Sunday, November 28, 2021

இன்வெர்ட்டர் பாட்டி

 இன்வெர்ட்டர்  பாட்டி 

வீட்டில் இன்வெர்டர்  உண்டு. ஆனால் கரெண்ட் போனவுடன் சில விளக்குகள் மட்டும் தொடர்ந்து எரிய , அவசரமாக அந்த விளக்குகள் எனது உள்ளாட்சி துறையால் அணைக்கப்பட்டன. 

''இன்வெர்ட்டர்தான் இருக்கே. எதற்கு விளக்கை அணைக்கிறே ? '' -- என்று கேட்டவுடன், ''பொறுத்திருந்து பாருங்கள் !  விடை  கிடைக்கும்'' --  என்று பதில் வந்தது. 

கரெண்ட் போனவுடன், பல நாட்களாக திறக்காத எதிர் வீட்டு கதவு திறந்து, ஒரு பாட்டி தனது கண்ணாடியை மூக்கின் மீது உயர்த்தியபடி, எட்டி எங்கள் வீட்டை பார்த்தார். 

''உங்க வீட்டுல கரெண்ட் இல்லையே ? - பாட்டி கேட்டார். 

'இல்லை' என்று அவசரமாக மறுப்பு அறிக்கை எங்கள் வீட்டிலிருந்து வெளியிடப்பட்டது.

  ''அப்பாடி ! எதிர் வீட்டுலயும் கரெண்ட் இல்லையாம் !'' -- என்று கூறிவிட்டு, படாரென்று கதவை சாற்றினார் பாட்டி.

பாட்டி கதவை மூடிக்கொண்டதும், எங்கள் கதவை தாளிட்டு விட்ட எனது உள்ளாட்சி துறை, ,  ''இப்ப போடுங்க இன்வெர்ட்டரை ! அந்த பாட்டி வெடிக்கண்ணி ! நம்ம வீட்டுல இன்வெர்ட்டர்  இருக்குனு தெரிஞ்சா, அவ்வளவுதான். '' - என்று கூறப்பட்டது. 

ஜன்னல் வழியாக எட்டி பாத்தேன். பாட்டி வீட்டில் இப்போது மங்கலாக வெளிச்சம். ஒரு வேளை, பாட்டி வீட்டிலும் இன்வெர்டர் இருக்கும் போலும். 

  ''எதிர்வீட்டு பத்திரிகையாளன் வெடிகண்ணன் என்று  சொல்லி இன்வெர்ட்டரை off செய்துவிட்டு, எங்கள் வீட்டில் விளக்கு எரியவில்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு,  பிறகு இன்வெர்ட்டர்-ரை ஆன் செய்திருப்பார் பாட்டி  

நேராக இருக்க வேண்டிய  அக்கம்பக்க மனித உறவுகளை கரெண்ட் போகையில் மட்டும், தலைகீழாக காண செய்வதால்தான் , அதன்  பெயர்   invertor என்று வைத்திருப்பார்களோ ?

நம் வீட்டில் பெருச்சாளி ஓடினாலும்  பரவாயிலை. அண்டை வீட்டில் அணில் ஓடியது என்பது அறிந்தால்,   'அப்பாடி' என்றுதான் முதலில் கூறுகிறார்கள்.

காலச்சக்கரம் நரசிம்மா

No comments:

Post a Comment