Tuesday, September 29, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 8 வையம் காத்த பெருமாள் திருக்கோவில்

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 8 🌺🌺


அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோவில் :-

ஆடுதுறை பெருமாள் கோவில் என்ற திருக்கூடலூர்.

மூலவர்: ஜகத்ரட்சகன், உய்யவந்தார்

தாயார்: பத்மாசனி, புஷ்பவல்லி

உற்சவர்: ஜகத்ரட்சகன், வையம் காத்த பெருமாள்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: சுத்தசத்வ விமானம்

தீர்த்தம்: சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ பத்மாஸநவல்லீ ஸமேத ஸ்ரீ வையங்காத்த ஸ்வாமிநே நமஹ

ஊர்: ஆடுதுறை

🌺🌺 தலவரலாறு:-

ஆனந்த நாதனான இறைவன் நாராயணன் மீது அம்பரீசன் என்ற மன்னன் தீவிரமாக பக்தி கொண்டிருந்தான். எப்போதும் திருமாலின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக ஏகாதசி விரதம் இருப்பதிலேயே கவனமுடன் இருந்தார். விரதங்களில் ஏகாதசி விரதம் மிகச் சிறந்த ஒன்றாகும்.

ஒருசமயம் அம்பரீசன் காவிரிக்கரையான இத்தலத்தில் ஏகாதசி விரதம் இருந்தபோது துர்வாச முனிவர் அவரைக் காண வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை.

அம்பரீசன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபிக்க முன்வந்தபோது, அம்பரீசன் அறியா வண்ணம், தன் பைக்தனைக் காப்பதற்காக திருமால் துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார்.

சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் திருமாலின் திருவடியை சரணடைந்தார். விரதம் முடிந்ததும் நடந்ததை அறிந்த அம்பரீசன் முனிவரை இகழ்ந்ததாக எண்ணி தன்னை அழித்துக் கொள்ள திட்டமிட்டான்.

அப்போது பெருமாள் தோன்றி காட்சி தந்து அருளினார். பின்பு, அம்பரீசன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோவில் அமைத்து வழிபட்டான்.

வையம் காக்கும் பெருமாள் தனக்குக் காட்சி தந்து அருளியதால் இத்தல இறைவனுக்கு "வையம் காத்த பெருமாள்" என்ற திருநாமம் சூட்டினான்.

🌺🌺 ஆடுதுறைப் பெருமாள் கோவில் :-

காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்ற பெருமாள் ஓடோடி வந்தார். காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ஏதோவொன்று சிக்கிக் கொள்ள அதை கரைக்குக் கொண்டு வந்து பார்த்தனர்.

அது பெருமாளின் அழகிய விக்கிரகத் திருமேனி. அதையடுத்து வெள்ளமும் வடிந்து போகவே அந்தப் பெருமாளை வையம் காத்த பெருமாள் எனப் பூரிப்புடன் அழைத்தனர். அதைத் தொடர்ந்து கோவிலும் கட்டப்பட்டது.

பிற்காலத்தில் மதுரை மாநகரை ஆண்ட இராணி மங்கம்மாள், இத்தலத்தை மேம்படுத்தி வழிபட்டதாக கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

காவிரிக்கரையில் அமைந்துள்ள தலம் என்பதால் "ஆடுதுறைப் பெருமாள் கோவில்" எனும் பெயரைப் பெற்றது.


🌺🌺 சிறப்புகள்:-


பெருமாளின் நவக்கிரக தலங்களில் கேது தலமாக விளங்கும் திவ்யதேசம்.

பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திவ்யதேசம்.

திருமகள் தாயார் பத்மாசனவல்லி என்ற திருநாமத்தில் காட்சிதரும் திவ்யதேசம்.

தேவர்கள், முனிவர்களோடு கூடி வழிபட்டதால் கூடலூர் என்று பெயர் பெற்ற திருத்தலம்.

பெருமாள் வராக அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்த திருத்தலம்.

🌺🌺 சக்கரத்தாழ்வார் :-

வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி 16 நெய் தீபமேற்றி செவ்வாய்கிழமைகளில், வெள்ளை நிறம் வஸ்திரம் சாற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

🌺🌺 பாசுரம் :-


கூற்று ஏர் உருவின் குறளாய், நிலம் நீர்
ஏற்றான் எந்தை பெருமான் ஊர் போல்
சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண்
கோல் தேன் முரலும் கூடலூரே.
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல்
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே.
-- திருமங்கை ஆழ்வார்.

இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார் "கூடலூர்" என்றே பாசுரத்தில் பாடியுள்ளார். இங்கு 10 பாசுரங்களை இவர் பாடியுள்ளார்.

🌺🌺 தலவிருட்சத்தின் சிறப்பு :-

தலவிருட்சமாகிய பலா மரத்தில் இயற்கையாகவே தோன்றிய ஷங்கம். இம்மரத்தில் இயற்கையாகவே திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான "பாஞ்சஜன்யம்" என்ற சங்கு அமைப்பு தோன்றியுள்ளது .

🌺🌺 வழித்தடம் :-

தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் மார்க்கத்தில் 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். ஐயம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு பத்மாசினி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோவில் - திருக்கவித்தலம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment