Friday, November 5, 2021

மறு ஜென்மம் பற்றி சுஜாதா

 # *மறு ஜென்மம் பற்றி சுஜாதா *

சுஜாதா மரணத்தைப் பற்றி (அது இல்லாமல் ஏது மறுஜென்மம்?), மறுபிறவியைப் பற்றிக் குறிப்பிட்ட பதிவுகள் சில இணையத்தில் பீஸ், பீஸாக ஆங்காங்கே இருந்தன. அவற்றை ஒன்று சேர்த்து இதோ: 

*மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)*

ஹாலிவுட் இயக்குனர் / நடிகர் உடி ஆலன் “எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.  ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்” என்றார்.

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ?  இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ?  சாவை வெல்ல முடியுமா ?  நாம் சாசுவதமாக வாழ முடியுமா ?என்பவை 

அந்தக் கேள்வியின் பல வடிவங்கள்.  நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது.  இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன்.  அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன.  

இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night  Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் — 

“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?  நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ?  உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ?  இதில் என்ன அதிசயம் !”

*இறப்பு என்பது முற்றுபுள்ளியா? – சுஜாதா*

செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் . செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை. மறு பிறவி இருந்தாலும் ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம். 

  "மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுதவேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல...வேறு பிறவி. மேலும் எங்கேயாவது சுவிஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்."  

நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான். 

மரணம்  ஒரு முற்றுப் பள்ளி. வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட். எபிக்யுரஸ் (Epicurus)  சொன்னதை மறுபடி படி”  “Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.

ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”.    How True ?

“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்”

யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ?  அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது.  அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது.  குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள்.  அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’  என்று சொல்வார்.  

*ஒரு முறை சுஜாதாவிடம் நீங்கள் இறந்தபிறகு போக விரும்புவது சொர்க்கமா நரகமா என்று கேட்டதற்கு சுஜாதாவின் சுவாரஸ்யமான பதில்:*

"எனக்கு சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது'

*சிதம்பரத்தில் காலமாகி விட்ட தன் அண்ணன் டாக்டர் கிருஷ்ணமாச்சாரியின்  உடலை எரிக்கும்போது….  *

“இவன் பிறப்பதுமில்லை.  எக்காலத்திலும் இறப்பதுமில்லை.  இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை.  இவன் பிறப்பற்றான்.  அனவரதன்.  பழையோன்,  உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்” என்று பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம் தான் எனக்கு ஆறுதல்.  

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। “இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது” –   “மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்” 

சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை.  ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி  ஸெல் உயிரணுக்கள் இருக்கு.  ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.  முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம்.  கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம்.  அதனால நாம எப்போ சாகறோம்.  எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது.  பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”

“அதனால…?”

“இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”

“எப்படி ?”

“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

*இதன் ஒரு வெளிப்பாடாகவே ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும்: *

"எல்லோருக்கும்  சாகற நாள் தெரிஞ்சுபோச்சுன்னா வாழற நாள் நரகமாயிடும்." 

நம் போன்ற ஏராளமான வாசகர்கள் மனதில் வாத்தியார் பற்றிய நினைவுகள் இருந்துகொண்டே இருக்கும். ஸோ, அவருக்கும்,  அவரது எழுத்துக்கும்  என்றும் மரணமில்லை.

No comments:

Post a Comment