உறவுபோட்டமுடிச்சு_32
டாக்டர் பசுபதியைப் பார்த்து விட்டு ரிஸப்ஷன் ஹாலில் வந்து அமர்ந்தான் பாலாஜி. டாக்ஸியில் அவன் அப்பா இருந்த நிலைக்கு டாக்டரின் பேச்சு அவனுக்கு தெம்பை அளித்தது.
'சந்தானம், என்னோட சாப்ட்டுட்டு நீ வேணா கிளம்பறையா?'
'வேணாம்ப்பா. அந்த மன்னார்குடி அரக்கி சாயந்தரம் வரைக்கும் பார்த்துட்டு என்ன ஏதுன்னு ஃபுல்லா தெரிஞ்சண்டு வரலைனா கொன்னே புடுவா.'
'ஏய், என் அத்த பொண்ணு உனக்கு அரக்கியா?'
'நான் பரவாயில்ல. உன்ன நெனச்சாதான் பாவமா இருக்கு. கல்யாணதுக்கப்பறம் உன்ன எந்த தூணுல கட்டி வெச்சு விளாசப்போறாளோ?'
'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அப்பா உடம்புனால டென்ஷனா இருக்கா. ரொம்ப ஸாஃப்ட் அவ தெரியுமா?'
'விதின்னு ஒண்ணு இருக்கே பாலாஜி. அது விளையாடறதுக்கு முன்னாடி நாமே விளக்கேத்தி கூப்ட்டு பக்கத்துல வெச்சிப்போம். இப்பவே உங்க அப்பாக்கு கீதா ஜன்னி வந்துடுத்து. கீதா கீதான்னு மூச்சு விட முடியாத சமயத்திலும் புலம்பறாராம். பாவம் அங்க ஞானக் கிழவி தனியா கீதா கிட்ட மாட்டிண்டுடுத்து. பாவம் அது என்ன பாடு படப்போவுதோ?'
'சரி சரி. விட்டா பேசிண்டே போவியே. இரு. அந்த மீனாட்சி பொண்ணு கிட்ட கீயை வாங்கிண்டு சாமானெல்லாம் ஸ்பெஷல் வார்டுல போட்டுட்டு ட்ரைவர கூட்டுண்டு சாப்பிட போகலாம்?"
'ட்ரைவரா? அவன் இத்தன நேரம் நீடாமங்கலத்துக்கே போயிருப்பான்.'
'ஏண்டா காரை அனுப்பிச்ச? சாயந்திரமா நீயும் நீடாமங்கலம் வரைக்கும் கார்லயே போயிருக்கலாமோன்னோ?'
'பரவாயில்லடா. எப்படியும் நான் சாயந்திரம் வரைக்கும் இருக்கணும். ஆறு மணி நேரக் கணக்குல வண்டிய எடுத்தோம். எதுக்கு தேவையில்லாம செலவு?'
மீனாக்ஷியிடம் வருகிறான் பாலாஜி. டாக்டர் சொன்னவைகளை சுருக்கமாக சொல்லி விட்டு ஃபார்மாலிடிஸ் முடிந்தபின் ஸ்பெஷல் வார்டு கீயை வாங்கிக் கொள்கிறான்.
'அண்ணா, உங்களுக்கு தங்க ஊர்ல சொல்லி வைக்கிறேன். ரெண்டு மூணு நாளுல கெடச்சுடும்.'
'சரிம்மா. நாங்க சாப்ட்டுட்டு வரோம். பக்கத்துல ஏதோ பிராமணா ஓட்டல் இருக்காமே.'
'ஆமாண்ணா. நன்னா யிருக்கும். யாரக் கேட்டாலும் வழி செல்லிடுவா. ரொம்ப பக்கம் தான்.'
கொண்டுவந்த துணிமணிகள் மற்றும் இதர பொருட்களை வைத்து விட்டு இருவரும் சீதாராமய்யர் மெஸ்ஸுக்கு வருகிறார்கள்.
இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு இருவரிடையே பேச்சு தொடர்கிறது.
'எப்படிடா பாலாஜி இந்த கிராமத்துல தனியா இருப்ப? அதுவும் ஒரு மாசத்துக்கு மேல.'
'இருந்து தான ஆகணும். என் சிரமங்கள் ஒண்ணுமே இல்ல. கீதாவ நெனச்சப்பாரு. ஓடி வந்து தானே இழுத்துப் போட்டுண்டு எல்லாத்தையும்....'
'ஆமாண்டா. இந்த சின்ன வயசுல பெரிய மனுஷா மாதிரி.. நாலஞ்சு வருஷம் முன்னாடி ஒண்ணா வினளயாடினவளா இப்படி.... நெஜமாவே உங்காத்துக்கு வந்துட்டா நீங்க மூணுபேருமே அதிர்ஷ்டசாலிகள்தான். சொல்லிட்டியோன்னோ அவ கிட்ட உன்னோட விருப்பத்த?'
'இல்லடா. அப்பா இருக்கர நிலைமையில அதுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுக்கறது நன்னா இருக்காது. இருந்தாலும் சின்னச் சின்னதா ஏதோ ஒரு விதத்துல சொல்லியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன்.'
'அப்பா அம்மாக்கு விருப்பம் தான.'
'அப்பாக்கு பரிபூரண சம்மதம்னு தான் தோண்றது. இன் ஃபாக்ட் அப்பா அவ கிட்ட இதப் பத்தி பேசியிருப்பாளோன்னு கூட எனக்கு ஒரு டவுட். அன்னிக்கு அவளே பேச வந்தா. என்னமோ டாபிக் வேறதுல போயிடுத்து.'
'நான் வேணா நைஸா....'
'வேற வினையே வேண்டாம்வேண்டாம். அப்புறம் அது வேற மாதிரி போயிடும். நான் உனக்கு என்ன தெரியாதவனா? சந்தானத்துக்கிட்ட சொல்லிதான் தெரிஞ்சுக்கணுமா அது இதுன்னு எப்படி எப்படியோ போனாலும் போயிடும். அப்பா குணம் ஆன உடனே எப்படியாவது அவ கிட்ட சொல்லத்தான் போறேன்.'
'சொல்லாம இருந்துடாத. வேலையெல்லாம் கிடச்சு கூட கல்யாணம் பண்ணிக்கலாம். சொல்லிட்டா கீதாவும் வெயிட் பண்ணுவா.'
ஸீரியஸாக இருவரும் பேசிக்கொண்டிருக்க அவர்கள் அருகில் இருந்த சர்வர், 'சார் சார்னு மூணு தடவ கூப்டுட்டேன். எல போட்டு தூத்தம் வெச்சு அஞ்சு நிமிஷம் ஆகறது. ஆரம்பிக்கலாமா? பேசிண்டே சாப்பிட்டா வயத்துல ஒட்டாது. மொதல்ல இலைய கவனியுங்கோ.'
கொதிக்க கொதிக்க தக்காளி சாம்பார், பருப்பு ரஸம், கதம்ப கறி, கெட்டி மோர், ஆவக்கா ஊறுகாய். சொக்கித்தான் போனார்கள் இருவரும் சீதாராமய்யர் மெஸ்ஸின் நளபாகத்தில்.
மெஸ் நேரத்தையெல்லாம் தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
மீண்டும் ரிஸப்ஷன். மீண்டும் மீனாக்ஷி.
'ரொம்ப நன்னா இருந்தது ஸிஸ்டர் சாப்பாடு.'
'அண்ணா என்ன நீங்க மீனாக்ஷின்னே கூப்பிடலாம். அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. உங்கள தேடிண்டு ஒருத்தர் வந்தார். மூணு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போயிருக்கார்.'
'யாரா இருக்கும் சந்தானம்?'
'ஒருவேள முதலியார்?'
'எஸ். பாஸிபிள்.'
'மீனாட்சி நாங்க கொஞ்சம் அந்த மரத்தடியில பேசிண்டிருக்கோம். அவர் வந்தார்னா கொஞ்சம் சொல்றியா?'
'கண்டிப்பாண்ணா.'
'மீனாக்ஷி, எல்லாரையும் சார் மேடம்னு கூப்படற. என்ன மாத்திரம் உன்ன பார்த்த ரெண்டாவது நாளுலேயே அண்ணான்னு கூப்படற?'
சொன்னவுடன் பொல பொல வென்று அவள் கண்களில் கண்ணீர்.
'என்னம்மா, என்ன ஆச்சு?'
சட்டென்று அவளே நார்மலுக்கு வந்து விடுகிறாள்.
'அது ஒண்ணுமில்லேண்ணா. எனக்கும் பாலாஜின்னு ஒரு அண்ணன் இருந்தான். உங்கள மாதிரியே இருப்பான். அஞ்சு மாசம் முன்னாடி ஒரு பஸ் ஆக்ஸிடென்டுல செத்துட்டான்.'
'வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசம் இங்கதான நான் இருக்கப் போறேன். தங்கையோட நிறைய பேசறேன்.'
'தேங்க்ஸ் அண்ணா.'
தொடரும்...
No comments:
Post a Comment