திருவண்ணாமலை திருக்கோவில்
7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகள் மிகுதியாக உள்ளன.
விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோயிலின் கருங்கல் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோயிலிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகத் தொன்மையானது.
இக்கோபுரம் கி.பி.1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது. கி.பி. 14ம். நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியது. அண்ணாமலையார் கோவிலிள்ள வல்லாள மகாராஜா கோபுரம் மூன்றாம் வல்லாள் மகாராஜாவால் (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி என்பர்.
ஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச நிலையை அடைந்தது. கிருஷ்ண தேவராயர் (1509 – 1529) தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார்.
இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களிலேயே மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும்.
சிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவையாகும். விஜநகர கால கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
இராய கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
அண்ணாமலையார் கோவிலின் கருவறைத் தெய்வம் அருணாசலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இறைவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன் உண்ணாமலை எனப்படுகின்றார். அம்மன் கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது.
அம்மன் சனனதிக்கு வெளியிலுள்ள மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டம் உள்ளது. விநாயகர் சன்னதியும் கம்பத்து இளையனார் (முருகன்) சன்னதியும் இக்கோவிலிலுள்ள இதர முக்கிய சன்னதிகளாகும்.
ஆலயச் சிறப்பு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். ஆறு பிரகாரங்களும், 9 கோபுரங்களும், பல மண்டபங்களும், பல சந்நிதிகளும் கொண்ட இந்த ஆலயம் எல்லோராலும் தரிசிக்க வேண்டிய புண்ணியத் தலங்களில் முதண்மையானதாகும். இறைவன் இத்தலத்தில் சுயம்பு லிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
கருவறை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார்.
லிங்கோத்பவராக சிவபெருமான் முதன்முதலாக காட்சி கொடுத்தது இத்தலத்தில் என்பதால் மற்ற ஆலயங்களில் இல்லாத அளவிற்கு தனி அலங்காரத்துடன் இவர் காட்சி தருகிறார்.இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் சிறிய உருவில் அருட்காட்சி தருகிறாள்.
கிழக்கில் கிளி கோபுரம்
வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது.
இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.
No comments:
Post a Comment