உறவுபோட்டமுடிச்சு_35
சந்தானம் மூலமாக கிடைக்கப் பெற்ற டாக்டர்களின் நம்பிக்கை வார்த்தைகள் கீதாவையும் ஞானத்தையும் சற்று பலப்படுத்தின.
'மாமி, நாளண்ணிக்கு முதலியார் வந்துடுவார். அவர் கிட்ட பேசிட்டு சாகுபடி பூஜை போட ஏற்பாடு பண்ணனும். நான் கொஞ்சம் அதுல பிஸியா இருப்பேன் மாமி.'
'இதெல்லாம் வேண்டாத வேலை. நீயோ சின்ன பொண்ணு. உன் தலைலே அதையெல்லாம் சுமத்திட்டு போகணுமா மாமா? அடிக்கற வெயில் வீண் போகாம , மொத்த வெயிலும் உன் தலையில விழணுமாக்கும். சாகுபடி முடியாதுக்குள்ள கருத்த குட்டியா மாறப்போற. இதெல்லாம் தேவையா உனக்கு?'
'எடுத்து தான் பார்க்கறேனே. எப்படியும் மாமா ஒரு மாசத்துல டிஸ்சார்ஜ் ஆகி வரப்போறார். வந்தோண்ண அவர் கையில திரும்ப ஒப்படச்சுட்டு நான் மன்னார்குடி போயிடுவேனாக்கும்.'
'உனக்கென்ன பைத்தியமா? மாமா வந்தோண்ண எப்படி அவர் கழனி பக்கம் போக முடியும் சொல்லு. எப்பேற்பட்ட கண்டத்துலேந்து தப்பிச்சு மாமா வரப்போறா? ஒரு மாசத்துல வந்தாலும் ஒடம்பு தேற ஒரு வருஷம் ஆகும். அதனால இன்னும் ஏழெட்டு மாசம் நீ இங்கதான் இருக்கணும். நான் பார்த்துக்கறேன் நான் பார்த்துக்கறேன்னு மார் தட்டிண்டியே. இனிமே நீ ஆச்சு மாமாவாச்சு.'
'ஆறுமாசமா ஆகும் மாமி அறுவடைக்கு?'
'ஆடியல வித விதச்சா கார்த்திகையில கள எடுத்து ஐப்பசில கதிர் வரணும். அப்புறம் அது தலை சாஞ்சு நெல் எடுக்க தை ஆயிடும். நீயே கணக்கு பண்ணிப் பாரு. ஒரு மாசம் கூடவே ஆகலாம்.'
'அப்ப என்னோட ஸ்கூல் உத்யோகம்?'
'இப்ப கேளு எல்லா கேள்வியும். அதுவும் என் கிட்ட. மாமா கிட்ட நான் அவ கொழந்தையாச்சேன்னான்னு உனக்கு பரிஞ்சு பேச வந்தேனேண்ணோ? அப்ப என்ன வாயில கொழுக்கட்டையா வெச்சிருந்த. மாமா உன் தலைல ஐஸ வெச்சு பொறுப்ப கொடுத்துட்டா. நீயும் கருப்பன் மாதிரி மண்டைய மண்டைய ஆட்டிட்ட. இப்ப படு அவஸ்தைய'
மாமியிடம் விளையாட்டாக இப்படி பேசிக் கொண்டிருந்தாளே தவிர கீதாவும் சபேஸய்யரும் இது பற்றி பேசும் போதே எல்லா விஷயங்களும் பேசப்பட்டன.
கீதா விவசயத்துக்கு சம்மதித்ததற்கு முதல் காரணம் மாமாவிற்கு இக்கட்டான சூழலில் பக்கத்தில் இருந்து அவர் எதிர்பார்க்கும் உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். மற்றொன்று அவள் மனதில் ஏற்கனவே இருந்திருந்த ஆர்வம்.
'முதல் ஸ்டேஜ் பூஜை முடிஞ்சோண்ண நிலத்த பதப்படுத்தணும். அதான்.... நிலத்து மண்ண ஆட்கள விட்டு கலப்பைய வெச்சு நன்னா பிரட்டி விடணும். இப்பவே மத்தது எல்லாத்தையும் போட்டு கொழப்பிக்க வேண்டாம்.'
மாமா சொன்ன குறிப்புகளை எல்லாம் மீண்டும் பார்த்துக் கொள்கிறாள். 'குழி' ன்னா என்ன அளவு? 'மா' ன்னா என்ன? வேலின்னா என்ன அளவு? மாமா கிட்ட பத்து வேலி கிட்ட தட்ட. வேலியை எப்படி பிரிச்சிருக்கார் மாமா ? மேற்கால எவ்வளவு? கிழக்கால எவ்வளவு?
'ஷப்பாடியோ!!'
மலைத்தே பேனாள். மாமா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் ட்ராயிங் அவளுக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது. எவ்வளவு வேலையாட்களை இறக்கணும் நிலத்தை சீராக்க? எத்தனை ரவுண்டுகள்? இயற்கை உரத்தை பரப்பி எத்தனை முறை? கிட்டத்தட்ட ஒரு பரிட்சைக்கு செல்வதைப்போல எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறாள்.
சொன்னபடியே சடகோப முதலியாரும் டாண் என்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டார்.
'உள்ள வாங்கோ சார், சாரி, மாமா?'
'வேண்டாம்மா. காத்தோட்டமா திண்ணையிலேயே உட்காரலாம். நோட்டு பேப்பர் பென்ஸில் உங்க மாமாவோட டெஸ்க் எடுத்து விட்டு வா. கொஞ்ச நாழில திட்டம் போட்டு கொடுத்துடறேன்.'
'நானே கொஞ்சம் கணக்கெல்லாம் போட்டுருக்கேன். அத வெச்சிண்டே சொல்லிக் கொடுங்கோ.'
அதைப் பார்த்த முதலியார் அசந்து விட்டார்.
'பிரமாதமா கணக்கு போட்டிருக்கியே. ஒரே ஒரு பிழைதான். மனசுல இத்தனை நாளாகும்னு நெனச்சு போட்டுருக்கே. ஓரளவு சரிதான். ஆனா மூணு நாள் முன்னாடியே முடிக்கற மாதிரி வேலை வாங்கணும். ஒன்னோட பச்சாதாபம் எல்லாம் அவங்களுக்கு கூலி தவிர படி அளக்கும் போது காட்டணும். அடிக்கடி அவங்க சோர்ந்து போனா ஊக்கம் கொடுத்து வேல வாங்கணும். பொம்பள தானேன்னு ஒன்ன தப்பா எட போட்டுட கூடாது. அப்படி விரட்டி விரட்டி வேல வாங்கணும்.'
'அன்பா சொன்னா கேட்க மாட்டாங்களா?'
'கேட்பாங்க. ஆனாலும் உன்னோட பச்சாதாபத்த இனிச்சவாயத்தனமா அவங்க நெனச்சுட கூடாத அளவுக்கு தான் ஒன்னோட கருணை எல்லாம். அவங்கள்லாம் படிக்கலையே தவிர ரொம்ப புத்திசாலிங்க. சில சமயம் அவங்க கிட்டேயே விஷயங்கள வாங்கி அவங்களயே அதுல வேல பார்க்க வைக்கணும். நல்லா வேல பார்க்கறாவுளா அத மனசுல வெச்சிகிட்டு அறுவடை முடிஞ்சு அவங்கள தனியா கலனிச்சுட்டா போச்சு, என்ன நான் சொல்றது?'
'சாரி மாமா. நீங்க என்ன சாப்டறீங்கன்னு கேட்க கூட மறந்துட்டேன்.'
'சரி. இங்க வந்தா அண்ணி கையால ஒரு வா காப்பிய சாப்டாம போக மாட்டேன். இப்ப எங்க ஊர் சின்ன பட்டாமணியார் கையால ஒரு காப்பி சாப்ட்டு போறேன்.'
'சின்ன பட்டாமணியார்' முதலில் புரியவில்லை. தன்னைத் தான் சொல்கிறார் என்று தெரிந்து, 'மாமா, இப்படியெல்லாம் நீங்க பேசக் கூடாது. அதுவும் எங்க மாமாவுக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல.'
'சரிம்மா. வாய் தவறி விளையாட்டா வந்துட்டுது. உன் அப்பா கூட இப்படித்தான் தனக்கு பிடிக்கலைனா மொகத்துக்கு நேரா பளிச்சுனு சொல்லிடுவான். சொல்லிட்டு எப்போதும் போல பழகுவான். மனசுல கர்ரம் கட்றதெல்லாம் அவன் கிட்ட கிடையாது.'
உள்ளே சென்று காபியோடு வருகிறாள்.
'கீதா, சந்தானம் தம்பி எல்லாத்தையும் சொல்லிச்சா? மாமா நல்லாயிடுவார் மா. பாலாஜிய பத்தியும் கவலப்படாத. எங்க சொந்தகார பசங்கள்லாம் அங்குட்டுதான் இருக்காக. நானும் திருவய்யாறு போகும் போதெல்லாம் போய் பார்த்துக்கறேன். சபேசன் மனசுக்கு ஒரு கொறையும் வராது. அண்ணிக்கு மாத்திரம் தகிரியம் சொல்லிகிட்டு இரு.'
'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.'
'உன் கல்யாணத்துல முதல் பந்தியில உட்கார வெச்சு கல்யாண பொண்ணு உன் கையால பாயாஸத்த கையில ஊத்திகிட்டே இருக்கணும் நான் போதும் போதும்னு சொல்ற வரைக்கும். அதுதான் நன்றி.'
'அதுக்கு எதுக்கு கல்யாணம் வரைக்கும் காத்திருக்கணும். நாளைக்கே வாங்க.'
'தெனம் சாப்டறது தான் எப்ப வேணா நடத்திக்கலாமே. கல்யாணத்துல இந்த சின்ன மாமாக்கு சாப்பாடு போடற மாதிரி ஆகுமா? எனக்கு ஒரு ஆசை மா உன் கிட்ட சொல்லணும்னு. ஆனா இந்த படவா ராஸ்கோலு சபேசன் வாய கட்டி போட்டுட்டான்.'
கீதாவுக்கு சட்டென்று புரிந்து விட்டது இவர் என்ன கேட்டிருப்பார் மாமா எப்படி இவரை அடக்கியிருப்பார் என்று. இவளையும் அல்லவா கட்டிப் போட்டிருக்கிறார் சபேஸய்யர்?
'காப்பி பிரமாதம். அண்ணி போடறத விட ஜோரு. சரி கீதா, அண்ணிய கூப்பிடு. ஒரு வார்த்த பேசிட்டு கிளம்பறேன். அடுத்த வெள்ளிக் கிழம தான பூஜை. நான் வந்துடறேன் சம்சாரத்தோட.'
'நானும் வீட்டுக்கு வந்து கூப்படறேன் எல்லாரையும்.'
உள்ளே சென்று ஞானத்தை அழைத்து வருகிறாள் கீதா.
'அண்ணி, சபேசன நெனச்சு கவலப்படாத. நாங்க எல்லோரும் பார்த்துக்கறோம்.'
'என்னோட ஆத்துக்காரரை ஒடப்பொறந்தானுக்கு ஒடப்பொறந்தானா நீ தான பார்த்துக்கணும்.'
சொல்லும்போதே ஞானத்தின் கண்களிலிருந்து கண்ணீர்.
'கீதா, அண்ணிய பார்த்து பத்திரமா இட்டு கிட்டு போம்மா. நான் வரேன்.'
தொடரும்..
No comments:
Post a Comment