Saturday, November 27, 2021

கருணையினால் தான்

 #. சிறுகதைகள்,


# (கஞ்சா நகாம் துங்கபாலா)

 கருணையினால்  தான்....#     

                    

"பீடுடைய  பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே"..

அப்பாவின் தலைமாட்டில்  சிறிய டேப் பாடிக்கொண்டு இருந்தது.

அவரின் சொந்தக் குரல் தான்.

மாதவி அப்பாவைப் பார்த்தாள்   அவர் கண்களின் ஓரத்திலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

மாதவி கண்ணிலிருந்தும் தான்.

இன்று சிவராத்திரி. அப்பா காதில்  விழட்டுமே ஒன்று தான் வைத்திருந்தாள்.

சீர்காழியில் ப்ரம்மபுரீஸ்வரர் சன்னதியில் ஓதுவார்களுடன் சேர்ந்து தேவாரம் திருவாசகம் எல்லாம்‌ பாடுவார்.

சிவராத்திரியன்று அவர்கள் கட்டளை.

பரிவட்டம் கட்டி மரியாதை செய்வார்கள்.

 மூன்று நிலைகளில் சிவலிங்க,  சோமாஸ்கந்த பைரவ ரூபமான மூர்த்திகள்   ஆர்ப்பாட்டமான அபிஷேக ஆராதனைகள்.,..

அவளை வா என்று  அவர் கண்கள் அழைத்தன.  

அருகே போய் கண்களைத் துடைத்தாள். வாயிலிருந்து வழிந்த எச்சிலையும் துடைத்தாள்.  

அப்பா உதடுகள்  ஏதோ கோணலாய் அசைந்தன. புரியவில்லை. 

கண்களில் கோபம். தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று.

பாட்டு  வேண்டாமோ... அணைத்தாள்.

ஸ்பூனால் கஞ்சி கொடுத்தாள். இரண்டு மிடக்கு தான்.  உதடுகள்  இறுக மூடிக் கொண்டன..

பின் மருந்து கொடுத்து, போர்த்தி விட  ஆயாசத்தில் கண் மூட...

"  மாதவி..   சோறு டிபன் எதாவது உண்டா இல்லையா?

நடேசன் கத்தினான்

"இதோ வந்துட்டேங்க.."

பறந்து ஓடினாள். 

என்ன  கிழவனுக்கு சீவி சிங்காரம் பண்ணிட்டையா? 

அவனுக்கு சாவே வரா்தா?

"என்னங்க..... பக்கவாதம் வந்து படுத்திருக்காரு.. .

அவரப் போயி.. நான் பாத்துக்காம யார் பாத்துக்குவாங்க.."

"ஏன் ஒன் தம்பி  தொர பாத்துக்க மாட்டாங்களோ...

அமெரிக்காவில் பொண்டாட்டியோட  ஜாலியா இருப்பாங்களோ..?

கோபம் வந்தால் நாக்கில் நரம்பில் லாமல் பேசுவான்

"அவன்  க்ரீன் கார்ட்  கெடச்ச உடனே கூட்டிட்டுப் போகாமயா இருக்கப் போறான்?"

நெனச்சுக்கிட்டே இரு. ஏன் பாத்துப்பான்? 

 இங்க தான் நா ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டிருக் கேனே..."

"வீட்டுல பொழங்க எடமில்ல...... ஒரே நாத்தம்....."

வாய் பேசாமல் இட்லி எடுத்து வைத்தாள்

சட்னி  அரைக்கலியா?..

............

இளவரசிக்கு.  மகாராஜாவைக் கவனிக்கவே நேரம் பத்தல...

தட்டை வீசி எறிந்தான்.   கடைக்கிப் போய் எதாவது தின்னுக்கிறேன்..

நீ  ஒங்கப்னுக்கு கழுவி விட்டு. குளுப்பாட்டி சீராட்டி விடு....

 அந்த சனியம்புடிச்ச கிழவன் ஒழிஞ்சாத் தான் நிம்மதி.

 இல்லன்னா நானே அவன் கழுத்த‌நெரிச்சு கொன்னுடறேன்"

ஸ்கூட்டரை உதைத்துக் போய் விட்டான்...

தினமுமே சண்டை ரகளை. ஒரு வருடமாய்..

எப்பேர்ப் பட்ட அப்பா? இப்படி  'சீ' படுகிறாரே....

ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.

 நீலக் கடலலைகள்  ஒன்றை ஒன்று துரத்தி, தரையைத்   தொட்டு, பின் திரும்பி ஓடிப பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. 

ஒன்றிரண்டு பறவைகள் நீரைத்  தொட்டுப் பின்  ஜிவ்வென்று உயரப் பறந்து கும்மாளமிட்டன.

காலை நேரம் முடிந்து விட்டதால். பீச்சில் கலகலப்பில்லை.

இந்த  திருவான்மியூரில் வீட்டை வாங்கிக் கொடுத்ததே அப்பாதான்.

இங்க சட்ட நாதனப் பாக்குறேன்

 ஒன் வீட்டுக்கு வந்தா மருந்தீசனப் பாக்கலாம் இல்ல மாதவிம்மா..

அப்பா பேரும் சட்டநாதன் தான்.

நஞ்ச, புஞ்ச மாந்தோப்பு,  தென்ன,  புளின்னு சீர்காழி ல  

செல்வாக்காத்தான் இருந்தார்..

 டெல்ட்டா பகுதியில் கொள்ளிடப்  பாசனம்.  பச்சை ‌பசேர் வயல்கள்,

அம்மா தையல்நாயகியிடம்  மிக்க அன்பு.

 திரிபுவனத்திலிருந்து  ப்ரத்தியேகத் தறியில் எட்டு கஜ கண்டாங்கி   சேவை எடுத்து வருவார்..

"ஒங்க அம்மா அந்த தயினாயி மாதிரியே  பெரிய பொட்டு வச்சு  மினுக்குறா  பாரு..".

பத்மினி காரில்‌  மாதவி,  மகேந்திரன் அம்மாவுடன்  சிதம்பரம் என்ன.. வைத்தீஸ்வரன் கோயில் என்ன.. பூம்புகார் என்ன,  திரு முல்லை வாசல் என்ன... திரு  நாங்கூர் திவ்ய‌தேசங்கன் என்ன.... ஊர் சுற்றல் தான்.

அப்பாவிற்கு ஒரு குறை உண்டு.

" நம்ம சீர்காழி கோவில் எத்தனை பெரிசு?  பழசு?   ஹை  வே ல தான்  இருக்கு   மத்த ஊர் மாதிரி சனங்க பாக்க வரதில்ல. தாண்டிப் போயிட்றாங்க..''

 ஊழிப் பிரளயத்தில் 64  கலைகளையும் ஒரு  தோணியில் போட்டுக் காப்பாத்தினவன் இந்த தோணியப்பன்.

இங்க  தான் பிரம்மா சிவனை வணங்கி  இது பிரமாபுரமானது.

சிவன் விஷ்ணு, ப்ரும்மா  மூணு சக்தியும் சேர்ந்த தெய்வம். 

மகேந்திரனும் மாதவியும் வாயைப் பிளப்பர்..

 ஞான சம்பந்தருக்கு  திருநிலை நாயகி,    ஞானப்பால் புகட்டிய ஊருப்பா இது...

பிள்ளைகளுக்கு புராணம் சரித்திரம் எல்லாம் காரிலேயே..

மாதவிக்கு எம் பி ஏ மாப்பிள்ளை. சென்னையில்  வேளச்சேரியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்திருக்கிறான்

மகேந்திரன்  அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி. டெக். ஸ்டான்ஃபோர்டில் எம் எஸ்.  ‌ ஆப்பிளில் வேலை.

க்யூப்பர்டினோவில் வீடு.  மனைவி. எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

அம்மாக்கு  திடீரென்று  மார் வலி வந்து பை பாஸ்  செய்து  கிட்னி வேலை. செய்யாமல்  இறந்து போனாள். 

அப்பா ஊரில் பாதி நாள். பெண், பிள்ளையுடன்  பாதி நாள்...

சென்ற வருடம் ஸ்ட்ரோக் வந்து,....

மகேந்திரன் வேலையை விடறேன்னுதான் சொல்றான்.

இங்கு வந்து என்ன செய்வான்? அவன் குடும்பம்?.

அப்பா செலவுக்காகவே அவன் சம்பாதிக்கணும்.

அப்பா பணமெல்லாம் அவளுக்கு வீடு, அவன் படிப்பு அம்மா ஆபரேஷன் என்றே கரைஞ்சு போச்சு..

தன் பொறுப்பில் வைத்துக் கொண்டால் முசுட்டுக்  கணவன் அப்பாவைக் கரிச்சுக் கொட்றான்.

ஈசா.. அப்பா ஈனப்படக் கூடாது இழி சொல் கேட்கக் கூடாது..

வழிகாட்டுப்பா சட்டநாதா..

"இன்னிக்கு தானே ஊழிப் பிரளயத்திலிருந்து மனித குலத்தைக் காப்பாத்தின.. எங்க அப்பாவையும் கரையேத்திடு.."

டிவியில்  ஈஷா ஃபவுண்டேஷன் சிவராத்திரி விழா கோலாகலம்.

 ஆலகாலம் உண்டான்
 அடி முடி காண முடியாத ஜோதிப் பிழம்பானான்
பார்த்தவனுக்கு பாசுபாஸ்திரம்..  
வேடனுக்கு மோட்சம். 

 கதைகள்... சொற்பொழிவுகள்...

இரவு வந்தது.

அப்பாவிற்கு மாத்திரை தேனில் பொடி பண்ணிக் கொடுத்தாள். ஸ்பூனில் பால்  கொடுத்து முகத்தை பளிச்சென்று துடைத்து விபூதி இட்டாள்

 தம்பிக்கு வீடியோ கால்.  அவன் அப்பாவுடன் பேசினான்   அஜீத்தைக் காட்டினான்

அப்பா வழக்கம் போல் கண்ணீர். வாய் கை ஒன்றும் செயலில்லை.

முகத்தோடு  முகம் வைத்து 'குட் நைட் பா ' சொல்லிவிட்டு   சோஃபாவில் அமர்ந்தவாறே உறங்கிப் போனாள்.

காலையில் பெண் ‌ மஞ்சு எழுப்பினாள்.

'அம்மா  தாத்தா போயிட்டாருன்னு  சொல்றாங்கம்மா..

  அப்பா அருகே போய்  " ந்ங்க ஜோதில கலந்துட்டீங்கப்பா.

இனி உங்களுக்குத் துன்பமில்லை சோகமில்லை இழிவில்லை அப்பா.

நான் உங்களுக்கு முக்தி குடுத்துட்டேன்.

மஹி  என்ன‌ மன்னிச்சுட்றா 

 அப்பாவின் வேதனை அவர் படும் அவமானம் தாங்காமல் தான்....

கருணையினால் தான்.....

காலையில் போலீஸ்  ஸ்டேஷன் போய் ஸரண்டர் ஆயிடலாம்.

கையிலுள்ள காலி தூக்க மாத்திரை  பாட்டிலை குப்பைக் கூடையில் போட்டாள்..

"அப்பா" என்று நெஞ்சு வெடிக்க அழ ஆரம்பித்தாள்.

அப்பா டேப்பில் இருந்து " தோடுடைய செவியன்"  பாடிக் கொண்டிருந்தார்.

என்னுரை:

Euthanasia   சட்டப்படி குற்றம்.    சில குறிப்பிட்ட கேஸ்களில். தவிக்கும் உயிர்களுக்கு சட்டம் அனுமதிக்கலாம் என்று சில நாடுகள் வாதாடுகின்றன.

No comments:

Post a Comment