கிராதகன்
😁🌺🌹🌺😁
கிஞ்சுகவாய் அம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடியார்களால் சிறப்பித்துப் பேசப்படும் கோயில்.
இத்திருத்தலத்தில், சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவாக வந்து குருந்தை மரத்தின் அடியிலிருந்து உபதேசம் வழங்கியருளினான். இத்தலத்தில் உள்ள ஆத்மநாதர் (ஆவுடையார்) கோயில் தெற்குப் பார்த்தது. சிவலிங்கம் இருக்காது. பீடம் (ஆவுடை) மட்டுமே இருக்கும். இதனால் இக்கோயிலை ஆவுடையார் கோயில் என்கின்றனர். அன்னை யோகாம்பாளுக்கு உருவம் இல்லை. பாதங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு பார்வதி பரமேசுவரர் அருவமாகவே காட்சியருளுகின்றனர். மாணிக்கவாசகப் பெருமானே உற்சவராக உள்ளார். எல்லாத் திருவிழாக்களும் மாணிக்கவாசகப் பெருமானுக்கே நடக்கின்றன.
இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை. அதி அற்புதமானவை. இச்சிற்பங்களுள் மிகவும் அபூர்வமான சிற்பமாக அதீதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டு சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் இரண்டையும் கம்பிவலை கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதில் “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதப்பட்டுள்ளது.
கிராதகன்
கிராதகன் என்றால் சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவன் என்று பொருள் கூறினர்.
கிராதகன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுத்தல் முதலான தேய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் வலையல் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணுலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியானம் அல்லது belt). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை(?)த் தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.
கிஞ்சுகவாய் அம்மன்
சர்வ அலங்காரத்துடன் கொண்டை. நெற்றியில் அழகாக நாமம். கண் புருவத்திற்கு மேல் புருவத்திற்கு மை தடவிய ஒப்பனை. ஒவ்வொரு காதிலும் மூன்று பெரிய தோடுகள். கிஞ்சுவாய் (இச் சொல்லின் பொருள் தெரியவில்லை). கழுத்தே தெரியாமல் ஆபரணம், மணிமாலைகள். மாராப்பு அணியாத மார்புகள். வலதுகையில் பனையோலைக் கூடை. விரல்களில் நீண்ட நகங்கள்.
இடது கையில் காப்புகளும் வலையல்களும். pracelet. வில்களில் மோதிரம். இடைப்பில் ஒட்டியானம், சர்வ அலங்கார ஆடை. முழங்காலுக்குக் கீழே பட்டை. காலில் தண்டை. கால்விரல்களில் மிஞ்சி.
பாரதப்போரில், அர்சுணன் மகன் அபிமன்யூவைச் செயந்திரன் கொன்று விடுகின்றான். மறுநாள் போர் முடிவதற்குள் பலிக்குப் பலி வாங்கத் துடிக்கிறான் அர்ச்சுணன். செயந்திரனைக் கொல்ல “பாசுபதம்“ என்னும் அம்பு தேவைப்படுகிறது. இதனைச் சிவபெருமானிடமிருந்து பெறவேண்டி அர்ச்சுணன் தவம் செய்கிறான். பார்வதி பரமேசுவரர் கிராதக வேடம் அணிந்து வந்து அர்ச்சுணனுக்கு பாசுபத ஆயுதத்தை அருளுகின்றனர் என்பது பாரதக் கதை.
கோயிலில் இச்சிற்பத்தின் அருகே “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிராதகனிடம் பாசுபத ஆயுதம் போன்றதொரு ஆயுதம் எதையும் காணவில்லை. மேலும், கிராதகன் அருகில் அர்ச்சுணன் போன்று யாரும் காட்டப்பட வில்லை.
அர்ச்சுணனுக்கு பாசுபத ஆயுதம் வழங்க வந்த சிவபெருமான் பன்றிமேல் அம்பு எய்திருப்பார். ஆனால் இச்சிற்பத்தின் அருகே பன்றியேதும் காட்டப்பட வில்லை. மேலும் வாளால் ஒரு மனிதனையே கொன்றிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த அரிய சிற்பம் கிராதகன் அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. கோயிலில் இருந்த நிருவாகிகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.
இந்த அரிய சிற்பங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்க்க இயலாதவர்கள் http://kalairajan26.blogspot.in/2012/07/blog-post_07.html
இந்த வலைப்பூவில் காணலாம்.
No comments:
Post a Comment