🙏 நமஸ்காரம்
96. திருஅயோத்தி
மூலவர் - ஸ்ரீராமர், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன்
தாயார் - சீதா பிராட்டி
விமானம் - புஷ்கல விமானம்
தீர்த்தம் - பரமபதஸத்ய புஷ்கரணி, சரயுநதி
நாமாவளி - ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகுநாதகாய நமஹ:
வழித்தடம்:
உத்தரபிரதேசத்தின் தலை நகரமான லக்னோவிற்கும், காசிக்கும் இடையில் இத்தலம் அமைந்துள்ளது. லக்னோவிலிருந்து காசிக்குச் செல்லும் இரயில் பாதையில் பைசாபாத் என்னுமிடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் திருஅயோத்தி அமைந்துள்ளது. பேருந்து அல்லது ஆட்டோவின் வாயிலாகச் சென்றடையலாம். டில்லியிலிருந்து லக்னோ வழியாக பைசாபாத் செல்வதற்கு பேருந்து வசதி உண்டு.
பாசுரம்:
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத் தென் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ
- பெருமாள் திருமொழி (724)
சிற்றன்னையின் சொல் மூலமாக தந்தை தயரதன் ஆணையை சிரமேற்கொண்டு தொன்மையான கானகம் அடைந்த ஸ்ரீராமனே, ஞானம் அற்றவர்கட்கு அருமருந்தாய் திகழ்ந்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அயோத்தி நகரதிபதியே ஸ்ரீராமனே தாலேலோ, என்று குலசேகராழ்வாரால் தாலாட்டுப் பாவினால் மங்களாசாசனம் செய்யப்பட்டது
பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் 13 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும்.
பாசுரம் பதவுரை:
சுற்றம் எல்லாம் பின் தொடர - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்துவர
தொல்கானம் அடைந்தவனே - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு - உனக்கே அற்றுத்தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே - அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து - ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே - நீலமணிபோலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன் - சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா - சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
தாலேலோ -
பாசுரம் விளக்க உரை:
இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க; இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ, அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப்போகையாலே எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம். இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.
அற்றவர்கள் (ஸ்ரீராமா) என்று சரபங்காச்ரமத்தில் வந்து கதறின தண்டகாரண்ய வாஸிகளான முனிவரைச் சொல்லுகிறது. அங்ஙனம் வந்து வேண்டிக் கொண்ட முனிவர்களை நோக்கி “அப்படியே நான் உங்கள் விரோதி வர்க்கங்களை வேரறத் தொலைத்து விடுகிறேன், அஞ்சேல்மின்” என்று உறுதிமொழி கூறிய இராமபிரான் அந்தப் பிரதிஜ்ஞையை நிறைவேற்றுதற்பொருட்டு தண்டகாரணியத்திற்குப் புறப்படுங்கால் பிராட்டி பெருமாளை நோக்கி “ஆரியரே! தாபஸவ்ருத்தியை அவலம்பித்து வந்து சேர்ந்தவிடத்தில் க்ஷத்ரியவ்ருத்தியைப் பாராட்டக் கருதுவது உமக்குத் தகுதியல்ல; உமது விஷயத்தில் ஒரு குற்றமுஞ் செய்யாத பிராணிகளை நீர் கொல்ல முயல்வது அநியாயமாகும்” என்று பலவாறாக உணர்த்த; அது கேட்ட இராமபிரான் - “ஸுதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்; யாருக்காவது பிரதிஜ்ஞை செய்துகொடுத்து அதிலும் பிரமஞானிகளுக்குப் பிரதிஜ்ஞை செய்து கொடுத்து அதை மாத்திரம் நிறைவேற்றாது விடவேமாட்டேன்; ரிஷிகள் தாம் என்னிடம் வந்து முறையிடாமற் போனலுங்கூட அவர்களை ஸம்ரக்ஷிப்பது எனது கடமை; பிரதிஜ்ஞையும் பண்ணிக் கொடுத்துவிட்ட பின்னர் இனி நான் தவறக்கூடுமோ!” என்று சரக்கற வார்த்தை சொல்லி அம்முனிவர்களைக் காத்தருளினவாறு கூறும் “அருமருந்தே!” என்னும் விளி.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும் பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார் என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன் வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கி வைத்துவிட்டாரோ என்னவோ. இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.
தன்னிகரில்லா தனிச் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்த தசரத சக்கரவர்த்திக்கு மகனாகப் பிறந்தவர் "ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி". இந்த அவதார நாயகன் பூமியில் நமக்காக அவதரித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார். சூரிய குல அரசர்களான மாந்நாதா, அரிச்சந்திரா, பகீரதன், திலீபன், ரகு ஆகியோர் வழி வந்தவரே தசரத சக்கரவர்த்தி. அவருக்கு மகனாகப் பிறந்து அசுரனான இராவணனை, வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக சிறப்பாக ஆட்சி புரிந்தார். அக்குலத்திற்கு "ரகு குலம்" என்ற பெயரும் உண்டு. ரகு குலத்தில் தோன்றிய அரசன் ஸ்ரீராமர் என்பதால், இத்தல இறைவன் "ரகு குல நாயகன்" என்ற திருநாமம் பெற்றார். அயோத்தி நகரம் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான நகரமாகும். ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தல மூர்த்திகள் தற்போது திருஅயோத்தியில் இல்லை. இந்தியாவின் மீது படையெடுத்த வேற்று சமய அரசர்களால் களவாடப்பட்டதாகத் தெரிகிறது. இராமபிரான் அவதாரம் செய்ததாகக் குறிப்பிடப்படும் இடம் தற்போது "ராம ஜென்ம பூமி" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது உள்ள இத்திருக்கோவில் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
சிறப்பு:
இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான். திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.
சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8 பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.
ஆழ்வார்களால் பாடப்பட்ட மூர்த்திகள் தற்போது இல்லையாயினும் அயோத்தி நகரத்தையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளதால் இங்குள்ள அனைத்து வைணவத் தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவே கொள்ளலாம். குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் 10 பாக்களில் பாடி ராமாயண காவியத்தையும் மங்களாசாசனம் செய்துவிட்டார்.
இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே. பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.
இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம் ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.
இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு ஏற்படுகிறது.
பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்) லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம் என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில் வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.
அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது. அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில் உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம். மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும். ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது. ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வருவோரனைவரும் இதில் நீராடுவர்.
அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத் தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின் சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும் போது இந்து மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.
சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/OYSXQOvaeb4
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/139273534539749/?sfnsn=wiwspmo&extid=shJrgB1hureOXboW
No comments:
Post a Comment