Saturday, September 26, 2020

108 திவ்ய தேசங்கள் - பதிவு 3, உத்தமர் கோவில்

 🌺🌺 108 திவ்ய தேசங்கள் - பதிவு 3 🌺🌺


🌺🌺 அருள்மிகு புருடோத்தமன் சுவாமி திருக்கோவில்:-

திருக்கரம்பனூர் (எ) உத்தமர் கோவில்:-

பிரம்மாண்ட புராணத்திலே இத்திருக்கோவில் பற்றி உள்ளது. விவ்ணுவைத் தொடர்ந்து பூஜிக்க எண்ணிய பிரம்மா இங்கே அவருடன் கோவில் கொண்டார். 

மூலவர்: புருடோத்தமன்

தாயார்: பூர்ணவல்லி, பூர்வாதேவி

கோலம்: சயனம்

திசை: கிழக்கு

விமானம்: உத்யோக விமானம்

தலவிருட்சம்: வாழைமரம்

தீர்த்தம்: கதம்ப தீர்த்தம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 1 பாசுரம் 

நாமாவளி: ஸ்ரீ பூர்வா தேவீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ

ஊர்: உத்தமர் கோவில்

தலவரலாறு :-

சிவபெருமானைப் போலவே பிரம்மாவும் ஐந்து தலைகளுடன் தோன்றியவர் ஆவார். 

ஒருமுறை பிரம்மாவின் ஒரு தலையை சிவபெருமான் கிள்ளி எடுத்தபோது, சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டு திருவோடாக மாறியது.

சிவபெருமான் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தைப் பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது.

எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவே இல்லை. பசியில் வாடிய சிவபெருமான், பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பல இடங்களுக்கும் சென்றார்.

இச்சமயத்தில் பெருமாள், மகாலட்சுமியிடம் ஒரு ஆலோசனை ஒன்று கூறினார். அதன்படி, திருமகளும் கபாலத்தில் பிச்சையிட்டவாறு பின்னோக்கிச் செல்ல கபாலமும் பின் தொடர்ந்தது. 

அப்போது சிவபெருமான் இரு கைகளையும் இறுக்கமாக மூடிக்கொள்ள கபாலம் உடைந்து சாபம் நீங்கியது. இச்சம்பவம் இத்தலத்தில் திகழ்ந்ததாக தலவரலாறு கூறுகிறது.

இதனால், சாபம் நீக்கி பூரணத்துவம் அளித்ததால் இத்தல இறைவி "பூரணவல்லி" என்ற திருநாமம் பெற்றாள். மேலும், மஹாவிஷ்ணுவும் சிவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.

இந்ததிருக்கோவிலில் சிவனும் பிச்சாடனராக எழுந்தருளி இருக்கிறார்.

இத்தலம் மும்மூர்த்திகள் தலமாகச் சிறப்பு பெற்று விளங்குகிறது.

சிறப்புகள்:-

முற்காலத்தில் இத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.

அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளார்கள்.

உத்தமர் என்று இறைவன் பெயர் பெற்று விளங்கும் திவ்யதேசம்.

மும்மூர்த்திகளும் காட்சி தந்து அருளும் திவ்யதேசம்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக விளங்கும் தலம்.

ஆண்டிற்கு ஒருமுறை திருவரங்கப் பெருமாள் இத்தல கதம்பத் தீர்த்தத்தில் எழுந்தருளும் சிறப்பிற்குரிய தலம்.

திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான சன்னிதிகள் கொண்டுள்ள திருத்தலம்.

வாழைமரத்தைத் தல விருட்சமாகக் கொண்டுள்ள திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.


ஏழு குருமார்கள் :-

1. பிரம்மகுரு - பிரம்மா
2. சக்தி குரு - சௌந்தர்ய நாயகி
3. சிவகுரு - தெட்சிணாமூர்த்தி
4. ஞானகுரு - சுப்பிரமணியர்
5. தேவகுரு - பிருகஸ்பதி
6. சுக்ரகுரு - சுக்ரன்
7. விஷ்ணு குரு - வரதராஜப் பெருமாள்

என்று ஏழு குருமார்கள் இத்தலத்தில் அருள்புரிகின்றனர். 

பிரம்மாவிற்குத் தனிச் சன்னிதி:-

தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து வந்ததாகவும், அந்த உருவத்திலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சன்னிதியில் அருள் புரியுமாறு செய்ததாகவும் கூறுவர்.

இந்தியாவிலே பிரம்மா - சரஸ்வதி தேவிக்கு தனிக்கோவிலோ, சன்னிதியோ மிகச் சில இடங்களிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடம்ப மரத்தில் பெருமாள் தோன்றி பிரம்மாவிற்கு காட்சி தந்ததால் இத்தலம் "திருக்கடம்பனூர்" என்று அழைக்கப்படுகிறது.

சன்னிதிகள் :-

இதே ஆலயத்தில் லட்சுமி - நாராயணர், வரதராஜப் பெருமாள், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர், சீதா - லட்சுமண - அனுமன் சமேத ராமர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கொழுவிருக்கின்றனர்.

திருமங்கையாழ்வாரால் "உத்தமர்" என்று அழைக்கப்பட்டதால், இத்திருக்கோவில் "உத்தமர் கோவில்" என்றே அழைக்கப்படுகிறது.


பாசுரங்கள் :-

பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை, திருத்தண்கால்
ஊரானைக் கடம்பனூர் 
உத்தமனை, முத்திலங்கு
காராண்திண் கடலேழு 
மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக் 
கண்டதென் னரங்கத்தே.

- திருமங்கையாழ்வார்


நீலகண்டப் பெருமானைப் பற்றிய பதிகம் :-

அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் இத்தல நீலகண்டனைப் பற்றிய பதிகங்களை இயற்றியுள்ளனர்.

திருஞான சம்பந்தர் - ஆரிடம்பாடி - 3 - 14

திருநாவுக்கரசர் - உடையர் - 5 - 41

சுந்தரர் - காருலாவிய - 7 - 36

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிச்சாடனர் நவமணிமாலையின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

இப்பாத் திரந்தலை கீழாப்
பிடித்தனை யென்னைமுனந்
தட்பாப் பலிகொண்
டறிந்திலை யோவெனத்
தாழ்குலாள்
செப்பார் பணைமுலை
யாய்நிலத் தேபலி
சிந்தியிட்டா
யெப்பாத் திரத்திலு மிட்டறி
யாய்கொண்முன்
னென்றனரே.
வேட்டன மாதுகை தாழ்த்திட
மாமுது வெற்பர்பலி
யோட்டினை நீதொட லாமோ
வெனவுமை யுந்தொடலாம்
வீட்டினில் யாவென வேயவர்
தாமிது வேண்டுவைகொல்
யாட்டினின் பாலென மூலமு
மாமென்ப தென்றனரே.

அருள்மிகு பிட்சாடனர் சுவாமி திருவடிகளே சரணம். 

அருள்மிகு புருடோத்தமன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு பூர்வாதேவி நாச்சியார் திருவடிகளே சரணம்.

நாளைய பதிவில் :-

நாளைய பதிவில் நான்காவது திவ்யதேசமான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோவிலைத் தரிசிப்போம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ".

No comments:

Post a Comment