ரசிக்கவைத்த அப்பாவித்தனம்!!
2013ல் நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு பணிமாறுதலில் வந்தபோது, என் பெரியம்மாவும் திருச்சியிலிருந்து சேலத்துக்கு வந்து வீட்டுச்சாமான்கள் பேக் செய்து சென்னைக்கு எடுத்து வர உதவியாக இருந்து கூடவே வந்து இரண்டு மாசம் இருந்து எல்லாம் செட் பண்ணிக்குடுத்தாங்க. இருந்தாங்க.
அப்ப ஒரு நாள் பேசிட்டிருக்கும்போது, ஏன் செல்வி, பாலாஜி லச்சுமி எல்லாம் எங்க இருக்காங்கன்னு கேட்டாங்க. ( என் மச்சினர் அண்ட் ஓர்ப்படி..)
அவங்க மலேஷியாவுல இருக்காங்க பெரியம்மா.
மலேசியான்னா ரொம்பத் தூரமா? ஏரோப்பிளேன்ல போகணுமா.?
ஆமாங்க பெரியம்மா. மேலும் வெளி நாட்டுக்கு போகணும்ன்னா அதுக்கு பாஸ்போர்ட் எடுக்கணும். நானும் இன்னும் எடுக்கலை. எங்க ஆபீஸ்ல அனுமதி வாங்கித்தான் எடுக்கணும்.
ஓஹோ..பாஸ்போர்ட்டு எடுத்துதான் ஏரோப்ளேன்ல போகணுமா, அது ஒண்ணும் பெரிய விஷியமில்ல கண்ணு, நானு திருச்சிக்கு போன ஒடன்னே பாஸ்போர்ட்டு எடுத்து வச்சிக்கறேன். நீ போகும்போது என்னயும் உன்கூட கூட்டிட்டு போ. அந்த ஊரு தேசம்லாம் எல்லாம் நான் எந்த ஜென்மத்துல பார்க்கப்போறேன்னு ஆசையோட கேட்டாங்க பெரியம்மா.
அதுக்கென்ன, பெரியம்மா நாங்க போகும்போது உங்களையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்.
ஒரு மாசம் கழிச்சு, அந்தப் பெரியம்மாவின் பெண், என் தங்கை சென்னையில் நடைபெறும் ஒரு பயிற்சியில் கலந்துக்கறதுக்காக திருச்சியில இருந்து வந்து பயிற்சியை முடித்து என் வீட்டுக்கு வந்தா.
வந்து, ஊர்ப்பேச்சு எல்லாம் பேசி முடிச்சபின்னால, அக்கா, அம்மா ஏரோப்ளேன்ல ஊருக்குப் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சிருச்சாம்..நீங்க எப்ப மலேஷியா போனாலும் அவங்களையும் கூட்டிட்டு போகச் சொன்னாங்கன்னு சொன்னா...
எனக்கு ஒரே ஆச்சர்யம்! என்னம்மா சொல்றே, பெரியம்மா இவ்ள சீக்கிரமா பாஸ்போர்ட் எடுத்துட்டாங்களா? பரவால்லையே..நான் கூட இப்பதான் எங்க ஆபீஸ்லயே நோ அப்ஜெக்ஷன் வாங்க விண்ணப்பம் குடுத்துருக்கேன், பெரியம்மா ஜெட் ஸ்பீடுல இல்ல இருக்காங்க!!
அக்கா, என்னது பாஸ்போர்ட்டா?
என்னக்கா சொல்றீங்க?
அம்மா பக்கத்துல இருக்கற பாண்டியன் ஸ்டூடியோவுக்கு போய் 16 பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ் எடுத்து வச்சிக்கிட்டு, இது போதாதா மலேஷியா போறதுக்குன்னு சொல்லிக்கிட்டிருக்கு.
சைடு கேப்புல உங்கக்கா ஒரு சோம்பேறி, மெட்ராஸுல இல்லாத சூடியோவா, பாஸ்போர்ட்டு போட்டோ எடுக்க சோம்பல் பட்டுகிட்டு இருக்குது, நானு படிக்காதவ பாரு, நிமிசமா போய் எடுத்துட்டு வந்துட்டேனு உங்கள திட்டிக்கிட்டு இருக்குதுக்கா, எனக்கும் ஒண்ணும் புரியலைங்க்கான்னு சொல்றா என் தங்கை.
ஹைய்யோ பெரியம்மா...
No comments:
Post a Comment