Friday, November 5, 2021

மன்னையில் தீபாவளி

 மன்னையில் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியிலிருந்து தீபாவளி முடிந்து அடுத்தநாள் வரைக்கும் காற்றில் வெடிமருந்து வாசம் கலந்திருக்கும். சைக்கிளில் தெருத்தெருவாக செல்லும் போது அந்த பட்டாசு கொளுத்திய வேதியல் வாசனையில் அத்தெருவின் இராணுவ பலம் தெரியும். ஊதுபத்தியும் கையுமாக  தேவலோகப் புகை சூழத் திரிவார்கள். 

கிழக்குத் தெரு முக்கிலிருக்கும் கற்பகம் ஸ்டோரில் “ஒத்தை வெடி கட்டு ஒண்ணு தாங்க..” என்று வாங்கி அதிலிருக்கும் பத்து வெடியை “டொப்..”, “டொப்..” என்று உதிரியாகத் திரி கிள்ளி வெடிப்பது அந்த வருஷத்திய தீபாவளிக்கான வரவேற்பு. ஆட்டம் பாம் என்ற பச்சைநூல் சுற்றியதை வைத்தால் ஹரித்ராநதி நாலுகரையும் 1:3 என்ற சப்த விகிதத்தில் அதிரும்.  ஒவ்வொரு வெடியும் ஒவ்வொரு வண்ணத்தில் வானவில்லைக் கட்டிக் கையில் கொடுத்ததுப் போலிருக்கும் ஒத்தை வெடிக்கட்டுதான் “காசைக் கரியாக்கறான்.. படுவா..” என்று திட்டிக்கொண்டே பாட்டி கொடுக்கும் அந்த வருஷத்திய தீபாவளிக்கான முதல் வெடிப் பைசா. “கரியாக்கறான்...” என்று திட்டும் அதே பாட்டிதான் தீபாவளிக்கு முதல் நாளிரவு “ஒரு பொதை வையேண்டா..” என்று நம்மை தீவிரவாதியாக்கித் தூண்டுவாள்.

ஒத்தை வெடிப் பட்டாசு வெடித்தவுடன் தரையில் கலர்க் கலராய் குப்பை இறைந்திருக்கும். ஒரு கட்டு வெடித்துமுடிக்கும் போது வெடி வரைந்த இயற்கை ரங்கோலியைத் தரையில் காணலாம். வலது கை விரல் நுனிகளில் திரி கிள்ளியதால் வெள்ளி முலாம் பூசப்பட்டிருக்கும். ஏதோ சாஸ்திரத்துக்குக் கையை அலம்பிவிட்டு அந்த கெமிக்கலோடுதான் தீனியை வயிற்றுக்கு தள்ளுவோம்.

வெடி கொளுத்தியவரின் வீரம் அதன் சத்தத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. சத்தமே அளவுகோல். சத்தமே சர்ட்டிஃபிகேட். எஸென்னார் ஆர்ட்ஸ் இளங்கோ அண்ணா பெருவெடியர். அவர் வெடி கொளுத்துவது புறநானூற்றில் போருக்குப் புறப்படும் வீரரைப் போலிருக்கும். சட்டையைக் கழற்றி தூர எறிந்துவிட்டு சிக்ஸ் பேக்ஸ் மேனியைக் காட்டி அரையில் கைலியை ஜல்லிக்கட்டுக் காளை அடக்கப் போவது போல மடக்கிக் கோமணம் போல சொருகிக்கொண்டு வாசலுக்கு வருவார். என்னைப் போன்ற அண்ட்ராயர் கேசுகள் கண்கள் மட்டும் வெளியே தெரிய இளங்கோ அண்ணா வீட்டு காம்பௌண்டுக்குள் மறைந்து நின்றுகொள்வோம். இளங்கோ அண்ணா நம்மைப் போல திரி கொளுத்தி வெடிக்கும் அற்ப ஜாதியல்ல. அவருடைய வெடியில் விசேஷம் இருக்கிறது. இரும்பினால் ஈட்டி போன்ற ஒரு கம்பும் அதன் முனையை விட கொஞ்சம் பெருசான ஒரு இரும்புக் கப்பும் இருக்கும். அந்த இரும்புக் கப்பில் வெடிமருந்தைக் கொட்டி இரும்பு ஈட்டையைக் கப்பில் சொருகி அப்படியே ஓடிப்போய்  தார் ரோட்டில் ஓங்கிக் குத்துவார். அப்போது எழும் சப்தத்தில் காது கேட்காதவர்களுக்கு கேட்கும் கேட்பவர்களுக்கு செவிடாகிப் போகும்.  

ஆனால் வெடி கொளுத்தியவரின் செல்வச்செழிப்பும் படாடோபமும் அவர் வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் குப்பையின் அளவைப் பொறுத்துதான் மதிப்பிடப்பட்டது. ஐந்து பாக்கெட் லக்ஷ்மி வெடி, செங்கோட்டை சரம் ஐந்து, சிவாஜி வெடி, குருவி வெடி இத்யாதிகள் சேர்ந்துக் குவிக்காத குப்பையை ஒரேயொரு உலக்கை வெடி சாதித்துவிடும்.

இந்த சூக்ஷுமத்தைப் புரிந்துகொண்ட பிரகஸ்பதிகள் சிலர் ஒரே வெடியில் அவர்களது பணக்காரத்தனத்தைக் காட்டிக்கொள்ள ரெண்டு உலக்கை வெடி வாங்கி வீட்டு வாசலில் வைத்துவிட்டு திருப்தியடைவார்கள்.  அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இல்லையென்றால் கும்பகோணத்திலிருந்து மன்னைக்குள்  வேகமாக நுழையும் சோழன் (அரசுப் பேருந்து) அந்த மதிப்புமிக்க குப்பையை அடுத்த வீட்டு வாசலுக்கு விரட்டிவிட்டுச் சென்றுவிடும். மீண்டும் எதிர்பக்கத்திலிருந்து வேகமாக இன்னொரு பஸ் வந்தால்தான் அந்த வெடிக்குப்பை கொளுத்தியவரின் வீட்டுக்குச் செல்லும். அந்தப் பக்கம் வாகனம் வருமா என்று கன்னத்திற்கு கையை முட்டுக் கொடுத்து வீட்டு வாசலில் அமர்ந்திருந்த நண்பர்களின் வாடிய முகங்கள் ஞாபகம் வருகிறது.

தெருக் குப்பைக்குக் கூட பெருமை தரும் பண்டிகை தீபாவளி!  மனக் குப்பைகளை அகற்றி உள்ளத்தில் ஞான ஒளி ஏற்றுவோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். :-)

வாழ்த்தைப் படமாக்கிய (வார்த்தைகளுடன்) அத்யந்த ஸ்நேகிதர் கீர்த்திவாசன் ராஜாமணிக்கு Keerthivasan Rajamani நன்றிகளுடன்..... ஆர்.வி.எஸ். 

#தீபாவளி கொண்டாட்டம்

No comments:

Post a Comment