உறவுபோட்டமுடிச்சு_36
சாகுபடி துவக்க பூஜைக்கான ஏற்பாடுகளை சிவலிங்கத்துடன் கடைசியாக ஒரு மேற்பார்வை செய்து விட்டு ஆத்துக்குள் வருகிறாள் கீதா.
'மாமி, நீங்களும் நாளைக்கு வயலுக்கு வரணும். பூஜை நாளைக்கு தெரியுமோன்னோ? முதலியாரும் அவர் ஆத்துக்காரியும் வரேன்னு சொல்லிட்டா. சந்தானத்தாத்த மாத்திரம் தான் அக்ரஹாரத்துல கூப்பிட்டிருக்கேன்.'
'நான் எதுக்கு? மாமா என்ன இதுக்கெல்லாம் என்ன கூப்டுண்டு போற வழக்கமில்ல. நான் வரல.'
'மாமி, நீங்க வரேள். கண்டிப்பா வரேள். அதெல்லாம் முடியாது. வந்து தான் ஆகணும். மாமா சார்புல நீங்க வந்து வேலை செய்யப்போற ஆட்கள எல்லாம் ஆசிர்வாதம் பண்ணி அவாள ஊக்கப் படுத்தறேள்.'
வர மாட்டேன் என்று ஞானத்தின் வாய் சொன்னாலும் கீதா அவளை அழைத்த முறை ஒரு விதமான கர்வத்தையே கொடுத்தது.
மறுநாள் பூஜை தினம். ஒன்பது மணிக்கு பூஜை ஆரம்பிக்கலாம்னு சிவலிங்கம் சொல்லிட்டான்.
பரபரப்புடன் ஐந்து மணிக்குள் கீதா எழுந்து வாசலில் ஒரு படிக்கோலம் போட்டுவிட்டு வருவதற்கும் ஞானம் காப்பியை ரெடி பண்ணுவதற்கும் சரியாக இருந்தது.
'சாதாரணமா வரலாமோன்னோ?'
'மாஆஆஆஆ மி. சாதாரணமா வருவாளா. நீங்க பட்டாமணியாரோட தர்ம பத்தினி. சும்மா ஒரு பட்டுப்புடவைய கட்டிண்டு கையில ரெண்டு கழுத்துல ரெண்டு மூக்குல ரெண்டு காதுல ரெண்டு போட்டுண்டு வரணும்.'
'போடி. அப்படியெல்லாம் மாட்டேன். இது கிராமம். ஒன் ஊரு மன்னார்குடின்னு நெனச்சியா? அக்ரஹாரத்துல எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பா.'
'பார்த்தா பார்க்கட்டுமே. பூஜைன்னு சொல்லுவோம் கேட்டாக்க. நம்ம இஷ்டம். நாம போட்டுக்கறோம்.'
ஞானமும் இந்த கிராமத்தில் தன்னை அலங்கரித்து எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன? கடைசியாக அலங்கரித்துக் கொண்டது பாலாஜியின் உபநயனத்தின் போது. அதுக்கப்பறம் சீர்காழியில நடந்த ரவியோட கல்யாணத்துக்கு அப்புறம்தான்.
'ஏண்டி, நீ நல்லதா போட்டுக்க ஒண்ணும் கொண்டு வரலையா?'
'இருக்கட்டும் மாமி. நான் உங்காத்து நிலத்துல உழுது வேல பார்க்கப் போறேன். நீங்க முதலாளி. நான் தொழிலாளி. நான் சாதாரணமா வந்தா போதும்.'
'உழப்போறியா? உழறதுன்னா சும்மாவா? கையும் காலும் கழண்டு போயிடும். நான் இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டேனாக்கும். அப்புறம் சீதா என் கிட்ட கோச்சுண்டா யார் பதில் சொல்றது.'
'சும்மா சொன்னேன் மாமி. அதெல்லாம் பண்ண மாட்டேன்.'
மனநிறைவுடன் நிலத்திற்கு பூஜை நடந்தது. இது நிலத்தில் வேலை பார்ப்பவர்கள் செய்வது. மந்திரம் இல்லை. சாஸ்திரிகள் இல்லை.
ஒரு பெரிய வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் பொரி கடலை எல்லாவற்றையும் பரப்புகிறார்கள். ஒரு செங்கல்லை சுத்தமாக்கி மஞ்சள் குங்குமம் வைத்து பூமாதேவியாக பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்த உணர்வுடன் பூஜை செய்கிறார்கள்.
முதலியார் குடும்பத்தினர் அன்று சிறப்பு விருந்தினர்கள். எல்லா விவசாயிகளும் ஒவ்வொருவராக சற்றுத் தொலைவில் இருந்து கொண்டே ஞானாம்பாள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.
'கீதா பொண்ணு, கலப்பைய எடுத்துகிட்டு ஒரு ப்போஸ் கொடும்மா. ஒரு ஃபோட்டோ எடுத்து உங்க மாமா கிட்ட காமிக்கறேன் திருவெய்யாறு போகும் போது.'
'அண்ணி நீங்களும் கீதாவும் பக்கத்துல பக்கத்துல நில்லுங்க. இன்னொரு ஃபோட்டோ.'
எடுத்துத் தள்ளி விட்டார் தன்னிடமிருந்த க்ளிக் த்ரீ காமராவை வைத்து.
ஞானத்தின் முகத்தில் ஒரே சந்தோஷம்.
உழவுப்பணிகள் துவங்கியாச்சு. ஒரு வேலிக்கு மூன்று ஜோடி காளைகள். ஏற்கனவே தாமதித்து ஆரம்பிப்பதால் உழவுப் பணிகளில் துரிதம் காட்டப்படுகிறது. இயற்கை உரங்களும் மண்ணில் கலக்கப்பட்டு உழப்படுகின்றன. பத்து நாட்களுக்கு குறைவில்லாமல். ஆர்வத்தினாலும் எடுத்துக் கொண்ட பொறுப்பினாலும் தினமும் வருகிறாள் கீதா.
நாட்கள் நகர நகர விவசாய சுமைகளும் கூடுகின்றன கீதாவிற்கு.
சூர்ய உதயத்திற்குள் கழனிக்கு சென்று விடுவாள். யாரிடமாவது டிஃபனை கொடுத்தனுப்புவாள் ஞானம். மதியம் சாப்பிட வருவாள். மீண்டும் கழனி. நான்கு மணிக்கு ஆத்துக்கு வருவாள். சிறிது ஓய்வு. பிறகு கோவில். பம்பரமாகிக் கொண்டிருந்தாள்.
இயற்கையை அவள் ரசிக்க ரசிகக இயற்கை அவளோடு பேசத் துவங்கி விட்டது.
இதற்கிடையில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்படுகிறார் சபேஸய்யர்.
டாக்டர் பசுபதி அழைத்து விட அவர் அறையினுள் செல்கிறான் பாலாஜி. அவருடன் டாக்டர் கீர்த்தி வாசனும் இருக்கிறார்.
'பாலாஜி, குட் நியூஸ். ஒன்னோட அப்பா ஃபாஸ்டா ரெகவர் ஆயிண்டு வரார். மேக்ஸிமம் சளி எடுத்தாச்சு. சளி டெஸ்டுல பெரிய அளவு தொற்று இல்ல. இருந்தாலும் டிஸ்ச்சார்ஜ் பத்தி இப்ப யோசிக்க முடியாது.'
'ரொம்ப த்தேங்க்ஸ் டாக்டர். உங்க ரெண்டு பேரோட முயற்சிதான் இதுக்கெல்லாம்.'
இப்படி சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டு அழுகிறான்.
'என்ன புள்ளையாண்டான் நீ. பொசுக்கு பொசுக்குன்னு அழற எதுக்கெடுத்தாலும். ஆம்பள புள்ள தைரியமா இருக்க வேண்டாமா? நீ அழுதுண்டிருந்தேனா உங்க அப்பா உன்ன பார்த்து அழுவார். அப்புறம் இங்க சிவாஜி கணேஸன் படம் பார்க்க உங்க ஸ்பெஷல் வார்டுக்கு எல்லாரும் வந்துடுவா. அப்புறம் எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சப் பாரு.'
'ஸாரி டாக்டர். ஐ அம் ஸோ அட்டாச்ட் டு ஹிம்.'
'நீ இப்படி சொல்ற. ஆனா அவர் என்னடான்னு கீதா எங்க வரலயான்னு கேட்டுண்டிருக்கார்.'
சிரிப்பு வந்துவிடுகிறது பாலாஜிக்கு.
'கீர்த்தி, இனிமே பாலாஜி அழுதான்னா பூவனூருக்கு இவன அனுப்பிட்டு இவனோட அத்த பொண்ண இங்க வரச்சொல்லு. சிவாஜி ஜெமினி படம் நிறைய பார்ப்பியோ பாலாஜி.'
அறையில் சிறிது சிரிப்பொலி முடிந்தவுடன் டாக்டர் கீர்த்தி வாசன் ஆரம்பிக்கிறார்.
'ஜோக்ஸ் அப்பார்ட் பாலாஜி, இந்த நோய் ஆள உலுக்கி எடுத்துடும். வெயிட் லாஸ் ஹெவியா இருக்கும். இதுக்குப் பேரே உருக்கி நோய்தான். அதனால அவரோட இன் டேக்குக்கு நீங்க தான் பொறுப்பு. வேளா வேளைக்கு மெடிஸின்ஸ் ப்ளஸ் ந்யூட்ரிஷியஸ் ஃபுட் இது ரெண்டும் ரொம்ப முக்கியம். கூடவே அவர மன ரீதியா தெம்பூட்டிகிட்டே இருக்கணும்.'
'சரி டாக்டர். நான் கவனமா பார்த்துக்கறேன்.'
'ரெண்டு நாளுல டயட் ஆரம்பிச்சுடுவேன் ஸ்லோவா. நான் டீடெய்ல்டா உனக்கு புரியற மாதிரி டயட் ச்சார்ட் போட்டுக் கொடுத்துடறேன்.'
'சரி டாக்டர். ஏற்கனவே சொல்லிக் கொடுத்த ஸேஃப்டி ப்ரிகாஷன்ஸ்ல எந்த காம்ப்ரொ மைஸும் கூடாது. சரியா?'
'அப்புறம் பாலாஜி. இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு கோழையும் சளியும் வந்துண்டே இருக்கும். பேன்ல அவர துப்ப சொல்லி அடிக்கடி நன்னா வாஷ் பண்ணி பண்ணி வெச்சுக்கணும். அந்த சமயத்துல யூ மஸ்ட் ப்ரொடெக்ட் யூவர்ஸெல்ஃப். என்ன புரிஞ்சுதா? எல்லா சமயத்துலயம் நர்ஸுகள எதிர் பார்க்க கூடாது.'
'கீர்த்தி. என்னமோ எனக்கு பாலாஜிய முதல் முதல்ல பார்த்த அன்னிலேந்தே எனக்கு பிடிச்சு போச்சு. வெரி லவ்வபிள் ஹி இஸ். பாவம் அப்பாவோட ஹெல்த் இஷ்யூனால மேற்கொண்டு படிப்பு தடை பட்டுடுமோன்னு த கவலையா இருக்கான். ஒரே பையன். ஏஜட் மதர் வேற.'
'ஓ. டோண்ட் ஒர்ரி பாலாஜி. சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.'
டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு ஸ்பெஷல் வார்டு வருகிறான். அப்பாவிற்கு முன்னால் கர்சீஃபை வாயில் கட்டிக்கொண்டு வருவைதக் கூட மன வேதனையுடன் தான் சசித்துக் கொண்டிருந்தான்.
'பாலாஜியா? கீதா வந்திருக்காளா? உள்ள கூப்படறது தான அவள.'
அவர் குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் போய்விட்டது.
'ஏம்ப்பா கீதாவ பார்க்கணும் போல இருக்கா?'
அவர் கையில் அவள் கட்டிவிட்ட ரக்ஷையையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவர் இப்போது அழுகிறார்.
நோய்வாய்ப் பட்டிருப்போரிடம் இது தான் பிரச்சனை. எதையெதையோ நினைத்து குழம்பிக்கொண்டே இருப்பார்கள்.
'என்னப்பா நீ. டாக்டர் உங்கள தைரியமா இருக்க சொன்னாரோன்னோ? முதலியார் இந்த வாரம் வருவார். அவர் கிட்ட சொல்லி அனுப்பி அம்மாவையும் கீதாவையும் வந்து பார்க்க சொல்றேன்.'
இதைக் கேட்டவுடன் உதட்டில் ஒரு சிறிய இழைச் சிரிப்பு.
தொடரும்..
No comments:
Post a Comment