Saturday, September 26, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 4-திருவெள்ளறை

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 4 🌺🌺


அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோவில் :-

மூலவர்: புண்டரிகாட்சன்

தாயார்: செண்பகவல்லி, பங்கஜவல்லி

உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: விமலாக்ருதி விமானம்

தீர்த்தம்: திவ்ய தீர்த்தம், கந்த தீர்த்தம், சீர தீர்த்தம், குசகத்தி தீர்த்தம், சக்ர தீர்த்தம், பத்ம தீர்த்தம், வராக மணிகர்ணிகா தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.

மங்களாசாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ பங்கஜவல்லீ ஸமேத ஸ்ரீ புண்டரீகாஷாய நமஹ

ஊர்: திருவெள்ளறை

🌺🌺 தலவரலாறு :-

ஒருமுறை இந்தியாவின் தென்பகுதியில் திருமாலின் பக்தனான சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் இங்கு வந்த போது, ஒரு வெள்ளைப் பன்றி அவர்கள் முன் தோன்றி அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தது.

படைவீரர்களால் அந்த பன்றியைப் பிடிக்க முடியாமல் போகவே, சக்கரவர்த்தியே அதனைப் பிடிக்கச் சென்றார்.

பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் அந்த பன்றியைப் பிடிக்க மலையைச் சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாகத் தவம் செய்வதைப் பார்த்தார். அவரிடம் நடந்த விசயங்களைப் பற்றிக் கூறினார்.

அதற்கு முனிவர் தனது யோக தவத்தால் வராக (பன்றி) உருவத்தில் வந்தவர் திருமால் என்பதை அறிந்தார். பின்பு, இருவரும் இணைந்து இறைவனின் திருக்காட்சியைக் காண வேண்டி, நெடுநாள் தவம் செய்தனர்.

இவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய பெருமாள் திருமகள் தாயாரோடு காட்சி தந்து அருளினார்.

இங்கு ஒரு கோவில் அமைத்து அதைச் சுற்றியும் அக்ரகாரம் அமைத்து 108 வேத விற்பன்னர்களை குடியமர்த்துமாறு சொல்ல சிபிசக்கரவர்த்தியும் அவ்வாறே செய்தார்.

அதில் ஒரு வேத விற்பன்னர் இறந்து போக வராக மூர்த்தியே அதற்கு பதிலாக வந்தார் என புராணம் கூறுகிறது.

இதனால், இத்தல இறைவனுக்கு "புண்டரீகாட்சன்" என்பது திருநாமம். ஆதிதிருவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. திரு என்பது உயர்வைக் குறிக்கும். ஆதலால், திருவெள்ளறை என்றழைக்கப்படுகிறது.

🌺🌺 தலச்சிறப்புகள் :-

சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது அமைந்துள்ள திவ்யதேசம்.

ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் முதலியோர்கள் இங்கு மனித உருவில் வந்து பெருமாளுக்குப் பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது சிறப்பு.

இத்தலம் ஸ்ரீரங்கத்தை விட பழமையானது என்று சொல்லப்படுகிறது.திருமகள் தாயார் செண்பகவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருவிழா காலங்களில் செண்பகவல்லித் தாயார் பெருமாளுக்கு முன்பாகப் பல்லக்கில் எழுந்தருள்கிறார். மற்ற கோவில்கள் பெருமாள் முன் செல்ல தாயார் பின் தொடர்வார்.

🌺🌺 தலபெருமை :-

18 படிகளைக் கொண்ட மலை மீது அமைந்துள்ள திவ்யதேசம் இது. இவை கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கிறது. அடுத்து கோபுர வாயில் 4 படிகள் உள்ளன. இவை நான்கு வேதங்களைக் குறிக்கிறது. அதன்பின் பலிபீடத்தை வணங்கி 5படிகள் கடக்க வேண்டும். இது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது.

பிறகு சுவாமியைத் தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. அவை தட்சிணாயணம், உத்தராயணம்.

முதல்வழி தட்சிணாயணம். இது ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்.

இரண்டாவது வழி உத்தராயணம். இது தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.

🌺🌺பாசுரங்கள் :-

பெரியாழ்வார் - 11 பாசுரம், திருமங்கையாழ்வார் - 13 பாசுரம் பாடியுள்ள திருத்தலம்.

திருவெள்ளறை அழகன் (பெரியாழ்வார் பாசுரம் 192 - காப்பிடல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இந்திரனோடு பரமன் ஈசனிமையவ
ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு
மறைந்தவ ராய்வந்து நின்றார்.
சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள்
வெள்ளறை நின்றாய், அந்தியம்
போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்.


🌺🌺 வழித்தடம் :-

திருச்சி - துறையூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

அருள்மிகு புண்டரீகாட்சன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு செண்பகவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

நாளைய பதிவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், திருஅன்பில் திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ".

No comments:

Post a Comment