உறவுபோட்டமுடிச்சு_28
அன்று இரவு அடிக்கடி மாமா இடைவிடாமல் இருமிக் கொண்டிருந்தார். இருமல் நிற்கும் போது தூக்கமும் வராமல் படுக்கையிலேயே மடியில் தலையணையை கட்டிக் கொண்டு உட்காருவதும் பிறகு எழுந்து கொண்டு நிற்பதுமாக இருந்து கொண்டிருந்தார்.
மாமி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
இருமல் சத்தத்தில் முழிப்பு வந்த கீதா அவரின் அவஸ்தையை பார்த்து பொறுக்க முடியாமல் எழுந்து கொள்கிறாள்.
'ஏன் மாமா? தூக்கம் வரலையா? இருமல் ஜாஸ்தி இருக்கோ இன்னிக்கு? வெந்நீர் வெச்சு தரட்டுமா? பால் வேணும்னாலும் பாலும் இருக்கு. பனங்கல்கண்டு போட்டு தரேனே வேணும்னா.'
'மணி என்ன ஆகறது?'
'மணி ரெண்டு மாமா.'
'ஆறு மணிக்கு தான கெளம்பணும்.'
'ஆமாம் மாமா. சிவலிங்கம் கரக்டா வந்துடறேன்னு சொல்லியிருக்கான். ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போறதெல்லாம் மறக்காம தயாரா வெச்சுட்டேன். அஞ்சு மணிக்கு பாலாஜிய எழுப்பிட்டு காபிய ரெடி பண்றேன். சரியாயிருக்கும் மாமா.'
'எனக்கு (இருமல்) எனக்கு (இருமல்) மருந்து மாத்திரைய விட (இருமல்) ஆஸ் (இருமல்) ஆஸ்பத்திரிய விட (இருமல்) ஒன்னோட (இருமல்)....'
'ஸ்ட்ரெயின் பண்ணாதீங்கோ மாமா. அந்த ஈஸிச்சேர வேணா பெட்டுக்கு பக்கத்துல போடட்டுமா? சித்த சாஞ்ச மாதிரி படுத்துண்டேள்னா இருமல் கட்டுக்குள்ள இருக்கும்.'
'சரி. உன் தூக்கத்த வேற கெடுக்கறேன். ஈஸி ச்சேர போட்டுட்டு நீ தூங்கு.' (சிரமப் பட்டு சிரமப் பட்டு தான் சொல்ல வந்ததை சொல்கிறார்).
'பரவாயில்ல மாமா. ஈஸி ச்சேரில படுத்துக்கோங்கோ. நான் விசிறுரேன். எதையும் யோஜன பண்ணாம உங்க ஃபேவரைட் அம்மன் கல்யாணிய நெனச்சுண்டே படுத்துக் கோங்கோ. தூக்கம் தானா வந்துடும்.'
என்னென்னவோ பதில் அவளுக்கு தரணும்னு நெனைக்கிறார். முடியவில்லை. அசதி. இருமி இருமி அசதி.
ஓலை விசிறியின் நெருக்கமான காற்று. தன்னையறியாமல் தூக்கம் அவருக்கு வருகிறது.
கையிலிருந்து விசிறி கீழே விழும் வரை அரைத்தூக்கத்தில் கீதா விசுறுகிறாள். மணி கிட்டத்தட்ட மூன்று.
'நாலு மணிக்கு எழுந்துக்காம அசந்து தூங்கிட்டா?'
இப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டால் தூக்கம் வருமோ? எழுந்து விட்டாள். சமையல் உள் சின்ன முற்றத்தில் வாயை குழப்பி முகத்தை அலம்பி அரைத்தூக்கத்தை விரட்டிக் கொள்கிறாள்.
ராத்திரி பச்சை தண்ணீர் வெச்சுருக்கற பாத்திரத்தில் கெட்டுபோகாமல் இருக்க வைத்திருந்த பால் பாத்திரத்தை வெளியில் எடுக்கிறாள்.
'நானு, மாமா, மாமி, பாலாஜி, சந்தானம், சிவலிங்கம் .... ஆறு பேருக்கு பால் காணும்னுதான் நெனைக்கிறேன்.'
சமையல் உள்ளில் பாத்திர சத்தம் கேட்டு கொல்லைப்புறம் கட்டியிருந்த கருப்பன் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசைகள் விடாமல்.
'இவன் வேற. இவனுக்கும் தூக்கம் வரலையா? வர்றேன் இருடா. மணி ஆட்றதோட நிறுத்திக்கோ. கத்தாத. இப்பத்தான் மாமா தூங்கறார்.'
மனதுக்குள் இப்படி நினைத்துக் கொண்டே கொல்லைப் பக்கம் விளக்கை போட்டு கதவை திறக்கிறாள்.
வேகமாக தலையை ஆட்டுகிறான் கருப்பன் இப்போது இவளைப் பார்த்தவுடன். உட்கார்ந்திருந்தவன் எழுந்து நின்று தலையை தூக்கி தூக்கி பெருமூச்சுகளாய் விடுகிறான்.
'என்ன இப்ப உனக்கு வேணும்? தூக்கம் வரலையா உனக்கு?'
கொஞ்சம் நெற்றியை உடம்பை தடவிக் கொடுத்து கழுத்தையும் சொறிந்து கொடுக்கிறாள். அவன் உமிழ் நீர் முழுவதும் இவள் புடவையில்
'என்ன ஆச்சு இன்னிக்கு இவனுக்கு?'
அவன் சற்று சமாதானம் ஆனவுடன் வைக்கோல் பிரிகளை அவன் பக்கத்தில் போட்டு விட்டு கொல்லையை பூட்டி விட்டு உள்ளே வருகிறாள்.
நேற்று ராத்திரி அலம்பி கோலம் போடப்பட்ட கும்மட்டி அடுப்பை பாவமாக தொட்டுக் கும்பிட்டு விட்டு வெந்நீர் அண்டாவை வைக்கிறாள் அதன் மேல். சமையல் உள் ஓரத்தில் அடுக்கப் பட்டிருந்த சவுக்குகள் உரிமட்டை நார்களை வைத்து அடுப்புக்கு தீயூட்டுகிறாள். சிமெண்ட் தொட்டியில் உள்ள ஜலத்தை சத்தம் எழாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் அண்டாவில் விடுகிறாள்.
'மொதல்ல நாம குளிச்சுட்டு ரெடி ஆயிட்டா பாலும் டிகாக்ஷனும் ரெடியாகும்போது ஒவ்வொருத்தரையா எழுப்பலாம்.'
ஓசை எழுப்பாமல் ஐந்து மணிக்குள்ளாகவே வாசல் தெளித்து கோலமும் போட்டாச்சு.
அவள் இப்போது தயார். 'மாமி மாமி....'
மெல்லிய குரலில் ஞானத்தை எழுப்புகிறாள்.
'மணி என்ன? எழுந்துட்டியா? ஏன் தூங்கவே இல்லையா நீ.'
'மணி நாலே முக்கால் ஆகறது மாமி. ஆறு மணிக்கு கிளம்பணுமே அவா. சரியா இருக்கும்.'
எல்லோரும் மிலிட்டரி டிஸிப்ளினில் தயாராகிறார்கள்.
மணி ஆறு. வண்டி ரெடி. சிவலிங்கம் ரெடி. சந்தானம் வந்தாச்சு. மூட்டை முடிச்ச ஏத்தியாச்சு.
'சந்தானம், செங்கிப் பட்டிலே சாயந்திரம் வரைக்கும் இருந்துட்டு டாக்டர் சொல்ற விவரங்கள் எல்லாத்தையும் கேட்டுண்டு எட்டு மணிக்குள்ள இங்க வந்துடணும் என்ன? நீ பாட்டுக்கு தஞ்சாவூர்ல பாலச்சந்தர் படம் ஓடறதுன்னு தியேட்டருக்கு கம்பி நீட்டினா நாளைக்கு ஆத்துக்கு வந்து மொத்துவேன். மாமியும் நானும் கவலையோட இருப்போம்கற நெனப்பு இருக்கணும்.'
'பாலாஜி, நான் சொன்னது ஞாபகம் இருக்கோன்னோ. அப்பாக்கு முன்னாடி அழுதுண்டு தைரியமா இருக்கறவரையும் பயமுறுத்த கூடாது, என்ன? நம்மாத்துக்கு வந்த அந்த முதலியாரோட திருவய்யாறு நம்பர் இருக்கோன்னோ. கூச்சப்படாம எது வேணுமோ கேளு அவர்கிட்ட.'
'அப்பா, தைரியமா இருங்கோ.'
'அப்பா....' வாய்தவறி அவளிடமிருந்து வந்த அப்பா என்ற வார்த்தை கொஞ்சம் தெம்பூட்டியது அவருக்கு ஸென்டிமெண்ட் உணர்வால்.
'ஞானம் போயிட்டு வரேண்டி..'
பீரிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு 'ஜாக்ரதையா...'
மற்றவை ஞானத்தின் புடவைத் தலைப்பும் கண்களும் பேசிக் கொண்டன.
சில அக்ரஹாரத்து வீடுகளில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் பட்டாமணியாராத்தில் தெரியும் விஷயங்களை பார்த்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். அரையும் குறையுமாக அறிந்தவர்கள் அரையும் குறையுமாக தெரிந்தவர்களோடு பேசி முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
'சீதா பொண்ணு கீதா ஞானத்துக்கு பலமா இங்கேயே தங்கி பார்த்துக்கப் போறாளாம்.'
'பாலாஜிக்கு சரியான பொருத்தம் கீதா. பகவான் தான் ரெண்டையும் சேர்த்து வைக்கணும்.'
'பட்டாமணியாராம் பெரிய எடம். சீதா கிட்ட என்ன இருக்கு? ஞானம் ஒத்துப்பாங்கறது நேக்கு என்னவோ சந்தேகமாத்தான் இருக்கு.'
'இப்ப எதுக்கு அந்த பேச்செல்லாம். மேற்கொண்டு படிக்கப்போறேன்னு பாலாஜி அம்புட்டு பேர் கிட்டேயும் சொல்லிண்டிருக்கான். அவன் படிப்ப முடிச்சு, வேலைக்கு சேர்ந்து அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கறதுக்குள்ள அஞ்சாறு வருஷம் ஆயிடாது? அதுக்குள்ள என்ன வேணா மாறுதல் வரலாமே. இப்பவே மாமா உடம்பு படுத்தறது.'
'மனுஷா அப்படி ஒரு நல்லவா. நல்லது நடக்கணும்டி. பட்டாமணியார் நல்லபடியா திரும்பணும்டி. கல்யாணி கல்யாணிம்பார். அவதான் அவர நன்னாக்கி பூவனூர் கொண்டு சேர்க்கணும்.'
'அவாத்துக்கு வேணா போய் அவருக்கு நல்ல வார்த்தை சொல்லலாமா?'
'வேணாம் ஒண்ணும். அவாளே பாவம். விக்கி முழுங்கி தான் மாமா உடம்ப பத்தி எல்லார் கிட்டேயும் சொல்றா. இப்ப போய் நாம எதுவும் கேட்டு அவா மனச கஷ்டப்படுத்த வேண்டாம்.'
இங்கிதம் தெரிந்து மனதோடு மட்டும் வேண்டிக் கொள்கிறார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment