உறவுபோட்டமுடிச்சு_39
பெரிய கோவில் பக்கத்தில் நிறுத்தியிருந்த காரில் ஏறுகிறார்கள் பவானியும் ராமநாதனும். ட்ரைவர் வைத்துக் கொண்டு வரவில்லை ராமநாதன்.
'பவானி, கீதா கிட்ட அப்படியா பேசுவ. காரியத்தையே இப்படி கொடுத்துட்டியே!'
'சும்மா இருங்கோ. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். தலயால அடிச்சுண்டேன். சபேசனுக்கு நாம உதவலாம்னு. தொத்து அது இதுன்னு எல்லாரையும் பயமுறுத்தி இன்னிக்கு பாலாஜி வரனே இல்லேனு ஆயிடுத்து. இப்ப திருப்திதான.'
'ஏண்டி ஏதோ கல்யாணமே ஆன மாதிரியும் அவாத்து மாட்டுப் பொண்ணா கீதா வந்துட்ட மாதிரி பேசறையே. நான் சொன்னது கீதா கிட்ட எந்த விஷயமும் வாங்க முடியாம தத்து பித்துன்னு அவசரப் பட்டு அவள கோச்சிண்டு நீ நடந்துண்டத சொன்னேன்.'
'அவ கிட்ட என்ன தெரிஞ்சுக்கணும் நமக்கு? எல்லாம் தான் பட்டவர்த்தனமா தெரியரதே. வீட்ட பார்த்துக்கறா வயலப் பாத்துக்கறா. தோட்டம் தொறவு சாவி அவ கிட்ட. நல்லவேள பட்டாமணி உத்யோகம் மட்டும் வாங்க முடியாது. என்னவோ தம்பியாத்து மாட்டுப் பொண் மாதிரி அப்படி ஒரு ராஜ்யம். அவ இப்படி இருக்கறத பார்த்து என்னால பொறுத்துக்க முடியலன்னா.'
'அவசரப்படாத பவானி. அவ சொன்னத கவனிச்சையான்னு தெரியல. ரங்கன் செத்தோண்ண சபேசன் செஞ்ச உதவிக்கு பிரதி உபகாரமா அவாளுக்கு உதவியா இருக்கேன்னு சொன்னா. அதே மாதிரி நாம அவளுக்கு ஒரு அரசாங்க உத்யோகம் வாங்கி கொடுத்துட்டா நமக்கு நன்றியோட நாம சொன்னத கேட்டுண்டு இருக்கப் போறா.'
'கனவு நன்னா வர்ரது உங்களுக்கு. எனக்கென்னவோ இங்க நடக்கறதே வேற மாதிரி படறது. நீங்க மசால் வடைய வெச்சி எலிய புடிக்கலாம்னு சொல்றேள். ஆனா அதுக்குள்ள புலி நம்மள சாப்டுடும். எனக்கென்னவோ வரன் கைய விட்டு போன மாதிரிதான்.'
'நான் தெரியாமத் தான் கேட்கறேன் பவானி. ஏன் பாலாஜி வரன் மேல இப்படி ஒரு உடும்புப் பிடி உனக்கு. எனக்கும் எண்ணம் இருந்தது. இல்லைங்கல. ஆனா இப்ப நம்ம நெனைப்பையே நாம திரும்ப யோசிச்சுப் பார்க்கணும். உன் தம்பிக்கு தொத்து. ஆத்துல யாருக்கு வேணா பரவலாம்.'
'நாம இப்படியே பயந்திண்டு இருந்தா இருக்க வேண்டியது தான். பாலாஜி நல்ல பையன். நல்ல அழகு. படிப்புல சூட்டிகை. வீடு இருக்கு வாசல் இருக்கு. தோட்டம் இருக்கு. பத்து வேலி நிலம் இருக்கு. சபேஸனுக்கு ஒரே வாரிசு.'
'சரி. உன் பிடிவாதத்த உடமாட்ட. கீதா கண்டிப்பா அரசாங்க வேலைக்காக நம்ம கிட்ட வருவா. தஞ்சாவூர்லயே நம்ம பார்வைல இருக்கற மாதிரி வேலைக்கு முயற்சிக்கிறேன். நீ சித்த வாய மூடிண்டு இருந்தா நானே எப்படியாவது நம்ம ஜானாக்கு பாலாஜிய முடிச்சு போடுவேன். ஆத்திரம் கோபம்லாம் பட்டு காரியத்த கெடுத்துண்டு அப்புறம் என் மேல பழிய போடக்கூடாது. சொல்லிட்டேன்.'
கேட்டுக் கொண்டாள் பவானி. திருப்தி அடையவில்லை. சபேஸனின் தொற்று நோய் சீதா குடும்பத்திற்கும் தம்பி குடும்பத்திற்கும் மேலும் நெருக்கத்தை கொடுத்துள்ளது என்பதை புரிந்து கொண்டாள். அதை அசைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது பவானியின் எண்ணமாக இருந்தது.
அவர்களது தஞ்சைப் பயணம் திட்டங்களோடு சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் ஓய்வெடுத்ததில் அசதி நீங்கி காலில் பட்ட அடிக்கு மீண்டும் சிக்ஷுஸை செய்து கொண்டாள்.
'அம்மா பால்'
மீண்டும் விந்தி விந்தி பாத்திரத்தோடு வாசலுக்கு வந்தாள் கீதா.
'செல்வி, இன்னிக்கு அரை சேர் போதும்.'
காப்பி குடித்தவுடன் சிறிது நேரம் விகடன் ஓடிக்கொண்டிருந்தது. பிறகு ட்ரான்ஸிஸ்டரை எடுத்து முள்ளை உருட்டிக் கொண்டிருந்தாள். ட்ரான்ஸிஸ்டர் முள் கிரிக்கெட்டில் நின்றது. நிறுத்தினாள் என்பதே சரி.
அவளுக்கோ கிரிக்கெட் பிடிக்காதே? பிறகு ஏன் ? பாலாஜிக்கு பிடிக்குமே. டோனி கோஸியர் வெங்கட்ராகவனை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தான். இவளுக்கு ஒண்ணும் புரியல. ஆனால் பாலாஜி ரசிப்பதைப் பார்ப்பது போல ஒரு சிரிப்பு. கள்ளம் கலந்திருந்தால் வெட்கத்திற்கும் அங்கு வேலை வந்து விடுகிறது.
'அடிபட்டுடுத்துடா. இங்க பாரு.'
'ஏய்....என்ன ஆச்சு. கட் ரொம்ப டீப்பா இருக்கே. கீழ உட்காரு. பார்க்கறேன்.'
பாலாஜி கற்பனையில் சொல்லும் அளவு பெரிய அடி இல்லை. ஆனாலும் இவள் வலி பெரிசுன்னு அவன் சொன்னா இவளுக்கும் அந்த வலி பெரிசு தானே.
பாதத்தை தூக்கி ஒரு ஸ்பரிஸம்.
'ச்சே. என்ன பொண்ணு நான். இவன் பின்னாடி போனா ஒரு வேல ஓடாது.'
ட்ரான்ஸிஸ்டர் முள் இடம் மாறுகிறது.
பாதி வரிகள் ஓடிய 'சித்திரமே நில்லடி. முத்தமிட்டால் என்னடி?... வெண்ணிற ஆடை பாடல்.
இந்த ஸ்டேஷன்லயும் பாலாஜியா? ட்ரான்ஸிஸ்டருக்கு செல்லமாக பக்கவாட்டில் ஒரு தட்டு.
தூக்கத்தில் வரும் கனவுகளை அதுேவே பார்த்துக்கொள்ளும். ஆனால் முழித்துக் கொண்டு காணும் கனவுகளுக்கு நாம் தானே லகானை இழுக்க வேண்டும்.
அந்த பாட்டோடு ட்ரான்ஸிஸ்டர் அமைதியாகிறது. போதும். ரெடியாயுட்டு கோவிலுக்கு போகணும்.
எண்ணெய், திரி, சூடம், ஊதுபத்தி .... ஒயர் கூடையில் வைத்தாகி விட்டது. தோட்டத்துக்குப் போய் இப்ப ஃப்ரெஷ்ஷா இருக்கற நாலு பூவை பறிச்சுக்கணும்.
'என்னாச்சு கீதா ? நொண்டிண்டே வர்றியே?'
ஆத்மார்த்த குரல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே கல்யாணி அம்மன் கோவிலுக்கு வருகிறாள்.
விந்தி விந்தி பிரகாரம் சுத்தியாச்சு. விந்தி விந்தி விளக்கேத்தியாச்சு. ஊதுபத்தியும் சூடமும் கொண்டு வந்த இருபது இருபத்தஞ்சு அடுக்கு நந்தியாவட்டையும் குருக்கள் மாமா வழியாக கர்பக்கிரஹம் போயாச்சு. அமைதியாக கல்யாணி முன் உட்கார்ந்தாச்சு.
'இந்தோ பார். என் காலை என்ன பண்ணி வெச்சிருக்க.'
ஏதோ கலப்பையை கல்யாணி வந்து இவள் காலில் பொத்துனு போட்ட மாதிரி ஒரு கேள்வி. ஞாயமில்லாத கேள்வியென்று கீதாவுக்கே தெரிந்ததால் தனக்குத் தானே சிரிப்பு.
'கீதா, சந்நிதிய பார்த்துக்கோ சித்த. கொளத்துலேந்து ஜலம் எடுத்துண்டு வரேன்.' குருக்கள் சொல்லிவிட்டு நகர்கிறார்.
யாரும் இல்லை கோவிலில் இவளைத் தவிர. கேட்கவா வேண்டும்? பிரார்த்தனைகள் பலமாகின்றன.
'எத்தன நாள் ஆச்சு மாமாவ ஆஸ்பத்திரிக்கு நீ அனுப்பி ? போனாப் போறதுன்னு இன்னும் பதினஞ்சு நாள் பார்ப்பேன். மாமாவ நன்னா குணமாக்கி பூவனூருக்கு நீ வரவழைக்கலைனா விளக்கேத்திண்டு வரத நிறுத்திடுவேன்.'
கல்யாணியிடம் உரிமையோடு ஒரு ப்ளாக்மெயில்.
பிரச்சனைக்கெல்லாம் ஸ்வாமி மேல பழி போடறதுலேயும் மனசுல உள்ள கஷ்டங்களுக்கெல்லாம் தீர்வு சொல்ல பகவான பக்திய வெச்சே ப்ளாக்மெயில் பண்றதிலேயும் நம்மள யாரும் ஜெயிக்க முடியாது.
குருக்கள் மாமா வருவதற்குள் கீதாவின் பால்ய சிநேகிதிகள் அஞ்சாறு சேரவும் சந்நிதி களை கட்டுகிறது.
'கீதா நீ இங்கேயா இருக்க? எப்ப வந்தே?'
'அக்கா, நீங்க கோவிலுக்கு போறத பார்த்துட்டு அவசரம் அவசராமா வந்தேன்.'
'கீதா, நான் பிரகாரம் சுத்திட்டு வரேன். வந்தோண்ண ஸ்லோகங்கள் சொல்லலாம். எத்தன வருஷம் ஆச்சு? உங்க அம்மாவோட இங்க வந்து எவ்வளவு சொல்லியிருப்போம்?'
வலிகளை மறக்கடித்த சிறகுகள். அக்ரஹாரத்து சிட்டுகளின் கானங்களும் ஸ்லோகங்களும் கல்யாணியை குளிர்வித்துக் கொண்டிருந்தன குருக்களின் அபிஷேகங்களுடன்.
தொடரும்.....
No comments:
Post a Comment