Friday, November 5, 2021

மாமாக்களும் மாமிகளும்

 மாமாக்களும் மாமிகளும்:

"மனதில் எத்தனை வயசென்று நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வயசு" என்று ஒரு பொன்மொழி சொல்கிறார்கள். அபத்தமானது!

அதை நம்பி மாமாக்களும் மாமிகளும் மனசில் இளமை என சொல்லிக் கொண்டு ஜீன்ஸ் பாண்ட், ஸ்னீக்கர் அல்லது அரை டிராயருடன் தலையைத் தேன் கலரில் டை அடித்துக் கொண்டு கொட்டம் அடிக்கிறார்கள். சிலர் ஜாகிங் என்று சொல்லி  பயங்கரமாக வேகு வேகென்று பீச்சில் (உத்தரவாதமாக ஹார்ட் அட்டாக்கை நோக்கி) ஓடுகிறார்கள். எல்லோரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். சிலர் ஐம்பதுகளில். அறுபது வயதானதும் இதெல்லாம் அவ்வளவு முக்கியமானதல்ல என்கிற ஞானோதயம் பெரும்பாலானவருக்குப் பிறந்துவிடும். 

இந்த ஞானோதயம் முதன்முதலில் எப்போது பிறக்கிறது என்று யோசித்து பார்த்தால் இளமையிலேயே, இருபதுகள் போய் முப்பதுடன் சந்திக்கும் தருணத்திலேயே ஓசைப்படாமல் நமக்கு  இயற்கையால் அறிவிக்கப்படுகிறது. அதை நாம் அடையாளம் கண்டு கொள்வதில்லை. அது ஒன்றும் அத்தனை கடினம் இல்லை. வயதாக துவங்கிவிட்டது என்பதற்கு சில தெளிவான அங்க அடையாளங்கள் உண்டு. அவை இவை:

1. முதலில் வயிற்றில் ஆரம்பிக்கும். ஒரே ஒரு தோசையோ அல்லது ஒரு இட்லி வடையோ சாப்பிட்டு, ஒரு காப்பி மட்டும் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது.

2. காரோ, ஸ்கூட்டரோ ஓட்டும்போது எப்போதும் ஏற்படும் ஜாலி குறையும். கொஞ்சம் போர் அடிக்கிறார்போல தோன்றும். 

3. பத்து வயசு பையன்களோடு பேசும்போது அவர்களுக்கு ஶ்ரீகாந்த், வெங்சர்க்கார் போன்ற பெயர்கள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஆச்சர்யமாக இருக்கும்.

4. வீண் வம்புக்காக சண்டைக்கு போவதில் ஒரு த்ரில் இருந்ததே, அது திடீரென காணாமல் போய் விடும்.

5. உங்கள் க்ளாஸ்மெட் வீட்டுக்கு போனால் அதிர்ச்சி காத்திருக்கும். அவனுக்கு குழந்தை இருக்கும்.

6. ஞாயிற்றுக்கிழமை ஊர் சுற்றுவீர்களே, இப்போது சுற்றாமல் தூங்க வேண்டும் போல் இருக்கும். 

7. முன்பெல்லாம் அப்பா,அம்மா பேசுவதை நின்று கவனிக்கவே நேரம் இருக்காது. இப்போது உங்கள் பெற்றோர் பேசுவதில் கொஞ்சம் அர்த்தம் இருப்பது போலத் தோன்றும். 

8. நீங்கள் கண்ணில் நீர் வர உருகிய சில சினிமா பாட்டுகளைத் திரும்ப கேட்கும்போது அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை போலத் தோன்றும். சில சமயம் அபத்தமாகக்கூடத் தெரியும்.

9. நீங்கள் பைண்டு பண்ணி சேர்த்து வைத்திருந்த அந்த எழுத்தாளரின் தொடர்கதை, இப்போது படிக்கும்போது, 'இந்த கண்றாவியையா வாரா வாரம் கடையில் காத்திருந்து வாங்கினேன்' என்று தோன்றும்.

10. தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரம் முன்பிருந்தே அதைப் பற்றி ஒரு பரபரப்பு இருக்குமே, 'இப்போது அது எங்கே போச்சு?'

11. பனியன், அண்டர்வேர், பாடி, பாவாடை போன்ற உள்ளாடைகளைத் துவைக்காவிட்டால் என்ன? பழசையே போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றும்.

13. மத்தியானத் தூக்கம் சுகமாக இருக்கும்.

14. நிரோத் விளம்பரம் டிவியில் வரும்போது சங்கடமாக இருக்காது.

இந்த அடையாளங்கள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் நீங்கள் முப்பது.

'சுஜாதாட்ஸ்'

சுஜாதா.

No comments:

Post a Comment