்சம் - மனமானது

வரும் அளவும் - மீண்டுவருகிறவரையில்,

எல்லாரும் - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும்

என் தன்னை - என்னை

ஏசிலும் - பழித்தாலும்

பேசிடினும் - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி)

புல்லாணி எம்பெருமான் - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய

பொய் - பொய்யுரைகளை

கேட்டு இருந்தேன் - நம்பித்தரித்திருக்கின்றேன்.

பாசுரம் விளக்க உரை:

பரகாலநாயகியின் உற்றாருறவினவரெல்லாரும் வந்து திரண்டு நங்காய்! நாங்கள் சொன்ன ஹிதவார்த்தையைக் கேளாதே * மெய்போலும்பொய்வல்லனான அவனுடைய வார்த்தையைக் கேட்டாயிற்றே; நாங்கள் என்ன சொன்னோம்? ;பெண்களைப் பரிசழிப்பதே அவனுக்குத் தொழில்; அவன் பக்கல் நசையைவிட்டிடு; விடாயாகில் பரிசழிவாய்; என்றன்றோ நாங்கள் பலகாலுஞ் சொல்லுவது; இப்போது எங்களுடைய வார்த்தையே மெய்யாய் அவனுடைய வார்த்தையெல்லாம்; பொய்யானபடி கண்டாயிறே; இனியாகிலும் எங்கள் வார்த்தையைக் கேட்கவல்லையோ?; என்ன; அவன் பின்னே போயிருக்கிற நெஞ்சு திரும்பி வரட்டும், அப்படியே செய்வோம்; என்கிறாள்.

அவன் பெண்களைப் பரிசழிப்பவனே யன்றி ஒருநாளும் பெண்களுக்கு உதவுபவனல்லன் என்று உறவினர் சொன்னதை மறுத்துக் கூறுவாள், வில்லாலிலங்கைமலங்கச் சுரந்துரந்த வல்லாளன், என்கிறாள். ஐயோ! அவனுக்கு ஸ்த்ரிகளிடத்துள்ள பக்ஷபாதத்தை நீங்கள் அறிகின்றிலீர்போலும்; உண்ணாது உறங்காது ஒலிகடலையூறுத்து இலங்கை நீறெழச் செற்றதெல்லாம் ஒரு பிராட்டிக்காக வன்றோ? அவளுக்காக அத்தனை பாடுகள் பட்டவன் அவளோடேஸஜாதீயரான நமக்கும் சிறிது உதவாமற்போகான் என்று அக்குணத்தையே பற்றாசாகக் கொண்டன்றோ என்மனம் அவன்பின்னே சென்றிருக்கின்றது; அந்த நெஞ்சு மீண்டுவந்தாலன்றோ நான் உங்கள் வார்த்தையைக் கேட்கவும் அதன்படி நடந்துகொள்ளவும் வல்லேனாவேன்; அது மீண்டு வருமளவும் நீங்களெல்லாரும் ஒருமிடறாகத் திரண்டு என்னைப் பரிஹஸித்தாலும் பழித்தாலும் அப்பெருமானைப் பொய்யனென்றாலும் அந்தப் பொய்யுரைகளையே ஜீவநாதாரமாகக்கொண்டு தரித்திருப்பேனென் றாளாயிற்று.

எல்லாரும் =  தோழிமாரும் தாய்மாரும் புல்லாணி யெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே - எம்பெருமானைத் தவிர மற்றையோர்கள்! மெய்யுரையே சொல்லுவர்களானாலும் அவைகொண்டு நமக்கொரு காரியமில்லை; எம்பெருமானது வார்த்தை பொய்யேயானாலும் அது தவிர வேறொன்று நமக்குப் புகலில்லை யென்கிறாளென்க. “ராமா வதாரத்தில் மெய்யும் க்ருஷணாவதாரத்திற் பொய்யுமே நமக்குத் தஞ்சம்” என்று ரஸோக்தியாக பட்டர் அருளிச் செய்வதுண்டு. பொய்யாகிலுமாம் மெய்யாகிலுமாம்; அதில் ஒரு விசாரமில்லை எம்பெருமானுடையது; என்னுமத்தனையே கொண்டு தரித்திருப்பர் ஆஸ்திக.

- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம்,  ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை எழுத்தில் அடங்குந் தன்மையதன்று. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து (சேதுக்கரை) கடலைக் கடக்க உபாயஞ் சொல்ல வேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக (தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில் புல்லணை எனவும் பெயராயிற்று. இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு. 

இறைவன் நாராயணன், "அருள்மிகு ஜகந்நாதப் பெருமாள்" என்ற திருநாமத்துடன், பாரத தேசத்தில் மூன்று முக்கியமான தலங்களில் சேவை சாதிப்பதாக ஐதீகம். அவை "உத்தர ஜகந்நாதம், மத்திய ஜகந்நாதம், தட்சிண ஜகந்நாதம்" என்று போற்றப்படுகிறது. உத்தர ஜகந்நாதம் என்பது ஒரிசா மாநிலத்தில் உள்ள "பூரி ஜகந்நாதர்" ஆலயத்தைக் குறிக்கும். மத்திய ஜகந்நாதம் என்பது பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் திருஅவதாரம் செய்த  சென்னைக்கு அருகில் உள்ள ஜகந்நாத பெருமாள் திருத்தலத்தைக் குறிக்கும்.  தட்சிண ஜகந்நாதம் என்பது திருப்புல்லாணி திருத்தலத்தைக் குறிக்கும். அருள்மிகு ஜகந்நாத பெருமாள் வீற்றிருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில்மற்றும் ஒரு தனிச்சன்னதியில் இரு தேவியருடன் சேவை சாதிக்கிறார். காலத்தால் இத்தலம் தொன்மையானதாகவும், அதன் காரணமாக இத்தலத்திற்கு "ஆதி ஜகந்நாதம்" என்று ஒரு பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான் வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக)  பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள் அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர். இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம். புல்லணை என்பதற்கு திருப்புல் - அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும். இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்த போது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.

சிறப்பு:

புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர் எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில் நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை, செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. 

வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச் சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர். இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.

ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம். கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்” தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும். என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில் வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/YALfR7okaKQ

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/138522204614882/?sfnsn=wiwspmo&extid=44nJWSzQRq9nbzEf

No comments:

Post a Comment