🙏 நமஸ்காரம்
101. திருச்சாளக்கிராமம் (ஸாளக்கிராவா)
மூலவர் - முக்தி நாராயணன், ஸ்ரீமூர்த்தி
தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார்
விமானம் - கனக விமானம்
தீர்த்தம் - சக்ர தீர்த்தம், கண்டகி ஆறு
நாமாவளி - ஸ்ரீ தேவிநாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ:
வழித்தடம்:
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து 250 கி.மீ தொலைவில் முக்திநாத் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 600 அடி உயரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. விமானம் மூலமோ அல்லது நடந்தோ இத்திருத்தலத்தை சென்றடையலாம்.
பாசுரம்:
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.
- பெரிய திருமொழி (988)
பாசுரம் பதவுரை:
கலையும் கரியும் பரிமாவும் - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
சிலையும் கணையும் துணை ஆக - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான் - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர் - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு - மலைகளாலே
அணை கட்டி - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன் - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான் - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம் - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை - மனமே!, சென்று சேர்.
ஸ்தல வரலாறு:
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.
மதுகுளத்து அரசனான "தர்மதுவசன்" மற்றும் அவனது மனைவி மாதவிக்கும் "விருந்தை" என்ற மகள் அவதரித்தாள். அவள் சிறு வயதிலேயே இறைவன் நாராயணனை மணாளனாக அடைய விரும்பி இறைவனை நோக்கி தவமியற்றினாள். அப்போது அவள் முன் தோன்றிய பிரம்மா விதிப்படி இன்னும் இரு பிறவி எடுக்க வேண்டும் என்றும் இரண்டாம் பிறவியிலேயே இறைவனை அடைய வேண்டும் என்று வரம் அளித்தார் பிரம்மதேவர். பிரம்மா அளித்த வரத்தின் படியே அடுத்த பிறவியில் ஜலந்தரன் என்ற அசுரனுக்கு மனைவியானாள். இருப்பினும் இறைவன் மீது பக்தி கொண்ட விருந்தை மறு பிறவியிலும் இறைவன் மீது பக்தி கொண்டு பதிவிரதையாகா வாழ்ந்தாள். ஜலந்தரன் ஏராளமான கொடுமைகளைச் செய்தும் அவளது விரதத்தால் காப்பாற்றப்பட்டான். அவனது கொடுமைக்கு முடிவினை எண்ணிய திருமால் அவளது விரதத்திற்கு தடை ஏற்படுத்தி அசுரனை வதம் செய்தார். இதனால் மனம் வெகுண்ட விருந்தை கல்லாக போகும் படி எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனை சபித்தாள். இறைவனாக இருந்தாலும், உத்தமிகள் சாபத்திற்கு ஆளானால் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு இவ்வரலாறே சான்றாகும். சாபமளித்தவரே விமோசனம் அளிக்க வேண்டும் என்பதால், அவள் அடுத்த பிறவி வரை பெருமாள் கல்லாக இருந்ததாகவும், பிறகு உருவம் பெற்று அவளை மணந்ததாகவும், கல்லாகக் கிடந்த இவ்விடத்தில் எக்காலமும் கல்லாக, மண்ணாக, காற்றாக என அனைத்துமாகி இருந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும் முக்தியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் நமக்காக அருள்வதாக தலவரலாறு கூறுகிறது.
சிறப்பு:
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இமயமலைச் சாரலில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால்,கடுமையான குளிர் இப்பகுதி முழுவதும் இருக்கும். கடுங்குளிர் என்பதால் கம்பளி போன்ற குளிர்கால ஆடைகளை எடுத்துச் சென்றால் மட்டுமே குளிரைத் தாங்க முடியும். இவ்விடத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு செல்லும் பக்தர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் செல்வது என்பது அவசியமான ஒன்று. பரிபூரண பக்தியோடு மட்டுமல்லாமல், இறைவனின் கருணையும், அருளும் இருந்தால் மட்டுமே நாம் இத்தலத்திற்குச்செல்ல முடியும்.
அக்கால புராணங்கள் பலவற்றிலும் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "சாளக்கிராமத்தில் ஒவ்வொரு கல்லிலும் இறைவன் இருக்கிறார்" என்ற பதிவே அனைத்திலும் உள்ளது.
சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள் கருதப்படுகின்றன.
2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்
இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும் மாறுபடுகின்றனவாம்.
பச்சை - பலம், தைரியம்
வெண்மை - ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு - புகழ், பெருமை
புகை நிறம் - துக்கம், தரித்திரம்
சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது. பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோஷமில்லை.. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.
சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு.
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.
இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.
சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/6ti_eFryAEE
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/140941311039638/?sfnsn=wiwspmo&extid=mjFAOqE65QCqLdOo
No comments:
Post a Comment