Sunday, November 28, 2021

சகுனம்

 மத்யமர் சிறப்பு பதிவுகள்

ஹேமா ராமசந்திரன்

சகுனம்* 

சகுனம்  பார்ப்பது  பண்டைய கிரேக்க, ரோமன்  காலத்திலிருந்து எல்லா உலக மக்களிடமும் இருந்து வருகிறது. நம் நாட்டிலும்  இதிகாச காலம் தொட்டு பலவிதமான சகுனங்கள் வழக்கில் இருந்து வருகின்றன.

டென்மார்க் நாட்டில் இன்றும் பின்பற்றப் படும் / நம்பப்படும்  சகுன நிகழ்வுகள் சிலவற்றைப் பார்ப்போமா?

## • உடைந்த கண்ணாடி 

கண்ணாடியை உடைத்தவருக்கு 7 ஆண்டுகள் துரதிருஷ்டம் தொடரும். அதை நிவர்த்திக்க, கண்ணாடியை உடைத்தவரே உடைந்த துண்டுகளை எடுத்து சுத்தப் படுத்தி புதைக்க வேண்டும் அல்லது ஒரு ஆறு அல்லது ஓடையில் எரிந்து விட வேண்டும்!

## • சிதறிய உப்பு 

உப்பை தவறிக்  கொட்டிவிட்டால் அந்த நபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதோ ஒரு கேடு காலம்  வருவதற்கான அறிகுறியென்று கருதப் படுகிறது. .அதனால் உப்பை மிகவும் கவனமாகக் கையாளுகின்றனர்.

## • கருப்பு பூனை 

கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டங்களில்  புராணக்கதைகளில் பூனைகளைக் கடவுளாகப் போற்றி வந்துள்ளனர். புனிதமான இடத்தில் இருந்த பூனைகள் கிறிஸ்துவுக்குப் பின்னால்  சாத்தான் வடிவாகப் பார்க்கப் பட்டன.

டென்மார்க்கில் கால்நடைகள் விவசாயிகளின்  வாழ்வாதாரம். எனவே மாடு கன்றுகள் இறப்பைத் தடுக்க  அவைகள்   கடந்து செல்லும் இடங்களில் சில உயிருள்ள பூனைக்குட்டிகளை நகங்களுடன்  புதைத்து வைக்கின்றனர்.  அதாவது தீமையை தீமையால்  அகற்றுகின்றனராம்!

## • தும்மல் 

தும்மினால் அதிர்ஷ்டமும், எண்ணிய எண்ணமும் கைகூடி வரும் என்றொரு நம்பிக்கை. எனவே  தும்மினால் , prosit என்று டேனிஷில்  உடனே தும்மியவருக்கு சொல்ல வேண்டும். அதன் பொருள் " உன் எண்ணம் நிறைவேறட்டும்!"  ஆனால் ஷூ லேஸ்  கட்டும் போது  தும்மினாலோ, பெரிய ஆபத்து வருமென்று பொருள்!

7, 9, 13

அச்சான்யமாக யாரேனும் சொல்லிவிட்டால், நீங்கள் உடனேயே மூன்று முறை மேஜையின் கீழ் தட்ட வேண்டும்  அப்போது  7, 9, 13 ஆகிய மூன்று மந்திர எண்களையும் ஒரே நேரத்தில் சொல்வது வழக்கம். டென்மார்க்கில் பழைய காலங்களில் மரம்  கடவுளாகப்  பார்க்கப் பட்டது. எனவே மேஜையைத் தட்டினால் கடவுளிடம் முறையிட்டு அதை நிவர்த்திப்பதாக எண்ணுகின்றனர்.

## • சார்த்தி வைக்கப் பட்ட ஏணி 

சுவற்றில் சார்த்தி வைக்கப் பட்ட ஏணியின் அடியில் செல்வது துரதிருஷ்டத்தை வரவேற்பது என்று பொருள்! அதற்கு காரணம்  சார்த்தி வைக்கப் பட்ட ஏணி ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது. அது கிறித்துவ மாதத்தில் இறைவனைக் குறிக்கும். அதனால் அதன் அடியில் செல்வது கடவுளை மறுப்பது போல என்றொரு நம்பிக்கை.

## • குறுக்கு விரல்கள் (Crossing  fingers )

 விரல்களை குறுக்காக வைத்துக் கொண்டால் , வரப் போகும் தீமையைத் தடுப்பதாகப் பொருள். உதாரணமாக  ஏணிக்கு அடியில் சென்று விட்டால் உடனே விரல்களை மடக்கி விட்டால், உங்கள் கெட்ட  காலத்தை தவிர்த்து விட்டதாக அர்த்தம்!

 எண்  13

13  இருக்கும் இடமெல்லாம் துரதிர்ஷ்டம் என்று பொருள். ஒரு அறையில்  13  பேரோ அல்லது மேஜையில் 13 நபர்கள் இருந்தாலோ, அங்கு இருப்பவர்களில் ஒருவர் ஆண்டு முடிவதற்குள் இறந்துவிடுவார் என்று  ஒரு நம்பிக்கை. அதே காரணத்திற்காக, பல ஹோட்டல்கள் அறை எண் 13 ஐத் தவிர்க்கின்றன, மேலும் SAS விமானங்களில் 13 வரிசை இருக்கைகள் இல்லை.

## • பறவைகள்  

பொதுவாகப் பறவைகள் அதிருஷ்டத்தின் சின்னங்கள். ஆனால் வீட்டிற்குள் பறவைகள் பறந்து வந்தால்  துரதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு மேல் நாரை பறந்தால் அது அந்த வீட்டில் குழந்தைபேறையும் அறிவிக்கிறது!

> நடைபெற வாய்ப்பு இருக்கும் ஒன்றைப் பற்றி நம்புவது நம்பிக்கை.

> நடைபெற எந்த வகையிலும் வாய்ப்பற்ற ஒன்று, நிச்சயம் நடைபெறும் என நம்பிக்கொண்டி ருப்பது மூடநம்பிக்கை. 

> என்னைப்  பொறுத்தவரையில் சகுனம் என்பது ஒரு மூடநம்பிக்கை.

> அறிவுக்கு ஒவ்வாத அறிவியலுக்குள்  அடங்காத  ஒரு நம்பிக்கை அல்லது பழக்கம்  எனக்குத் தேவையில்லை.

No comments:

Post a Comment