Friday, November 26, 2021

சந்திரவிலாஸ் ஹோட்டல்...

 80 ஆண்டுகள் பாரம்பரியம் மாறாத நெல்லை மாநகரின் சந்திரவிலாஸ் ஹோட்டல்...

முன்பெல்லாம் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வியாபாரத்திற்கும் , பொருட்கள் வாங்குவதற்கும், வந்து விட்டு சினிமா பார்த்துவிட்டு ,  சந்திரவிலாஸ் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்வதைத்தான் வழக்கமாக வைத்துள்ளார்கள் நம் தாத்தா காலத்து ஆட்கள். 

இந்தப் பதிவை படிக்கின்ற பழங்காலத்து ஆட்களுக்கு , இதனுடைய வரலாறும் சுவாரசியங்களும் நினைவிலாடலாம். இந்த ஓட்டல் முதலாளி உ.வே.சா வழித்தோன்றல் சாமிநாத அய்யர்! தமிழ்த்தாத்தா, உ.வே.சா., பிறந்த அதே நாள், நட்சத்திரம் மற்றும் கிழமையில் பிறந்தவர் இவர்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஓட்டல் , அந்த பழமையுடனே இன்னமும் இருக்கின்றது. 

பழங்காலத்து மேஜை -பழங்காலத்து இருக்கைகள்- கை கழுவும் இடம்-  பழங்காலத்து சர்வர்கள் - என்று 80 ஆண்டுகளின் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கின்றார்கள். பரிமாறுவதற்கு தட்டுக்கள் கிடையாது வாழை இலைதான். மாறாமல் இருப்பது  இருக்கைகளும் சுவர்களும்  மட்டுமல்ல இட்லிகளும் சுவைகளும் அப்படியே  80 வருடத்திற்கு பின்னோக்கிய திருநெல்வேலி மணத்துடனே இருக்கின்றது.

சாப்பிட்டுவிட்டு பில் கேட்க , இன்னமும் அந்த காலத்து பாணியிலேயே ஒரு சின்ன துண்டு பேப்பரில் தொகையை எழுதிக் கொடுத்தனர்.  பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டால்,  ஒரு ஆளுக்கே 200 ரூ வரும். ஆனால் 5 பேர் சாப்பிட்டு முடித்தும் கூட 280 ரூ தான்.

அந்த காபியை பற்றி சொல்லியே ஆகணும். நாக்கிலேயே சுவை ஒட்டியிருக்குதுன்னு சொல்வோமே அந்த சுவையை இன்றுதான் அனுபவித்தேன். தாமிரபரணி தண்ணி மணத்துடனும், சுவையுடனும், சாம்பாரும் மிளகாய்ச் சட்னியும், குருமாவும் ,  அப்படியே திருநெல்வேலி தாமிரபரணி தண்ணி சுவை, திருநெல்வேலி அல்வாவில் இருப்பது போலவே. 

இன்றைய இளய தலைமுறைகள், பழங்காலத்து திருநெல்வேலி சமையலையும் சுவையையும் அனுபவிக்க நினைத்தால் நிச்சயாய் இந்த ஓட்டலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

#food #tirunelveli #hotel #chandiravilas #நிகழ்வுகள்



1 comment:

  1. Sooper O Sooper. Congratulations to the Proprietors! HariHara OM 🕉

    ReplyDelete