Sunday, November 28, 2021

பெயர் அடையாளம்:

 காயத்ரி ஹரிஹரன்

        பெயர் அடையாளம்:

‌ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருந்தாலும் ஒருவருடைய பெயர் ஒரு முக்கியமான அடையாளமாகும். அதை மாற்றி கூப்பிட்டா யாருக்கும் பிடிக்காது.  முன்னாடி 1950 வரை குழந்தைகளுக்கு பாட்டி தாத்தாவின் பெயர், அல்லது கடவுள் பெயரை வைத்தார்கள். பிறகு சினிமா நட்சத்திரங்கள், அல்லது புகழ் பெற்ற நாவல் கதைகளில் வரும் முக்கிய கேரக்டர்கள் பெயர்கள் வைக்கப்பட்டன. இப்போது அர்த்தம் தெரியாவிட்டாலும் சமஸ்கிருத உச்சரிப்பில் இருந்தால் போதும். சுத்த தமிழ் பெயர்கள் அனேகமாக காணாமல் போய் விட்டது. என்  ஜாதகப் பெயர் மரகதவல்லி (பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அம்மன் பெயர்) என்று என் தாத்தா வைத்தாலும் கூப்பிடும் பெயராக  என் அப்பாவின் கனவில் தோன்றிய பெயராகிய  காயத்ரி என்று வைத்தார். 1952 ல் அது ஒரு அபூர்வமான பெயர். 

குன்னூருக்கு அப்பா மாற்றலாகி வந்த போது புது ஸ்கூலில் சக மாணவிகள் என் பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு kகாவேரி, கீதா, கிரிஜா, பார்கவி என்று அழைப்பார்கள். இப்போ அந்தப் பெயர் ரொம்பவும் சாதாரணமாகிவிட்டது.  என் முதல் இரு குழந்தைகளுக்கும் என் மாமனார் மாமியார்தான் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். மூன்றாவது, 1983 ல் என் சின்னப் பெண் பிறக்கும் முன், காலை ஒரு எட்டு மணி இருக்கும் அப்போ எனக்கு ஜனனி என்ற பெயர் தோன்றிற்று. சாயங்காலம் என் கணவர் ஆபீஸிலிருந்து வந்தவுடன் பிறக்கும் குழந்தைக்கு ஜனனி என்று வைக்கலாம் என்று தனக்கு தோன்றியதாகச் சொன்னார். பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று தெரியாத போதிலும் ஜனனி என்ற பெயரை இரண்டு பேரும் ஒரே நாளில் தனித்தனியே நினைத்தோம்.  அப்போது  ஜனனி என்கிற பெயர் ரொம்ப அபூர்வம் தான்.  இப்போது அதுவும் ரொம்ப சகஜமாக ஆகிவிட்டது. 

என் மகனுக்கு முதல் குழந்தை பிறக்கும் முன் மகனும் மருமகளும் லலிதா சஹஸ்ரநாமம் விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் படித்தார்கள், பிடித்த பெயராக, பெயரைத் தேர்ந்து எடுக்க வைப்பதற்கு.  நானும் அவ்வப்போது எனக்கு தோன்றிய பெயரை எல்லாம் சொன்னேன் என் ஆத்துக்காரர் ஏன் இப்படி  கஷ்டப்படுகிறீர்கள்..பேசாமல் எங்கள் பிள்ளை விஜய் பெயரின் முதல் எழுத்தையும் மருமகள் பாவனா பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து விபா என்று பெயர் வையுங்கள் என்று சொன்னார். குழந்தைகளும் அதை  ஏற்றுக்கொண்டு விபா என்றே பெயர் வைத்தனர். 

என் வீட்டுக்கு திருடு போனதை விசாரிக்க ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரது பெயரை நான் கேட்ட பொழுது புலனடக்கன் என்று சொன்னார். ஒருமுறைக்கு இருமுறை கேட்டேன் முதலில் புரியவில்லை அப்புறம்தான் தெரிந்தது புலன்களை அடக்குபவர் என்று!! அவர் பெற்றோர் மிகுந்த ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் என்று நம்புகிறேன்.  இந்தப் பெயர் வடக்கில் ஜிதேந்தர் என்று  சொல்லுவார்கள்.  ஜிதேந்திரா என்று ஒரு ஹிந்தி நடிகர் கூட உண்டு. 

கல்கத்தாவில் இருந்தபொழுது என் பெங்காலி தோழிக்கு பெயர் ஜட்னா. அதன் அர்த்தம் அருவி. அவர்கள் நிறைய இயற்கையை ஒட்டிய  பெயர்களை  வைப்பார்கள். கரிமா(Garima), மடால்ஷா (Madalsha) என்ற பெயரை கேட்டபொழுது, ஸ்டைல் பெயர் என்று நினைத்தேன். பிறகுதான் கரிமா அணிமா லகிமா முதலியவை அஷ்டமா சித்திகளின் பெயர் என்று தெரிந்தது. 

பிறகு பாகவதம் கேட்கும் பொழுது  மதாலசா என்ற ஒரு ராணியைப் பற்றிய கதை கேட்டேன். அந்த மதாலசா தான் இந்த மடால்ஷாவாக ஆகிவிட்டது என்று புரிந்தது. இதைத்தவிர நெஞ்சு தைரியம் என்ற பெயரும் திருநெல்வேலி தூத்துக்குடி பக்கங்களில் கேட்டிருக்கிறேன். அமெரிக்க செவ்விந்தியர்களின் பெயர்கள் சிட்டிங் புல் ( Sitting Bull), பிரேவ் ஹார்ட் (Brave Heart) என்றெல்லாம் இருக்கும்.  

பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணின் பெயர் கடம்ப வன வாசினி. அதை யாருக்கும் சொல்லத் தெரியாமல் இஷ்டத்திற்கு கூப்பிடுவார்கள்.

கல்லூரியில் நீலாயதாட்சி என்ற பெண்ணின் பெயரை உச்சரிக்க லெக்சரர் திணறுவார் 

மண்ணாங்கட்டி என்ற பெயர் போன்று ஸ்டோன் என ஆங்கில பெயரும் உண்டு

No comments:

Post a Comment