Friday, November 26, 2021

உறவுபோட்டமுடிச்சு_33

உறவுபோட்டமுடிச்சு_33

மணி மூணே காலுக்கு சடகோபன் முதலியார் காரில் வருவதை சந்தானத்தோடு பேசிக்கொண்டிருந்த பாலாஜி பார்த்துவிட்டு எழுந்து கொள்கிறான்.

முதலியாரோடு இன்னொருவரும் காரில் இறங்குகிறார்.  வாட்டசாட்டமான குட்டை உடம்பு.  எப்போதும் சிரித்த முகம்.  இவைகள் முதலியாரின் ட்ரேட் மார்க்குகள்.

பாலாஜியைப் பார்க்க முதலியாரும் முதலியாரைப் பார்க்க பாலாஜியும் சந்தானமும் நெருங்கி வருகிறார்கள்.

'பாலாஜி, சபேசன் எப்படி இருக்கான்?'

'யார் பார்த்தா?  டாக்டர் நன்னா இருக்கறதா சொன்னார்.'

இப்படி ஆரம்பித்து ஆஸ்பத்திரி வந்த போது சபேஸய்யர் இருந்த நிலையில் ஆரம்பித்து டாக்டர்கள் சொன்னது வரை ஒன்று விடாமல் சொன்னான்.

'நான் மறந்தே போயிட்டேன் பாரு.  இவன் என் சம்பந்திக்கு உறவு.  ஒரு விதத்துல எனக்கே தூரத்து சொந்தம்தேன்.  பேர் தணிகாசல முதலியார்.  வல்லத்துல வீடு.  இங்க கூட வீடு ஒண்ணு இருக்கு இவனுக்கு.  பரம்பர பரம்பரையா காங்கிரஸ் கட்சி.  ஏதோ கட்சி போஸ்டுலயும் இருக்கான்.  தணிகா, இவன் எங்க ஊர் பையன்.  என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் சபேஸனோட ஒரே புள்ள.  பேர் பாலாஜி.  இந்த தம்பியும் எங்க ஊருதான்.  சந்தானம்னு பேரு.'

அறிமுக கைக்குலுக்கல்கள் முடிந்தன.  

'தணிகாசலத்த நான் அழச்சிண்டு வந்ததுக்கு காரணமே அவரோட வூட்டு சாவிய உன் கிட்ட கொடுக்கத்தான்.  இந்த ஆஸ்பத்திரியில பேஷண்ட் இல்லாதவங்க தங்கறது நல்லது இல்லயாம்.  அதனால அந்த வீட்டுல தங்கிகிட்டு அப்பாவ பார்த்துக்கோ.'

'பெரிய உதவி பண்ணியிருக்கீங்க.  நான் அப்பாவோட தங்கலாம்னுதான் ஸ்பெஷல் வார்டு எடுத்தேன்.  ஆனா இங்க வந்துதான் இதல்லாம் தெரியும்.'

'தொத்துள்ள இடமில்லையா பாலாஜி.  பாவம் நீ சின்ன புள்ள வேற.  எதுக்கு வீணா ரிஸ்க்?  தணிகா வீடுதான் இருக்கே. சும்மாத்தான கெடக்கு.  யூஸ் பண்ணிக்கோ.'

'ரொம்ப நன்றி சார்.'  தணிகாசலத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறான்.

'நன்றியெல்லாம் வேண்டாம் தம்பி.  அப்பார பத்தி பேசிகிட்டே வந்தான் சடகோபன்.  நல்ல மனுஷங்களுக்கு உதவரத்துக்கு கொடுத்து வெச்சிருக்கணும்.  நாம பேசிட்டு உங்க ஜாமான்கள எடுத்துட்டு என்னோட வீட்ட காமிக்கறேன்.  எங்க அப்பாரு இங்க சிசிச்சை எடுத்துக்கும் போது இந்த வூட்ட வாங்கினோம்.  அப்பறம் இத வந்து கூட பார்க்கறது இல்ல.  நீங்க தாராளமா தங்கிக்கோங்க.'

தணிகாசலத்தின் இரண்டு கைகளையும் பற்றி இன்னொரு முறை நன்றி தெரிவிக்கிறான் பாலாஜி.

'அப்புறம் பாலாஜி.  தைரியமா இரு.  அப்பாரு நல்லாயிடுவாரு.  பசுபதி நல்ல டாக்டர்.  அப்பாவ நல்லா சுகப்படுத்தி அனுப்பிடுவாரு.  நாளைக்கு மறுநாள் பூவனூர் போவேன்.  அடுத்த வாரம் திருவய்யாறு திரும்ப வரும் போது அப்பாவ வந்து பார்க்கறேன்.'

'சரி அங்கிள்.'

'சந்தானம் இங்கதான் ஒன் கூட தங்கப் போகுதா?'

'இல்ல அங்கிள்.  கிளம்பிடுவான் சித்த நேரத்துல.'

'அப்படின்னா, நம்ம கார்லயே வரட்டும்.  தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டுல இறக்கிட்டு நான் திருவய்யாறு போறேன்.  என்ன சம்மதம் தான சந்தானம்?'

'சரிங்க முதலியார்'

'பாலாஜி பெட்டி படுக்கைய எடுத்துகிட்டு வா.  தணிகா வீட்டுக்கு போவோம்.  பையன் ஒருத்தன் வாரா வாரம் வீட்ட சுத்தம் பண்ணிட்டு போவானாம் வல்லத்துலேந்து வந்து.  அவன நாளைக்கு அனுப்பறானாம்.  இன்னிக்கு மாத்திரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்க.'

பெட்டி படுக்கையோடு புது வீடு வந்தாச்சு.  அப்படி ஒண்ணும் பெரிய அளவில் தூசு இல்லை.

'ஆள் எல்லாம் அனுப்ப வேண்டாம்.  நானே க்ளீன் பண்ணிக்கறேன்.  எனக்கும் இங்க பொழுது போகணும் இல்லையா?'

'மிராசு வீட்டுப் புள்ள நீங்க.  எதுக்கு உங்களுக்கு சிரமம்.  பையன அனுப்பறேனே.'

'வேண்டாம் சார்.  நானே பார்த்துக்கறேன்.'

'சரி தணிகா.  பையன் போக்குக்கே விடு.  பார்த்துக்கலாம்.  அய்யருமாருங்களுக்கு அவுக வேலைய அவுகளே செஞ்சாத்தான் அவுகளுக்கு மனசுக்கு திருப்தியா இருக்கும்.'

சிறிது நேரம் பேசிவிட்டு சந்தானத்தை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்கள்.  அவர்களை அனுப்பிவிட்டு அரை மணி நேர அசதி தூக்கம்.

ஐந்து மணி அளவில் எழுந்து கொள்கிறான்.

'எப்படி சமாளிக்கப் போகிறோம்னு ஆரம்பத்துல எப்படி கவலையோட இருந்தோம்.  இப்ப ஒவ்வொண்ணா நம்மள தேடி தேடி உதவிகள் வர்ரது எவ்வளவு ஆச்சர்யம்?'

ஆஸ்பத்திரி வரும்போது மீனாட்சி ட்யூட்டி முடிஞ்சு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

'அண்ணா, எமெர்ஜென்ஸில எனக்கு தெரிஞ்சவ தான் ட்யூட்டில இருக்கா.  பேரு டெய்ஸி.  அவகிட்ட சொல்லியிருக்கேன்.  எமெர்ஜென்ஸில யாரும் ப்பேஷண்ட பார்க்க பர்மிஷன் கிடையாது.  இருந்தாலும் டாக்டர் வரதுக்குள்ள போய் பார்த்துட்டு வந்துடுங்க.  ஸேஃப்டி கோட் மறக்காம போட்டுகிட்டு போங்கோண்ணா.'

'ரொம்ப தேங்க்ஸ் மீனாட்சி.'

டெய்ஸி.  அவளும் மீனாட்சி போல சின்ன பெண்தான்.  மீனாட்சி பெயரைச் சொன்னவுடன் புன்சிரிப்பு.

'சார்.  அப்பா நல்லா தூங்கறார்.  மயக்க மருந்து வேற மத்யானம் கொடுத்துருக்கு இல்லையா?  டாக்டர் வர நேரம் இப்ப.  லேசா எமர்ஜென்ஸி கதவ தொறந்து விடறேன்.  சட்டுன்னு பார்த்துட்டு டக்குனு வந்துடணும்.  லேட் பண்ணினா என் வேலை போயிடும்.'

'சரி ஸிஸ்டர்.'

உள்ளே செல்கிறான்.  பத்தடி தூரத்தில் அப்பாவை பார்க்கிறான்.  கூப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று க்ஷீண குரலில் 'அப்பா ஆ ஆ'.

கண் திறக்கிறார்.  உடனே முடிக் கொள்கிறார்.   சில நொடிகள் அவரை பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே வருகிறான்.

'டெய்ஸி ஸிஸ்டர், நான் இங்க இருக்கணுமா?'

'தேவையிருக்காதுன்னு நெனைக்கறேன்.  எதற்கும் நைட் ஒன்பதுக்கு வந்து என்ன பார்த்துட்டு போங்க.'

'சரி ஸிஸ்டர்.  ரொம்ப தேங்க்ஸ். இப்ப எப்படி இருக்கார் அப்பா?'

'சளி கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்து கிட்டிருக்கு.  ஒண்ணும் பிரச்சனை இல்ல.'

'ஆகாரம்?'

'டாக்டர் வந்து சொல்லுவார்.  நீங்க கிளம்புங்க.'

தணிகாசலம் கொடுத்த வீட்டுக்கு திரும்ப வருகிறான்.

கொண்டு வந்த பொருட்களையும் துணிமணிகளையும் வெளியே எடுத்துவிட்டு வீட்டினுள் இருக்கும் பீரோக்களில் தன் உபயோகத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்கிறான்.

திடீரென்று கீதா சிந்தனை.

'ஒரு பொருள் விடாம என்ன அழகா எல்லாத்தையும் உள்ளுக்குள்ள வெச்சுக் கொடுத்திருக்கா?'

அவனோடு யார் கூட இருக்கா வெட்கப் படறதுக்கு?  பெரிதாகவே சிரிக்கிறான்.

உடனே ஒரு சின்ன பிரார்த்தனை.

'எப்படியாவது சேர்த்து வைடா எங்க ரெண்டு பேரையும்.'

காதல் வசப்பட்டு விட்டால் மனம் சொல்லும்படி சிரிக்கணும், அழணும், மோனோ ஆக்டிங்கெல்லாம் கூட செய்யணும்.'

ஏதோ ஒரு துணியை உதறுகிறான்.  அதிலிருந்து ஒரு பேப்பர் கீழே விழுகிறது.  எடுப்பதற்குள் ஒரு ஆர்வம்.  ஒருவேளை அதுவாக?  எதுவாக ?  முகத்துக்கு நேராக சொல்ல வெட்கப்பட்டுண்டு?

பத்து ஸெகண்டுக்குள் பத்தாயிரம் சிந்தனைகள்.

நான்காக மடித்திருக்கும் பேப்பர்.  பிரிக்கிறான்.

'ச்சே.. இவ்வளவு தானா?'

அது ஒரு செக்லிஸ்ட்.  என்னென்ன துணிமணிகளும் பொருட்களும் பைக்குள் இருக்கின்றன என்பதற்கான செக்லிஸ்ட்.'

'யூ ஹாவ் டிஸ்ப்பாயிண்டட் மீ'

இத பார்றா இங்லீஷ? அவனுக்கே இப்போது சிரிப்பு வருகிறது.

இவன் ஆஃபிஸ் டூர் போவது போலவும் அவனோடு கிளம்பும் லக்கேஜில் என்னென்ன இருக்குன்னு அவள் சொல்லிக் கொண்டே இருப்பது போலவும் ஒரு ஸ்க்ரீன் ப்ளேயை ஒட்டிப் பார்க்கிறான்.

சட்டென்று ஒரு குளியல் எண்ணம்.  கொல்லையில் கிணறு.  தாம்புக்கயிறும் வாளியும் கண்ணில் படுகிறது.

இவனாகவே அடுக்கி வைத்த பொருட்களைப் பார்த்தாலே தெரியப் போகிறது.  இருந்தாலும் அந்த செக்லிஸ்டை எடுக்கிறான்.

'சோப்பு, டவல்... பரவாயில்லையே.  எழுதியிருக்கே?'

சிரிப்போடு எடுத்துக் கொள்கிறான்.

'எங்கிருந்தோ ஆசைகள்.  எண்ணத்திலே ஓசைகள்....'

பருவம் குளிக்கப்போனாலே பாட்டு வரணுமே!  வந்தது.

தொடரும்.....

No comments:

Post a Comment