ஏன் எதற்கு எப்படி?
கலங்கரை விளக்கம் கப்பலுக்கு எப்படி உதவுகிறது?
சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய கலங்கரை விளக்கத்தைப் பார்த்திருக்கலாம். விரைவில் அங்கே கடற்பயண வரலாறு பற்றிய அருங்காட்சியகம் ஒன்று அமையப்போகிறது. இரவு நேரத்தில் அந்தக் கலங்கரை விளக்கம் கடலை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். எதற்கு இந்தக் கலங்கரை விளக்கம்? இது எதற்குப் பயன்படுகிறது?
துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு, கரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? கடற்கரைக்கு அருகில் ஆபத்தை விளைவிக்கும் பாறைகள் மணல் மேடுகள்போன்றவை எதுவும் இருக்கின்றனவா? என்பதுபோன்ற விவரங்களை முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதற்காகவே வெகுகாலமாக கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இல்லையென்றால் பிரம்மாண்டமான கப்பல்கள் தரைதட்டி நின்றுவிடும் ஆபத்து உள்ளது. பிறகு அவற்றைச் சீரமைத்து மீண்டும் கடலுக்குள் செலுத்துவது மிகப் பெரிய பிரச்னையாகிவிடும்.
நிலப் பகுதியிலிருந்து கப்பல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை மாலுமிகளுக்கு உணர்த்தவே கலங்கரை விளக்கம் உதவுகிறது. இந்தக் கலங்கரை விளக்கங்களிலிருந்து பாய்ச்சப்படும் ஒளி மிகப் பிரகாசமானது. கடலில் பயணம் செய்யும் மாலுமிகளால் இந்த ஒளியைப் பார்க்க முடியும். கலங்கரை விளக்கங்களில் ஒளியை உண்டாக்க மான்ட்டில் விளக்கோ (பெட்ரோமாக்ஸ் விளக்கில் பயன்படுத்தப்படுவது), அசிட்டிலின் வாயு நிரப்பப்பட்ட மின் இழை விளக்குகளோ பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment