பெல்காமில் மஹா பெரியவா.
ஒரு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு குடும்பத்தோட வந்த போது கர்நாடகாவில் உள்ள பெல்காமில் என் friend ஆத்துல தங்கி இருந்தேன். அப்ப என் friend எங்களை ஒரு மந்திர்க்கு (Gurudev Mandir, Hindwadi, Belgaum) அழைச்சுண்டு போனா. உள்ளே நுழைஞ்சதும் எங்களுக்கு அப்படி ஒரு ஆச்சர்யம். மந்திர் உள்ளே ஒரு அழகான தியான அறை. அங்கே சில படங்கள் இருக்க நம் மஹா பெரியவா படமும் பெரிசா இருந்தது. புஷபத்னாலும் மாலையாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மஹா பெரியவா படம் - அவர் முன் சுடர் விட்டு எரியும் விளக்கு என தத்ரூபமாக இருக்க, என் கண்னுல கண்ணீர் வழிய தன்னிச்சையா கைகூப்பி மெய் மறந்து நின்னேன்.
அமைதியான அறை தெய்வீகமான சூழல்; அழகாக தியானம் செய்ய வசதியாக மெத்தை திண்டு என ரொம்ப நேர்த்தியா இருந்தது. பலர் அங்கு தியானம் செய்துக் கொண்டிருக்க நாங்களும் அமர்ந்தோம். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மெய் மறந்து இருந்தேன். வெளியே வந்த போது மனசும் உடம்பும் அவ்வளவு லேசா இருந்தது. அந்த மந்திர்ல அந்த மந்திர் சார்ந்த குருமார்கள் படங்கள் இருக்க பெரியவா படமும் அங்க இருக்க எனக்கும் என் husband க்கும் பெரியவா படம் இங்க எப்படி வந்தது, அவர் தங்கினாரனு பல கேள்விகள். தெரிஞ்சுக்கலாம்னு office ல கேட்டோம். அங்க இருந்தவர் எனக்கு தெரியாது இதுக்கு முன்னாடி இருந்தவருக்கு தெரியும்னு சொன்னா. எங்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட பழைய officer நம்பரை கஷ்டப்பட்டு வாங்கி அவரை சந்திச்சோம், அவர் சொன்னது:
மஹா பெரியவா பெல்காம் வந்த போது இந்த மந்திர்ல பல நாட்கள் தங்கி இருந்தா. மஹா பெரியவர் இங்க வந்த போது கடுமையான வறட்சி. தண்ணீர் இல்லாம மக்கள் அவதிப்பட்டுண்டு இருந்தா. அப்ப பெரியவா இங்க இருந்த பெரியவர்களிடம் ஏன் bore போடலாமேனு சொன்னா. அதுக்கு அவா இந்த இடத்துல bore போட முடியாதுன்னும் , நாங்க வல்லுனர்கள கூப்பிட்டு முயற்சி செய்தோம். அவா test பண்ணிட்டு லாயக்கு இல்லைனு சொல்லிட்டா. சில இடங்கள்ல போட்டும் பார்த்தோம் ஆனா தண்ணி கிடைக்கலனு சொன்னா. அப்படியே வெளில உக்கார்ந்துண்டு இருந்த பெரியவா ஒரு சின்ன கல்லை தூக்கி போட்டு கல்லு விழுந்த இடத்துல bore போடுங்கோனு சொல்ல , அந்த பெரியவர்களும் பணம் திரட்டி bore போட்டா. கொஞ்சம் அடி தூரத்லயே தண்ணி பொத்துக் கொண்டு வந்தது. Bore போட்டும் தண்ணி கிடைக்காத இடத்துல எப்படி இப்படி தண்ணி கிடைச்சுதுனு எல்லாருக்கும் ரொம்ப ஆச்சர்யம். அப்படி ஒரு அதிசயத்தை மஹா பெரியவா நிகழ்த்தினார்னு அவர் நெகிழ்ந்து கண்ணீரோட சொல்ல எங்கள் கண்களும் நிறைந்தன. அங்க pump set போட்டதுல அத்தனை ஜனங்களுக்கும் அது உபயோகமா இருந்தது. மேலும் அவர் தங்கி இருந்த போது அக்கம் பக்கம் கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் பாத யாத்திரையாவே நடந்து போவா. அவர் போன இடமெல்லாம் மழை பெய்யும். மழையே பார்க்காத பூமி இவர் தங்கி இருந்த பொழுது இங்கையும் அக்கம் பக்க கிராமங்களிலும் அத்தனை மழை பெஞ்சது.
போற இடங்கள்ல அவர் நிகழ்த்திய அற்புதமும் அதிசயமும் அவ்வளவு இருக்கு. பெரியவா தங்கி இருந்த போது இந்த மந்திர் லைப்ரரி in charge ஆ இருந்தவர் மஹா பெரியவா ஊரை விட்டு போகும் வரை கூடவே இருந்து அவருக்கு பணியாளராவும் இருந்தார். அவர் எனக்கு மிகவும் தெரிந்தவர். மிகவும் வயதானவர். நான் இந்த மந்திர் office in charge ஆ இருந்தப்ப அவரும் இங்க இருந்தார். அவர் மூலம் தான் இது எல்லாம் தெரிஞ்சுண்டேன். பெரியவா camp முடிஞ்சு போனப்பறமும் எத்தனையோ ஜனங்க பெரியவாளத் தேடி வருவாளாம். அவா இவர்ட்ட அவா குடும்பத்தில பெரியவா பண்ண அற்புதத்த சொல்லிட்டு போவாளாம். எங்களுக்கு அவர் சொல்ல சொல்ல உடம்பு புல்லரித்துவிட்டது.
மேலும் தொடர்ந்தவர்: சில வருடங்களுக்கு முன் நான் மந்திர்ல வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். வந்தவர் என் அனுமதி பெற்று அந்த அறைக்கு சென்றார். அங்கு இருந்த சிறு மஹா பெரியாவா படத்து முன்னாடி கண் கலங்கி நின்றவர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அங்கேயே உட்கார்ந்து விட்டார். நான் ஒட்டி இருந்த office room ல வேலைப் பார்த்துண்டு இருந்தேன். பின்னர் அவர் மெல்லிய குரலில் பாடும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து என் ரூமுக்கு வந்தவர் பெரியவா இங்கு தங்கி இருந்த document இருக்குமே அதை பாக்கலாமா என்றார். அப்படி ஒரு ஒளியுடன் இருந்த அவரை என்னால் நிமிர்ந்து கூடப் பார்க்க முடியல. அவர் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாம தேடினேன். அவர் தங்கிய நாட்கள் மற்றும் சில குறிப்பு இருந்தது. அத்துடன் Hindu பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டிங்கும் இணைந்து இருந்தது. அதைக் காண்பித்தேன். பின்னர் அவரிடம் உங்களுக்கு இந்த இடம் எப்படித் தெரியும்னு கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டுப் போனவர் மீண்டும் 15 நாட்கள் கழிச்சு திரும்பி வந்தார். அந்த அறையை தியான அறையாக மாற்ற அனுமதி தருவீர்களா எனக் கேட்டார். நான் directors யிடம் அழைத்துச் செல்ல அவர்கள் சம்மதமும் பெற்றார். 3 மாதத்தில் அறையை புதுப்பித்து தியான அறையாக மாற்றி சிறிய அளவில் இருந்த மஹா பெரியவர் படத்தை பெரிய அளவில் மாற்றினார். இவை அனைத்தையும் பொறுப்பு எடுத்து செய்தவர் ஒரு வட நாட்டு தொழில் அதிபர். அவர் வேலை முடியும் வரை தன் தொழிலையும் ஒதுக்கி விட்டு சலிக்காது வந்து வந்து பார்த்தார். அனைத்தும் முடிந்து ஸ்தாபன பூஜையும் அவ்வளவு சிறப்பாக நடந்தது. நிறைய பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள். பின்னர் நடந்த குரு பூர்னிமா பூஜையும் வெகு சிறப்பாக அன்னதானத்துடன் நடை பெற்றது. பல வெளி நாட்டு பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இப்ப பெரியவா பக்தர்கள் பலர் இங்க வர ஆரம்பிசுட்டா.
சரியாக குரு பூர்னிமா முடிந்த ஒரு மாதத்தில் பௌர்னமி அன்று ஒரு மஹான் (எனக்கு மஹான் என சொல்லத்தான் தோன்றுகிறது, பின்னர் அவர் சித்த புருஷர் எனத் தெரிந்துக் கொண்டேன்) முட்டிக்கு மேல் கச்சமிட்டுக் கட்டிய காவி வேட்டியும் மேல் துண்டுமாக வந்தார். அவர் உருவில் ஒரு ஒளியும் சக்தியும் இருந்தது. அது மதிய வேளை. வந்தவர் நேரே த்யான அறைக்குச் சென்று பெரியவா முன் அமர்ந்தார், நான் அவரை எதுவும் கேட்கவில்லை. அவர் அமர்ந்த பின் அறையை விட்டு வந்து விட்டேன். என்னால் அங்கு நிற்கக் கூட முடியவில்லை. சில மணிக்குப் பின் வெளியே வந்தவர் எங்கள் அலுவலக பாதுகாவலரின் மனைவி கொண்டு வந்துக் கொடுத்த நீரை மட்டும் பருகி விட்டுப் போய் விட்டார். அவர் எப்படி வந்தார் போனார் என்பது கண்கூடாப் பார்த்த எனக்கு இன்னும் ஆச்சர்யமா இருக்கு (சொல்லும் போதே அவர் உடல் சிலிர்த்தது.) இத்தனை சக்தி வாய்ந்தது இந்த தியான அறை என்றார். கேட்க கேட்க எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது.
இந்த அறையை புதுப்பித்தவரைப் பற்றி சொல்ல முடியுமா எனக் கேட்டேன். அவர் சொன்னது. அவர் பல நாடுகள் ஊர்கள் என பிரயாணம் பன்றவர். பெரியவாளை குருவாக அடைந்து அவர் வழிக் காட்டுதலின்படி உள்ள சக்தி வாய்ந்த spiritual person. அவர் இங்கு வருவதற்கு சில மாசங்களுக்கு முன்னாடி பெரியவா தியானத்தில் இந்த மந்திரைக் காண்பிச்சிருக்கா. பெல்காம் வந்த போது மந்திர்க்கு போ என பெரியவா சொல்ல இதைக் கண்டுபிடிச்சு வந்தார். அவருடன் பழகிய போது தான் மஹா பெரியவா பத்தின பல ரகசியங்களையும் அதிசயத்தையும் தெரிந்துக் கொண்டேன். மஹா பெரியவா மீது எனக்கு பக்தியை ஊட்டியவர் அவர்தான், மஹா பெரியவா என்கிற தெய்வத்தை காண்பித்தவர் அவர் என்பதால் அவரைக் குருஜின்னு தான் கூப்பிடுவேன். ஆனால் அவர் அப்படி கூப்பிடாதிங்கோ குருவும் தெய்வமும் மஹா பெரியவா ஒருவர் மட்டும்தான் என்று சொல்லுவார். பின்னர் பல பக்தர்கள் மூலம் மஹா பெரியவா அவருள் இயங்கியும் அவரை இயக்கியும் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று அறிந்துக் கொண்டேன். அதை பல முறை இங்கு வரும் போது கண்கூடாக பார்த்தும் இருக்கேன். அவர் தொடர்புடைய மஹா பெரியவா பக்தர்கள் தான் இதை ஏற்று செய்தார்கள். அவ்ர்களும் கடைசி வரை தங்களை வெளிப் படுத்தவில்லை. பல நாட்டு மக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். வலது கை செய்வது இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது என பெரியவா சொல்லுவா அதனால யாரையும் வெளிபடுத்தாதீர்கள் என்பார் அவர்.
இப்படியும் அமைதியாக ஒரு செயலை செய்து விட்டு அடக்கமாக இருக்கும் அவர்கள் உண்மையான மஹா பெரியவா பக்தர்கள் தான் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது மனசுக்கு சந்தோஷமா இருந்தது. அது எங்களுக்கு ஒரு அனுபவமாகவும் பாடமாகவும் இருந்தது.
No comments:
Post a Comment