திலீப் குமார்
ஆன்மீக பயணம் உடையாளூர் நகரத்தின் மையப் பகுதியில் கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வூருக்கு சிவபாதசேகரமங்கலம் என்று சோழர் காலத்திய புகழ்பெற்ற பெயரும் உண்டு. இராஜராஜ சோழனின் நினைவிடம் திருமாளிகை இங்கு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கோஷ்டங்களில் இடம்பெறும் வழக்கமான சிற்பங்களான பிள்ளையார், ஆலமரச்செல்வர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, ரிஷபாந்தகர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
உடையாளூர் கைலாசநாதர் ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுகள்உள்ளன. அக்கல்வெட்டுகளில் உடையாளூர் சிவபாதசேகரமங்கலம் என்று குறிக்கப்பெற்றுள்ளது...இங்குள்ள சிவபாதசேகர அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தில் ராஜராஜ சோழரது திருவுரு உள்ளது. கைலாசநாதர் சன்னிதியினுள் மூன்று ராணிகளின் சிற்பங்கள் வணங்கும் நிலையில் உள்ளது.
திருச்சுற்றின் மேற்குப் பகுதியில், லிங்கத் திருமேனிகள் பல உள்ளன.
கோயில் முழுதும் கல்வெட்டுகள்.
வழக்கமான கோயிலாக இருந்தாலும். சிறப்பான மூன்று சிற்பங்களும், இரண்டு கல்வெட்டுச் செய்திகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கருவறையின் இரு பக்கமும் உள்ள இரண்டு துவார பாலகர்களின் காலடியைத் தலையில் ஏந்தியவாறு இரண்டு அடியார்கள் அமர்ந்துள்ளனர்.
ஒருவர் ஆண். மற்றொருவர் பெண். ஆண் உருவ அடியார் தலையில் ஜடாபாரத்துடன் வணங்கும் கோலத்தில் உள்ளார்.
சிவபாதசேகரன் என்றால் சிவனின் பாதங்களை தன் தலையில் சேகரிப்பவர். இவ்வார்த்தைக்குப் பொருத்தமாய், காலடியைத் தன் தலையில் ஏந்தியவாறு அடியார் சிவபாதசேகரனாய்.
இதன் அருகிலேயே அரசனும் அரசியும் இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ளனர்.
கோயிலின் முன்புறம் ஒரு சிறு மண்டபத்தில் லிங்கம் ஒன்றினை வணங்கும் கோலத்தில் ஒரு அடியார் உள்ளார். இவர் சிவபாதசேகர அனுக்கிரக மூர்த்தி என்று அழைக்கபடுகிறார். சிற்பத்தின் உள்ளே கல்வெட்டு பொறிப்பு இருந்தாலும் எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை.
இறைவனின் பெயரோ சிவபாதசேகர ஈஸ்வரமுடையார். பாதத்தைத் தன் தலையில் ஏந்தியவாறு ஓர் அடியார். அடியாருக்கு அனுக்கிரகம் செய்பவர் சிவபாதசேகர அனுக்கிரக மூர்த்தி.
முழுக்க முழுக்க, மாமன்னன் ராஜராஜ சோழனை மையப்படுத்திய கோயில் இது. மிகப்பெரிய ஆலயமான இக்கோவில் நம் வாழ்நாளில், பார்க்க வேண்டிய ஒன்று.
கைலாசநாதர் ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வெளிவந்ததும், அதே தெருவின் தொடக்கத்தில் ஒரு சிறிய அளவிலான வினாயகர் ஆலயம் உள்ளது...இவ்வினாயகர் கோட்டை வாயில் வினாயகர் என்றழைக்கப்படுகிறார்.இதிலிருந்து அந்த இடத்தில் அக்காலத்தில் கோட்டையின் வாயில் இருந்திருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அடுத்து அடியேனும், கோயிலை பற்றியும் , பல சரித்திர நிகழ்வுகளையும் சிறப்பாக அறிந்த, மதிப்புக்குரிய, நம் முக புத்தக சகோதரர் முரளியுடன், சென்றது, சரித்திரம் பின்னணி கொண்ட, முக்கியமான நிகழ்வுகளை கொண்ட (இப்பதிவுடன் உள்ள படத்தை பாக்கவும்) பால்குளத்தம்மன் கோவிலுக்கு சென்றோம், இங்கே முட்டுக்கொடுக்கப்பட்ட தூண் ஒன்றில் தான் ராஜராஜர் பள்ளிப்படை குறித்த கல்வெட்டு உள்ளது...நாங்கள் சென்ற பொழுது கோவில் நடை சாத்தியிருந்தது...ஆதலால் அந்த கல்வெட்டில் பாதிதான் கண்ணிற்கு புலப்பட்டது, அங்குள்ள அம்மனை மனதார, அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மனசார வேண்டி விட்டு, கோயிலின் எதிரில் அமைந்துள்ள, பல பசுமையான, பேர் தெரியாத செடி, கொடிகள் மண்டி கிடந்த பால்குளத்தை, அருகில் இருந்த, நெடி உயர்ந்த மரத்தின் நிழலில் நின்றுக்கொண்டு ரசித்தேன்.
பாற்குளத்தம்மன் கோயில் கல்வெட்டு, இராஜராஜர் தங்கியிருந்த, இறைவனடி சேர்ந்த நிகழ்ச்சியைக் கூறலாம்.
ஆனால், இராஜராஜரின் நினைவாக, அவரது பூத உடல் மேல் எழுப்பப்பட்ட லிங்கம், கைலாசநாதர் கோயில் லிங்கம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
உடையாளூர் கிராமத்தில் உள்ள, இந்த கோயில்களின் அருகில் , அருமையான நிழல் தரும் , பெரிய விசலமான மரங்கள், பால்குளத்தி அம்மன் குளத்துக்கு அருகில் உள்ள மரத்துக்கு அடியில், அந்த கள்ளம் , கபடு, சூதுவாது அறியாத மக்களின் வாஞ்சையான உபசரிப்பில் நம்மை ஐக்கியபடுத்திக்கொண்டு, எனக்கு பிடித்த பிரபல எழுத்தாளர் பாலக்குமரன் எழுதிய சரித்திர நாவல் உடையார், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை படிக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் தோன்றியது.
( இப்போது, முக புத்தகத்தில் , பொன்னியின் செல்வன் , நாவலை பதிவுகளாக , ரத்தினசுருக்கமாய், சிறப்பாக , அந்த கதையின் விறுவிறுப்பு, சுவை , நளினம் குன்றமால் எழுதி கொண்டு இருக்கும் , வெங்கடேஷ் வீரராகவன், தொடர் மூலம் ரசித்து படித்து கொண்டு இருந்தாலும், இந்த கோயிலுக்கு அருகில் அல்லது தஞ்சை பெரிய கோயில் பிரகாரத்தில், மண்டபத்துக்கு வெளியே, மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு) .
உடையார் வெறும் நாவல் இல்லை. தமிழகத்தினுடைய சிறப்பான வரலாற்றுப் பதிவும் மட்டும் இல்லை. அதை கடவுள் நூல் என்று சொன்னால் மிகை ஆகாது. ராஜராஜனின் உள்மன அலசலை சிறப்பாக வெளிபடுத்திய அற்புதமான நாவல்.
இந்த சிறப்பான கோயில்களை பாத்து விட்டு, உடையாளூரில் உள்ள , பழமை வாய்ந்த லஷ்மிநாரயண பெருமாள், லஷ்மி நரசிம்மர் அமைந்துள்ள , அழகான பெருமாள் கோயிலுக்கு சென்று,சிறப்பான தரிசனம் முடித்து விட்டு, மதிப்புக்குரிய முரளி சகோதரன் வீட்டுக்கு சென்று , அவருக்கும், அவரது மனைவிக்கும் ( என் சகோதரி, பள்ளி ஆசிரியர்) நன்றி கூறி விட்டு, என் காலை கோயில் விஐயத்தை சிறப்பாக முடித்து விட்டு , என் இல்லம் வந்து சேர்ந்தேன். வந்த பிறகு மதிய லஞ்ச்க்கு கத்தரிக்காய்+ தக்காளி பருப்பு குழம்பு, சக்கரை வள்ளி கிழங்கு கறிமது ( Roast) ( மதிப்புக்குரிய என் நண்பர் , ராமலிங்கம் வெங்கட்ரமணியின் மனைவி ( என் அருமை சகோதரி லஷ்மி வெங்கட்ரமணி சொன்ன முறையில் செய்தேன், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றும் இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பயணம் வெற்றிகரமாக முடிய காரணமாக இருந்த உடையாளூர் முரளிக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் தன்னுடைய வீட்டை, தோட்டத்தை , அழகாக , அற்புதமாக பராமரித்து வைத்து இருப்பது போற்றக்கூடியது, அவரது மனைவியோ, வீட்டில் எங்கு பாத்தாலும் , அழகான வண்ணகோலங்களை வரைந்து வைத்திருப்பது மிகவும் சிறப்பானது. அவர் தந்த கும்பகோணம் டிகிரி காபியின் மணம், இன்னும் என் நாசியை விட்டு அகலவில்லை. அது மட்டுமின்றி, அவர்கள் இன்முகத்தோடு, என்னை உபசரித்த வீதம் போற்றக்கூடியது. ( சில தகவல்கள் அந்த ஊர் பெரியவர்கள், முரளி அய்யா, புத்தகங்களின் அடிபடையில் சேகரிக்கப்பட்டவை).
( ஆன்மீக பயணம் தொடரும்).
No comments:
Post a Comment