Thursday, September 17, 2020

*நெல்லை சுற்றுலா 5- 1 கிருஷ்ணாபுரம்

 நெல்லை சுற்றுலா பகுதி 5 -1

கிருஷ்ணாபுரம்....

இளவரசன் கர்ணன்

இளவரசனுக்குரிய மீசையுடனுடன், கையில் பெரிய (பிற்காலத்தில் சிலையில் வில் ஒடிந்துவிட்டது…) வில்லைப் பற்றியபடி மகாபாரதத்தின் கதாநாயகன் கர்ணன் கனகம்பீரமாக நிற்கிறார். அங்க தேசத்து அரசனாக துரியோதனனால் முடிசூட்டப்பட்ட வில்வீரனை இங்கு காணலாம்.

அர்ஜுனனின் தவம்

கர்ணன் இருந்தால் அர்ஜுனன் இருக்க வேண்டுமல்லவா! கர்ணனுக்குப் பக்கத்திலேயே நீண்ண்ண்..ட தாடியுடன் ஆழ்ந்த தவக்கோலத்தில் அர்ஜுனனைக் காணலாம். கையில் நீளமாக வளர்ந்த நகங்கள் அர்ஜுனனின் நீண்டநாள் தவ வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. உயிர்த்து எழுந்து நிற்கும் சிற்பம்.

யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம்

ஒரே கல்லில் யானையும் காளையும் கலந்த (ரிஷப குஞ்சரம்) சிற்பம் . இரண்டும் நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போன்று இருக்கும். யானையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் காளை போலவும், காளையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் யானை போலவும் தோன்றும்.

அரசியை தோளில் சுமக்கும் அரசன்

உணர்ச்சி ததும்பும் உயிரோவியம். ஒரு அரசன் தன் அரசியை தோளில் சுமந்தபடியே எதிரிகளுடன் சண்டை போடுகிறார். அரசியின் உடல் எடையை சுமப்பதால் அரசனின் கைகளில் தசைகள் முறுக்கேறியுள்ளன, விலா எலும்புகள் விரிவடைந்துள்ளது. உடற்கூற்றியல்படி உயிர்பெற்ற சிற்பங்கள். அரசனின் மூச்சுக்காற்று பட்டு அரசியின் முக்காடு தலையை விட்டு சற்று விலகுகிறது. அரசியை காப்பாற்றுவது ஒன்றே அரசனின் ஒற்றைக் குறிக்கோள்.

கடத்தப்பட்ட தன் அரசியை காப்பாற்றும் அரசன் சிற்பத்தொகுப்பு

கிருஷ்ணாபுரத்தின் மற்றோரு தலைசிறந்த கலைப்படைப்பு இந்த சிற்பம். இந்தத் தொகுப்பில் அரசன் தன் குதிரையில் அமர்ந்து கடத்தப்பட்ட தன் அரசியை மீட்க ஆக்ரோஷத்துடன் துரத்துகிறான். போர்க்களத்தில் ஒரு முன்னங்காலை தரையில் ஊன்றியும், மறுகாலை தூக்கியபடியும் கோபம் ததும்ப விரையும் குதிரையை இங்கு மட்டுமே காணமுடியும். அரசியை கடத்தியவனை தன் பார்வையிலிருந்து நழுவவிட்ட போதிலும் விரைந்து சென்று அவனை நோக்கி வெறியுடன் முன்னேறும் அரசனின் உணர்வுகள் காண்போர் கண்களுக்கு விருந்து.

கொஞ்சும் அழகுடைய ஒரு பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி அமர்ந்துள்ளது. ஒரு பிச்சைக்காரன் தோளில் மலங்க மலங்க விழித்தபடி ஒரு குரங்கு அமர்ந்துள்ளது. இவை சிற்பக்கலையின் உன்னதம்.

இரண்டு காதலர்கள் மற்றோரு தூணில் ஒய்யாரமாய் நின்று காதல் புரிகிறார்கள்.

அடுத்த தூணில் வீரன் ஒருவனும் நாடோடி மங்கை ஒருத்தியும் நடனமாடும் மற்றோரு அழகியை வியந்து பார்த்தபடி உள்ளார்கள்.

வேறொரு தூணில் தன்னை வெறியுடன் கற்பழிக்க முயலும் ஒரு சாமியாரிடம் தன்னைக் காத்துக்கொள்ள அவனுடைய தாடியைப் பிடித்து வலுவாக இழுத்து தள்ளும் கற்பரசி ஒருத்தியின் போராட்டம் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

வைணவக் கோவில்கள் தற்பொழுது சைவ கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1975 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இக்கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் இக்கோவிலைப் நேர்தியாகப் பராமரித்து வருகிறது. புதுவண்ணப் பூச்சுடன் இக்கோவில் இன்று மிளிர்கிறது.

நல்ல கலை நயத்தை ரசித்ததுடன் வேங்கடவனின் தரிசனமும் கிடைக்கிறது. 

கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். அதேபோல மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 











மறுபடியும் திருநெல்வேலி எறங்கி ஒரு ஓட்டல்ல ராகி பணியாரம் சாப்பிடறோம்

ரெசிப்பி கீழே


ராகி பணியாரம்

தேவையானவை :

ராகி மாவு – ஒரு கப்

கோதுமை மாவு – அரை கப்

பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி

அரிசி மாவு. – கால் கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு – ஒன்றரை தேக்கரண்டி

கறிவேப்பிலை – ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)

காரட் – ஒன்று

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா வகையான மாவையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, துருவிய காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் வதக்கியவற்றை மாவில் போட்டு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் மாவை குழியின் முக்கால் அளவிற்கு ஊற்றி இருபுறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும். சுவையான ராகி பணியாரம்

No comments:

Post a Comment