#உறவுபோட்டமுடிச்சு
உறவுபோட்டமுடிச்சு_25
திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு இரண்டு பெரிய வெயிட்டான பைகளோடு மாமா வாத்தில் நுழைகிறாள் கீதா.
மாமா வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்.
'இத்தன மணிக்கு வரேன்னு அன்னிக்கே சொல்லியிருந்தா பாலத்தடிக்கு வில்லு வண்டி அனுப்பிச்சிருப்பேனோன்னோ? சின்ன பொண்ணு இவ்வளவு பாரத்த தூக்கிண்டு வந்தா இடுப்பெல்லாம் வலிக்காதா?'
'பரவாயில்ல மாமா. பாதி தூரம் யாரோ என் கையிலேந்து ஒரு பையை வாங்கிண்டு தூக்கிண்டு வந்தா. அக்ரஹாரம் வரைக்கும் அவர்தான் கொண்டு விட்டார்.'
'சரி, சரி. உள்ள வெச்சுட்டு இங்க வா. காப்பியெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.'
'பரவாயில்ல சபேஸா. பாப்பா மெள்ளவே வரட்டும். நான் வெயிட் பண்றேன். பாப்பா, மாமா கிடக்கார். நீ பொறுமையா வாம்மா.'
மாமாவோடு பேசிக் கொண்டிருந்தவர் இப்படி சொன்ன போதே புரிந்து கொள்கிறாள். இந்த மனிதரிடம் அறிமுகத்தை தாண்டி ஏதோ இருக்கிறது என்று.
உள்ளே சென்று கொண்டு வந்த பைகளை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வாசலுக்கு வருகிறாள்.
'மாமா, பாலாஜி தூங்கிண்டிருக்கான். பார்த்தேன். மாமி இல்ல?'
'கொல்லப் பக்கம் போயிருக்காளோ என்னவோ? அது இருக்கட்டும். இவர் என் பால்ய ஸ்நேகிதர். பேரு சடகோபன். முதலியார்னு மரியாதையா தான் பூவனூர் ஜனங்க கூப்பிடுவா.'
'நமஸ்காரம் சார்.'
'உன்ன எனக்கு நல்லா தெரியும்மா சின்ன புள்ளே லேந்தே. சபேஸன், நான், உங்க அப்பா மூணு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டா பேட்மிண்டன் தான் விளையாடுவோம். ரெங்கன் மாதிரி ஒரு மாப்பிள்ள பூவனூர்ல இருந்ததுக்கே இந்த ஊர் புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒரு பச்சக் கொழந்தைய பார்த்தாலும் விட மாட்டான். மேல தூக்கி தூக்கி போட்டு சிரிக்க வைப்பான். மூக்கு சளியோட எந்த புள்ள இருந்தாலும் புது வேட்டின்னு கூட பார்க்காம தொடச்சு விடுவான். நீயும் கொடுத்து வைக்கல இந்த ஊரும் கொடுத்து வைக்கல. வாரம் தவறாம உன்னையும் சீதாவையும் கூட்டிகிட்டு வருவான். ஒவ்வொரு சனிக்கிழமை சாயந்திரம் அவன் வருவான்னு மன்னார்குடி பஸ்ஸுக்காக நாங்கள்லாம் பாலத்தடில கூட வெயிட் பண்ணுவோம்.'
'வந்ததும் வராததுமா என் மருமாள ஏண்டா அழ வைக்கற. வந்த வேலைய பார்ப்போம்.'
'பரவாயில்ல மாமா. என்னமோ அவருக்கு அப்பா ஞாபகம் வந்துருக்கும்.'
'சரி கீதா. நான் ட்ரீட்மெண்ட்டுல இருக்கும்போது சாகுபடி சம்மந்தமா உனக்கு சொல்லிக் கொடுக்க சடகோபன கேட்டுண்டு இருக்கேன். அவன் அவன் நிலத்துக்கு நெல்லு விதை வாங்கும் போது நம்ம நிலத்துக்கும் வாங்கிண்டு வந்துடுவான். இன்னிக்கும் நாளைக்கும் நானும் முடிஞ்ச வரைக்கும் சொல்லித் தரேன். நல்ல நாளா பார்த்து சிவலிங்கத்த விட்டு பூஜை போட்டுட்டு ஆரம்பி. ஒரு அனுபவத்துக்கு தான் உனக்கு இந்த வேலைய தரேன். உனக்கும் இங்க மாமியையே பார்த்துண்டு இருந்தா போர் அடிக்கும் இல்லையா?'
'கீதாம்மா.. சபேசன விட நல்ல விளச்சல உன்னால கொடுக்க முடியும். எங்க ஊர்லயே முதல் பொண் மிராசுங்கற அந்தஸ்து உனக்கு கிடைக்கப் போறது. எங்களுக்கு திருவையாறுல கொஞ்சம் நிலம் இருக்கு. அதனால நான் அங்குட்டும் இங்குட்டுமா இருப்பேன். அதுக்காக கவலப் படாத. நான் இங்க இருக்கும் போதெல்லாம் எல்லாத்தையும் சொல்லித் தரேன். நீ ரொம்ப கெட்டிக்காரின்னு சபேசன் சொன்னான். அடுத்த சாகுபடிம் போது என் நிலத்தையும் நீயே பார்த்துப்ப பாரு.'
'சரி சார். எனக்கு விலசாயத்துல ஒரு அனுபவமும் கிடையாது. நீங்கள்லாம் தான் இருக்கேளே. நீங்க என்ன சொல்றேளோ அத கேட்டு அது படி செய்யப்போறேன்.'
'அப்பா சபேஸா. தைரியத்துலேயும் அடக்கத்துலேயும் அப்படியே ரங்கன் தாண்டா உன் மருமா. சரி சபேஸா, நான் கிளம்பறேன். நீ ஒன்னோட உடம்ப மாத்திரம் நெனச்சு கவலப்படு. பூவனூர் கவலைகள் எதுவும் உனக்கு வரக்கூடாது என்ன? நானும் திருவையாறு வரும் போதெல்லாம் உன்ன வந்து பார்க்கறேன். உன் நல்ல மனசுக்கு தொத்து கித்தெல்லாம் துண்ட காணும் துணிய காணும்னு ஓடிடும். ஜம்முனு பூவனூர் திரும்பி வருவ.'
'நல்லா சொல்லுங்கோ சார். உங்க மாதிரி ஃப்ரெண்ட்ஸ் தான் மாமாவுக்கு நேருக்கு நேர் பேசி தெம்பு கொடுக்க முடியும்.'
'கீதா பொண்ணு. நான் இன்னிக்கு திருவய்யாறு போயிட்டு வெள்ளி கிழமை வரேன். அன்னிக்கு சாகுபடி பத்தி பேசுவோம். நீ களத்துல எறங்கி முதல் கலப்பைய பிடிக்கறத இந்த மாமா பார்த்து உங்க மாமா கிட்ட செங்கிப் பட்டியில போய் சொல்லுவேன்.'
சிறுவயதில் கீதாவைப் பார்த்திருந்தாலும் பெரிய பேச்சுக்கள் இன்று தான் சடகோபனுடன் ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் ஊர் பெரிய மனிதர் தன்னை உரிமையுடன் கீதாவின் இன்னொடு மாமா என்றதில் கீதா நெகிழ்ந்தே போனாள்.
'சடகோபா, முதல்ல கிளம்பு இங்கேந்து. இப்பத்தான் மருமா வந்திருக்கா. அசதியா இருக்கும்.'
சிரித்துக் கொண்டே முதலியார் 'வரேம்மா. வெள்ளிக் கிழமை நானே வந்து பார்க்கறேன்.'
'சரி மாமா' என்று கீதா சடகோபனிடம் சொல்ல இருவருமே பெரிதாக சிரித்து விட்டார்கள்.
'பார்ரா சபேசா. ரங்கனே எட்டடி பாய்வான். இது நூறடி பாயும் போல இருக்கே.'
இப்படிச் சொல்லி விட்டு சடகோப முதலியார் கிளம்பியவுடன் ஒரு சிறு அமைதி திண்ணையில்.
'கீதா நீ போய் மாமியோடையும் பாலாஜியோடயும் பேசிண்டு வா. மாமா இந்த அக்ரஹாரத் தெருவில மொள்ளமா ஒரு நடை நடந்துட்டு வரேன். அம்மா செளக்யம் தானே? என் உடம்ப பத்தி பக்குவமா அவ கவலப் படாம அவளுக்கு புரிய வெச்சியோண்ணோ?'
'வருத்தப்பட்டா ரொம்ப. என்னோடையே வரேன்னா. நான் தான் சமாதானப் படுத்தி மன்னார்குடியிலேயே இருக்க சொல்லியிருக்கேன்.'
'சரி கீதா. பதினோறு மணிக்கு சிவலிங்கம் வருவான். அதுக்குள்ள டிஃபன் கிஃபன் சாப்டு ரெடியாகு.'
மாமா கைத்தடியை எடுத்துக் கொண்டு இரண்டு நிலைப் படிகளில் குனிந்து உள்ளே 'மா ஆஆஆஆ மி' என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைகிறாள்.
ஹாலில் அப்போதுதான் எழுந்து சுருட்டப் படாத பாயில் உட்கார்ந்திருக்கிறான் பாலாஜி. கிட்டத்தட்ட கீதா முகத்தில் எழுந்த ஃபீல் அவனுக்கு.
'கனவில்லையே?' இப்படி நினைத்த படியே நிஜத்திற்குள் வந்தான்.
'வா கீதா. இப்பத்தான் வந்தியா?'
'ஏய் தூங்கு மூஞ்சி. அப்பவே வந்துட்டேன். மாமாவோட ஒரு குட்டி மீட்டிங் கூட போட்டாச்சு.'
'அவசரமா எழுந்து பாயை தலையணை மற்றும் போர்வையோடு சுருட்டி டேபிள் மேல் வைத்து விட்டு முற்றத்தை நோக்கி நகர்கிறான்.
'அவனா கண்டு பிடிக்கிறானான்னு பார்ப்போம் என் கையில் இருக்கிற மருதாணி கலரை.'
இரு கைகளையும் வாய்க்கு முன் கூப்பி ஒரு முத்தம்.
'வா கீதா. சீதா வந்திருக்காளா?'
'இல்ல மாமி. நான்தான் வந்தேன். வரேன்னு தான் சொன்னா. நான்தான் வேணாண்ணு சொல்லிட்டேன்.'
'எப்படி ஒத்துண்டா. அண்ணான்னா அவளுக்கு உசுராச்சே!'
'ஓன்னு பெரிசா அழதா. சரிப்பட மாட்டா இங்க வந்தான்னு கூடவே கூடாதுன்னு பிடிவாதமா செல்லிட்டேன்.'
'அவ வந்திருந்தா எனக்கு கொஞ்சம் தெம்பாயிருந்திருக்கும்.'
'இருந்தாலும் உங்களுக்கு கீதாவ விட சீதாவைத்தான் பிடிக்கறது.'
'அப்படி இல்லேடி அது. பெரியவாளுக்கு பெரியவா ஆறுதல் சொன்னா அது ஒரு மாதிரி.'
'எதுக்கு ஆறுதல்? மாமாக்கு ஒண்ணும் இல்ல. கல்யாணி அம்மன் அவருக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுக்கணும்னு ஏதோ ஒண்ண கொடுத்திருக்கா அவ்வளவு தான்.'
'உன் கிட்ட பேசி யாராவது ஜெயிக்க முடியுமோ? அப்படியே உங்க அப்பன் ரங்கன உறிச்சு வெச்சிருக்க நீ. பாலாஜியும் வந்துடட்டும். ஒண்ணா காப்பி கலக்கறேன்.'
தொடரும்.....
No comments:
Post a Comment