ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்
குளத்துபுழை பால சாஸ்தா....
கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய நதிக்கரையில் அமைந்துள்ளது இக்குளத்துப்புழா ஆலயம். பரசுராமரால் உருவாக்கப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த இத்தலத்தை பின்னாளில் கொட்டாரக்காரா என்ற பகுதியைச் சேர்ந்த மன்னன் திருப்பணிகள் செய்து வழிப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு முறை இம்மன்னர் தனது பரிவாரங்களுடன் ஓய்வுக்காக இக்காட்டுப் பகுதிக்கு வந்தபோது, அவருடன் வந்த பணியாளர்கள் மூன்று கற்களை எடுத்து அடுப்பு வைத்தனர். ஒரு கல் மட்டும் சற்று பெரிதாக இருக்கவே அதை பல கோணங்களில் வைத்துப் பார்த்தும் அது சரியாக அமையாததால் அதனை உடைத்து சிறிதாக்கும் முயற்சியாக அங்கு தனியாக கவனிப்பாரற்ற கல் ஒன்றை எடுத்து அடுப்புக்காக வைத்த கல் மீது போட்டு உடைக்க முற்பட்டனர்.
ஆனால் உடைந்தது அடுப்புக் கல் அல்ல, இவர்கள் எடுத்துப்போட்ட கல் தான் உடைந்தது. அப்போது அங்கு அதிசயம் ஏற்பட்டதாம். எட்டு துண்டுகளாக உடைக்கப்பட்ட கற்களிலிருந்து குருதி கொட்டத் துவங்கியதை கண்ட மன்னரும் மற்றவர்களும் பதட்டமடைந்தனராம்.
உடனடியாக வேத விற்பன்னர்களையும், நம்பூதிரிகளையும் வரவழைத்த மன்னர், அதுகுறித்த காரணத்தை கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதால் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர்களால் உடைக்கப்பட்ட கல்தான் ஸ்ரீஐயப்பன் விக்ரகம் என்றும், அவ்விடத்தில் பரசுராமரால் நிர்மானிக்கப்பட்ட கோயில் ஒன்று முன்பு இருந்ததாகவும் தெரியவந்தது.
அதனால் மிகவும் வருத்தமடைந்த மன்னரிடம் பரிகாரமாக அவ்விடத்தில் கோயில் ஒன்று நிர்மாணித்தால் போதும் என நம்பூதிரிகள் சொல்ல, அதன்படி அம்மன்னன் கட்டிய ஆலயம்தான், தற்போதுள்ள குளத்துப்புழா ஸ்ரீஐயப்பன் ஆலயம் என்றும் கூறப்படுகிறது.
பாலகனாக ஸ்ரீ ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டு துண்டுகளாக உடைக்கப்பட்ட அக்கல் சிலை இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது. பூஜை சமயங்களில் அவை ஒன்று சேர்க்கப்பட்டு பூஜை முடிந்ததும், பழையபடி எட்டு துண்டுகளாக பிரித்து வைக்கப்படுவது தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம்தான் என்றும் ஆன்மிகப் பெரியவர்களால் கூறப்படுவதுண்டு. மலையாள பூமியில் சிரஞ்சீவியான பரசுராமரால் சாஸ்தாவுக்காக ஸ்தாபிக்கப்பட்ட இக்குளத்துப்புழா உள்பட எங்கும் நிறைந்து இவ்வுலகத்தையும், உலக மக்களையும் அடக்கி ஆளும் பகவான் ஸ்ரீஐயப்பன் பாரத தேசத்தில் இம்மலையாள பூமியில் நான்கு இடங்களில் கோயில் கொண்டது பற்றி புராண இதிகாசங்களில் சிறப்பாக பேசப்படுகிறது.
குளத்துப்புழா கோயிலுக்கு அருகே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது கல்லடையாறு. இந்த ஆற்றிற்கும் கோயிலுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆற்றில் சில மீன்கள் உண்டு. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மீன்களுக்கு பொரி போடுவது ஒரு வழிபாடாக உள்ளது. இங்குள்ள மீன்கள் மச்சக்கன்னி எனப்படும் கடல் கன்னி வழிவந்தவையாகும்.
புராண காலத்தில் மச்சக்கன்னி இங்குள்ள பாலகன் ஐயன் மீது மையல் கொண்டு, அவரையே மணமுடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தாளாம்¢. திருமணத்திற்கு மறுத்துவிட்ட ஸ்ரீ ஐயப்பன், பின் அவளது வேண்டுகோளின்படி அந்த கல்லடையாற்றில் இருந்துகொள்ள அனுமதி அளித்ததாகவும், அதன்படி மச்சக்கன்னி இவ்வாற்றில் தனது தோழிகளுடன் மீன்களாக இருப்பதாகவும் ஐதீகம்.
இக்கோயிலின் வலது பிரகாரத்தில் யக்ஷி என்ற அம்மன் உள்ளதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து தொட்டில் கட்டி அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்தல பெருமை: பகவான் ஸ்ரீ ஐயப்பன் குளத்துப்புழாவில் பாலகனாக விளங்குவதற்கு ஏற்ப கர்ப்பகிரகத்தில் மிகச்சிறிய சிலை வடிவத்தில் தவழும் பாலகனாக காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் வாயிலிலும் ஒரு சிறு குழந்தை செல்வதற்கு ஏற்ப உயரம் குறைவாகவே அமைந்துள்ளது மட்டுமின்றி திருக்கோவிலின் உட்புறமும் பாலகன் ஒருவன் ஓடி விளையாடும் அளவிற்கு ஏற்ப உயரம் குறைவாகவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கர்ப்பகிரகத்தில் மூல சன்னதிக்கு முன்புறமாக வலது புறத்தில் கணபதியும், உள்பிரகாரத்தில் தீர்த்த கிணறும் அமைந்துள்ளது. வெளிபிரகாரத்தில் பகவதி, பேச்சி அம்மன், கருப்பன், நாகர், வனதேவதைகள் கோயில் கொண்டுள்ளனர். இங்கு சிறப்பு வழிபாடாக நாகதேவதைக்கு மஞ்சள் பூசி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு விஜயதசமியன்று வித்யாரம்பம் எனும் பெயரில் நடைபெறும் சம்பிரதாயம் பிரசித்தி பெற்றதாகும். குழந்தைகளுக்கு புதிய அட்சரங்களை எழுத கற்றுக்கொடுப்பதோடு சோறு ஊட்டும் சடங்கும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மனித வாழ்க்கையில் பால பருவத்தை குறிக்கும் தலமாக விளங்குவதால் பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவைகள் பெற இங்கு வந்து வழிபாடு செய்வது மிகவும் நல்ல பலனை கொடுக்கும் என்கின்றனர் பக்தர்கள். மகர விளக்கு வைபவமும், சித்திரை திருவிழாவும் இங்கு முக்கியமானவை. திருவிழா எட்டு நாட்கள் விமரிசையாக நடைபெறும். சித்திரை முதல் நாள் யானை மீது சுவாமி வலம் வரும் வைபவம் இங்கு பிரம்மாண்டமாக இருக்கும். தை முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடக்கும்.
குளத்துப்புழா கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து எளிதாக சென்று வர இயலும். நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ளது...! 🙏🕉️🙏
No comments:
Post a Comment