Friday, November 26, 2021

உறவுபோட்டமுடிச்சு_26

உறவுபோட்டமுடிச்சு_26

மார்னிங் அபுலூஷன்களை முடித்து விட்டு ஹாலுக்கு வந்து தரையில் அமர்கிறான் பாலாஜி.

'இரு.  காப்பி கொண்டு வரேன்.'

சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்று காஃபி கொண்டு வருகிறாள் கீதா.

'குடிக்கிற சூடா இருக்குன்னு நெனைக்கிறேன் பாலாஜி.  மாமி குளிக்கப் போயிருக்கா.'

காஃபியில் அவ்வளவு சூடு இல்லை.  அவளுக்கு திரும்பவும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று மடக் மடக்கென்று குடிக்கிறான்.

'அப்புறம் கீதா.  அத்த வரலியா?'

'நான் தான் விடாப்பிடியா அம்மாவ தடுத்துட்டேன்.  இப்ப உங்க ரெண்டு பேருக்கும தேவை தைரியம் சொல்ற வார்த்தைகள்.  அம்மா வந்தா அவளுக்கு உங்களோட சேர்ந்து அழத்தான் தெரியும்.'

'ஆமாம் கீதா.  எனக்கு இப்ப தைரியம்தான் முக்கியம்.'

இப்படி ஆரம்பித்தவன் புழியப் புழிய அழுகிறான்.

'ஏய்?  என்ன ஆச்சு?  கண்ண தொடச்சுக்கோ?  அப்பா இப்ப நன்னா தான பேசிண்டிருக்கார்.  ஒண்ணுமில்ல அவருக்கு.  ஏன் மனச போட்டு வருத்திக்கற?'

'இல்ல கீதா.  செங்கிப்பட்டி போயிட்டு வந்ததுலேந்து மனசே சரியில்ல.  அங்க ஒவ்வொரு பேஷண்டும் இருமர இருமல், மூச்சு விட முடியாம கஷ்டப்படறது, சில பேஷண்டுகளோட சொந்தக்காராளே பேஷண்டுகள பார்க்க முடியாம படற அவஸ்தை....  எங்க அப்பாவ அப்படி நெனச்சு.... முடியல கீதா.'

'புரியறது பாலாஜி.  இப்படி நெனச்சுப் பாரு.  ஒரு விதத்துல இதெல்லாம் பார்த்து அப்பாவ அட்மிட் பண்றதுக்கு முன்னாடியே உன் மனசு கொஞ்ச நேரம் அழுதுட்டு அதையெல்லாம் ஏத்துக்கற தைரியத்த கொடுத்துடும் இல்லையா?'

பதில் இல்லை.  மௌனம்.  விசும்பல் ஒலி நின்றாலும் அவன் மனசு அல்லாடிண்டிருந்ததை கீதாவால் உணர முடிந்தது.

'டேய்.  ஃபூல்.  எழுந்துரு.  கண்ண தொடச்சுக்கோ.  உனக்கு கஷ்டமா இருந்தா நான் வேணா செங்கிப் பட்டிலே மாமாவ பார்த்துக்கறேன்.  நீ இங்க அம்மாக்கு தொணையா இருந்துண்டு நிலத்தையும் பார்த்துக்கோ.  மாமாகிட்ட சொல்லிக்கலாம்.'

'வேண்டாம் கீதா.  எட வசதியெல்லாம் அங்க நன்னாத் தான் இருக்கு.  ஆனா இங்க அம்மாக்கு என்னால தைரியம் சொல்லி சமாளிக்க முடியாது.  நான் கலங்கிடப் போறேனேன்னு தான் அம்மா அழுகைய காட்டாம நடிச்சிண்டு இருக்கா.  அப்பாக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ரெண்டு பேரும் அழுதுண்டு இருப்போம்.  அட்லீஸ்ட் நான் அங்க இருந்தாலாவது அம்மா நான் அப்பாவ பார்த்துக்கறேன்னு ஆறுதலா இருப்பா.'

'இத பார் பாலாஜி.  தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத.  டாக்டர் இருக்கார்.  பகவான் இருக்கார்.  ரெண்டு பேர் மேலையும் நம்பிக்கைய வெச்சு நடக்க வேண்டியத பத்தி யோசி.  எல்லாம் நல்லபடியா போகும்.  எனக்கென்னவோ ஒரு மாசத்துல அப்பா நன்னாயிடுவான்னுதான் மனசுல பட்டுண்டே இருக்கு.'

'எங்க அப்பா யாருக்கு என்ன கெடுதி செஞ்சா?  அவருக்கு ஏன் இப்படி நடக்கறது?'

இப்போது கீதா தன் குரலை உயர்த்துகிறாள்.

'ஏய்.. என்ன புலம்பிண்டே இருக்க?  நீ புலம்பறதால அப்பா குணமாயிடுவான்னா புலம்பிண்டே இரு.  ஆம்பள தான நீ.  எங்க அம்மா, அதான் உங்க அத்த, படாத கஷ்டமா நீ பட்டுண்டு இருக்க.  லைஃபுல ஒவ்வொரு குடும்பத்துலேயும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு.  நொடிஞ்சு போய் உட்கார்ந்தா தானா ஸால்வ் ஆயிடுமா என்ன?  அம்மா குளிச்சிட்டு வரதுக்குள்ள வருத்தத்தெல்லாம் மூட்ட கட்டிட்டு நார்மலாகு.  உன்னோட சேர்ந்து அழறதுக்காக நான் இங்க வரல.  உன்னோட ரெஸ்பான்ஸிபிலிடில கொஞ்சம் ஷேர் பண்றதுக்காக வந்திருக்கேன்.  நீ அழுதா கண்ணே அழாதேன்னு கண்ண துடைக்கற பொண்ணு இல்ல நான்.'

'ஆம்பள தான நீ' அவள் சொன்னது தைத்தது அவன் மனசு.  பிறகு அதில் உள்ள யதார்த்த ஞாயத்தை புரிந்து கொள்கிறது.

பேசிக்கொண்டே இருந்தவன் வாசலுக்கு வேகமாக பேய் விட்டு இரண்டு நிமிடங்களில் திரும்ப வருகிறான்.

''தனியா போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணின்டையோன்னோ?  பரவாயில்லயே.  கொழுந்த அழுகை நின்னுடுத்தே.  தட் ஐஸ் குட்.  நல்ல வேளை மாமி வரும்போது நீ அழுதுண்டு இருந்தியான்னா என் புள்ளய ஏண்டி அடிச்சேன்னு என் கிட்ட சண்டைக்கு வந்திருப்பா.'

சிரிப்பு வருகிறது அவனுக்கு.

'இத பார்ரா இந்தாத்து கொழுந்த சிரிச்சுடுத்து.   சரி விடு.  புதன் கிழமை எத்தன மணிக்கு அப்பா கிளம்பணும்?  எப்படி ஏற்பாடு பண்ணியிருக்க?  நானும் கூட வரட்டுமா?'

'வேணாம் கீதா.  சந்தானத்தோட ஃப்ரெண்ட் நீடாமங்கலத்துல வாடக கார் ஓட்டறானாம்.  அவன் கிட்ட சொல்லி கார பாலத்தடிக்கு வரச் சொல்லிடலாம்னு சொல்றான்.  அப்பா வில்லு வண்டியில பாலத்தடி அழச்சிண்டு போனா அங்கேந்து டாக்ஸில ஏறி நேராவே செங்கிப் பட்டி போயிடலாம்.'

'ராகுகாலம் நல்ல நேரம் எல்லாம் பார்த்துண்டியா?'

'கார்த்தால ஆறு மணிக்கு நன்னா இருக்குன்னு சந்தானத்தோட அப்பா சொன்னார்.  இன்னிக்கு நீடாமங்கலம் போய் அவன் ஃப்ரெண்ட பார்த்து அட்வான்ஸும் கொடுத்துட்டு பேசிட்டு வரலாம்னு இருக்கேன்.'

'அட்மிஷன் போது சந்தானத்தையும் பக்கத்துல வெச்சுக்கோ.  இங்க வேல வெட்டி இல்லாம போஸ்ட் மாஸ்டராத்துல சீட்டாடிண்டு தான இருக்கான்.  ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருந்தா உனக்கு கொஞ்சம் அங்க தெம்பா இருக்கும்.'

'ம்ம்ம்.. கேட்டா சரிம்பான்.'

'பணம் காசெல்லாம் தயார் படுத்திட்டியோன்னோ?'

'அப்பாகிட்ட செக்குல கையெழுத்து வாங்கிண்டு நீடாமங்கலம் போகும்போது அங்கேயே பாங்குல ட்ரா பண்ணிட்டு வந்துடறேன்.  உனக்கும் வேணுமோன்னோ இங்க ஆத்துக்கு?'

'எங்கள பத்தி கவலப்படாத.  லீவ் சம்பளத்த அட்வான்ஸா ஸ்கூல்ல கேட்டு வாங்கிண்டு வந்துருக்கேன்.  அதுவே இந்த கிராமத்துக்கு யதேஷ்டம்.'

'அதுக்கு இல்ல கீதா.  சாகுபடி வேலைக்கு வேற வேணுமோன்னோ?  அத சொன்னேன்.'

'ஆமால்ல.  மறந்தே போயிட்டேன்.  மாமாகிட்ட பேசிட்டு ஏற்பாடு பண்ணு.  எனக்கு அந்த செலவப் பத்தி எந்த ஐடியாவும் கிடையாது.'

மாமி பம்ப் செட்டில் குளித்து விட்டு உள்ளே நுழைகிறாள்.

'லேட் ஆயிடுத்து கீதா இன்னிக்கு.  டிஃபன் பண்ணல.  கொஞ்சம் பழேது இருக்கு.  மோர் மொளகாவும் சின்ன சம்படத்துல  வெச்சிருக்கேன்.  நீயும் பாலாஜியும் அதப் போட்டுண்டு பழேத்து கதைய முடிச்சுடறேளா? நானும் மாமாவும் கஞ்சி சாப்ட்டுக்கறோம்.'

'ஒரு பிரச்சனையும் இல்ல மாமி.'

'உன் கிட்ட சொல்றதுக்கென்ன?  நேரம் நெருங்கி வர வர அடி வயத்துல பெரட்டிண்டு பெரட்டிண்டு வர்ரது.  மாமா ஆஸ்பத்திரியிலேந்து நல்ல படியா திரும்பி வரணுமேன்னு ஒரே கவலையா இருக்கு.  சமைக்களதுல விருப்பமே இல்லாம இருக்கு.'

'புரியறது மாமி.  நான் இன்னிக்கு வேணா சமைக்கறேன்.  நீங்க ஸ்லோகம் ஏதாவது படிச்சிண்டு வேணா அமைதியா இருங்கோ.  என்ன பண்ணனும்னு மாத்திரம் சொல்லிடுங்கோ'

'அங்க இருக்கறத வெச்சிண்டு உனக்கு என்ன தோணறதோ அதப் பண்ணு.  என்ன ஒண்ணும் கேக்காத.'

பாலாஜியோட ஃபேவரைடஸ் கத்திரிக்கா வதக்கல், வாழத்தண்டு கூட்டு, தோட்டத்தில் ஃப்ரெஷ்ஷா பறிச்ச தக்காளி போட்டு ரசம்.  வழக்கம் போல மாமாவுக்கு கோதுமை சாதம்.

சமையல் முடிப்பதற்கும் சிவலிங்கம் வருவதற்கும் சரியாக இந்தது.  மாமா சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு விவசாய பாடம் எடுத்தார்.  எது எது எப்ப எப்ப நடக்கணும்னு மாமா சொல்ல சொல்ல குறித்துக் கொண்டார்கள் கீதாவும் சிவலிங்கமும்.

'மாமா, கருப்பன் கத்திண்டே இருக்கான்.  நீங்க ஸீரியஸா விவசாயத்த கத்து கொடுத்துண்டு இருக்கேளேன்னு நடுப்புல போகல.  விட மாட்டான் போல இருக்கு.  'அவன பார்த்துட்டு வரேன்.'

அப்போதுதான் அவளுக்கு கருப்பனுக்காக வாங்கிய மணியும் செயினும் ஞாபகம் வருகிறது.  பையை அவசரமாக திறந்து எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கம் செல்கிறாள்.

'ஏய், கருப்பா.  இங்க பாருடா.. டொட்ட டைண்----'

கருப்பன் கழுத்தை அணைத்துக் கொண்டு மணியை கட்டுகிறாள்.  ஏதோ ஒன்று வித்யாசமாக தொங்குகிறது அவனைப் பொருத்த மட்டில்.  கழுத்தை ஆட்டி ஆட்டி ஒரே சந்தோஷம் அதுக்கு.

'ஏய், எனக்கு வேல இருக்கு.  சும்மா சும்மா கத்தக்கூடாது.  அப்புறம் கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ.'

பருத்திக் கொட்டை கொஞ்சம் வைக்கோல் பிரி ஒண்ணு போட்டோண்ண  சமர்த்தாயிட்டான் கருப்பன்

அப்பாவிடம் செக்கில் கையெழுத்து வாங்கி நீடாமங்கலம் சென்ற பாலாஜி இன்னும் திரும்பவில்லை.

வாசலுக்கு வருகிறாள்.

'ஏதோ மணி சத்தம் கேட்டுதே.  ஸ்லாமிக்கு கற்பூரம் காட்டினியா?'

'இல்ல மாமா, கருப்பன் கழுத்துல மணி கட்டினேன்.  மன்னார்குடில வாங்கினேன்.'

கருப்பனை விட மாமாவுக்கு பரம சந்தோஷம்னு முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது.

'மாமா, உங்களுக்கு நேரத்துக்கு சாப்படணும்.  மொதல்ல நீங்களும் மாமியும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்கோ.'

'ஏன்?  ஞானம் என்னோட உட்கார்ந்து சாப்பிட மாட்டாளே!  இன்னிக்கு என்ன என்னிக்கும் இல்லாத திருநாளா?'

'மாமா, இன்னிக்கு என் சமையல்.  ரெண்டு பேரையும் ஒண்ணா உட்கார வெச்சு சாப்பாடு போடணும்னு என் ஆசை.'

'பகவானே, இவள எங்க மாட்டுப் பொண்ணா கூட்டுண்டு வந்ததுக்கப்பறம் நீ எங்க வேணா கூப்புடு.  வரேன்.'

பரிசேஷணம்.  தம்பதி போஜனம்.  ஞானத்தின் சந்தோஷமும் சேர்ந்து கொண்டது வெட்கத்தை கொஞ்சம் கலந்து கொண்டு.

தொடரும்...

No comments:

Post a Comment