Friday, November 26, 2021

உறவுபோட்டமுடிச்சு_27

உறவுபோட்டமுடிச்சு_27

புதன் கிழமை காலை சபேஸய்யர் செங்கிப்பட்டி கிளம்ப வேண்டும்.  சபேஸய்யருக்கு கொஞ்சம் படபடப்பு இல்லாமல் இல்லை.

இப்பெல்லாம் அவர் எப்பப்ப திண்ணையில் உட்காருகிறாரோ அப்பெல்லாம் ஏதாவது மனசுல சிந்தனைகள் வந்து படுத்தறது.

'கல்யாணி தாயே.  இந்த சின்னஞ் சிறுசுங்க ஒண்ணா சேர்ர வரைக்குமாவது என் உசுர நான் புடிச்சு வெச்சுக்க எனக்கு பலத்த கொடு.  வேற ஒண்ணையும் நான் கேட்கல.'

'ரங்கா ஒன் பொண்ணுதான் என்னோட மாட்டுப் பொண்ணு.  இப்ப சந்தோஷம்தான ஒனக்கு.  ஒன்ன அப்படியே உரிச்சு வெச்சிருக்காடா உன் பொண்ணு உருவத்துலேயும் தைரியத்துலேயும்.  நீ போய் சேர்ந்தோண்ண சீதாவையும் கீதாவையும் நெனச்சு இடிஞ்சே போயிருந்தேன் ரங்கா.   ஏதோ தலமுறை செஞ்ச புண்ணியம், கல்யாணி அம்மனும் நீயும் அவா பக்கத்திலேயே இருந்து பார்த்துண்டு வரேள்.'

'நான் கோச்சிண்டது சீதாக்கு வருத்தமாதான் இருக்கும்.  ஆனா கொழந்தைகள் ரெண்டும் அண்ணா தங்கையா பழகிண்டுடுமோன்னு ஒரு பயம் எனக்கு.  நீ போனோண்ணயே  கீதாக்கு பாலாஜின்னு முடிவு பண்ணிட்டேன்.'

'ஞானத்துகிட்ட தான் ஏதோ ஒரு சங்கோஜம் இருக்கு.  நேரம் வரும் போது பேசி புரிய வெச்சுடுவேன்.  கவலப்படாத ரெங்கா.'

' நேத்திக்கு சடகோபன் வந்திருந்தான் ஆத்துக்கு.  வேற பொண்ண மாட்டுப் பொண்ணா இந்தாத்துக்கு அழச்சிண்டு நான் வந்தேன்னா என்னையும் ஞானத்தையும் கொன்னே புடுவானாம்.  திருஷ்டி படாம நீதான் தடையெல்லாம் போக்கிண்டே வரணும்.'

என்னென்னவோ நினைவுகள்.  சோகம் ஜாஸ்தியான இந்த பாழாப்போன மனசு சோகத்தையும் தாண்டி எதையதையோ நெனச்சு கவலைகள தேவையில்லாமல் சேர்த்துக் கொள்கிறது.

திண்ணைச் சிந்தனைகள் ஒய்ந்த பாடில்லை.  தற்காலிகமாக ப்ரேக் கொடுக்க கீதா வாசலுக்கு வருகிறாள்.

'அட, அதுக்குள்ள குளிச்சிட்டு ...'

'ஒண்ணும் இல்ல மாமா.  இன்னிக்கு செவ்வாய் கிழமை.  நாளைக்கு நீங்க செங்கிப்பட்டி போகணும்.  பெரிய கோவில் போய் சாமுண்டிய பார்த்துட்டு வரலாம்னு ...  இந்த ஊர் டாக்டராச்சே அவ'

'அதாவது மாமா உடம்பு நன்னாக்கி ஆத்துக்கு கொண்டு விடணும்னு சாமுண்டி கிட்ட ஒரு அப்ளிகேஷன் போடப்போற இல்லையா?'

'ஆமாம் மாமா.  என் பேச்ச எப்போதும் கேப்பா அவ.  உங்களுக்கு கல்யாணி மாதிரி எனக்கு சாமுண்டி.'

'அதுக்குன்னு கல்யாணிய பார்க்காம வந்துடாத.'

சிரித்துக் கொண்டே கிளம்புகிறாள்.  கையில் ஒரு எலுமிச்சம்பழம், கற்பூர பொட்டலம், ஊதுபத்தி, எண்ணைய் பாட்டில், திரிநூல்கள் கொஞ்சம் .... சாமுண்டி உபசரணைக்கு இது யதேஷ்டமாச்சே.

வழியில், 'அக்கா நானும் வரட்டுமா?'

கேட்டது புஷ்பா.  போஸ்ட் மாஸ்டர் பொண்ணு.  பால்ய சிநேகிதி கூட.

'இல்லம்மா.  சாயந்திரம் இன்னொரு தடவ போனாலும் போவேன்.  அப்ப அழச்சிண்டு போறேன்.'

இந்த முறை கீதாவுக்கு தனியா போகணும்னு விருப்பம்.  தனியா சாமுண்டி கிட்ட பேசணும்.  தைரியமான கீதாவை அவள் அழக் கூட வைக்கலாம்.  யாருக்கும் தெரியக் கூடாது இல்லையா? அவ ஏதாவது ஸெண்டிமெண்டா ஏதாவது பதில் கொடுப்பான்னு ஒரு நம்பிக்கை.

கோவில் வந்தாச்சு.  சதுரங்க வல்லபநாதரைப் பார்த்தாச்சு.  அம்பாள்கள் ராஜராஜேஸ்வரியையும் கற்பக வல்லியையும் பார்த்தாச்சு.

'பட்டாமணியார் மருமாதான நீ.  மாமாக்கு உடம்பு சரியில்லையாமே?  கேள்வி பட்டேன்.  நன்னாயிடுவார்.  கவலப் படாத.'

இவள் எதுவும் குருக்களிடம் கேட்கவில்லை.  இருப்பினும் நல்ல வார்த்தைகள் அவரிடமிருந்து அசிரீரியாக.

பிரகாரம் சுற்றி விட்டு சாமுண்டி சந்நதி முன் உட்காருகிறாள்.  சட்டென்று இவளுக்கு தரிசனம் கொடுத்து விடுவாளா? சாமுண்டி  திரையை அவளுக்கு முன்னால் போட்டுக் கொண்டு ஒரு சிரிப்பு உள்ளே உட்கார்ந்து.

'அம்மாடி, பத்து பதினஞ்சு நிமிஷம் ஆகும் சந்ததி தொறக்க.  கண்மலர் சார்த்தப் போறது. ரொம்ப விசேஷம்.  அதுவரைக்கும் ஏதாவது தெரிஞ்ச ஸ்லோகத்த சொல்லிண்டிரு.  இல்லாட்டி ரெண்டு பாட்டாவது பாடு கணீர்னு.  நானும் கேட்டுண்டே அலங்காரத்த முடிச்சுடறேன்.'

குருக்கள் தான் சொன்னார்.  சாமுண்டி கேட்க ஆசைப் பட்டத தான குருக்கள் மனசுல புகுந்து சொல்லச் சொல்லுவாள் இல்லையா?

தெய்வ உணர்வுகளிடம் பகுத்தறிவு வியாக்ஞானங்கள் எடுபடாது.  மனம் ஏற்கும்.  மனசையே லேசாக்கும்.  என்னவோ பிரார்த்திச்சண்டது எல்லாமே கிடச்சுடும்னு ஒரு நம்பிக்கையை வெச்சிண்டு மனசு தெய்வ சிந்தனைகளில் வியாபிக்கும்..

நாம செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்.  எதிர்த்தார்ப்போல் தெரியற சாமுண்டி உருவத்துக்கு கொஞ்சம் மனசுல bபாவமா ஒரு உசுர கொடுத்து பேச ஆரம்பிக்கணும்.  உணர்வோட பேச பேச மின்சார அனுக்ரஹத்த அவளாவே பாய்ச்சி நரம்புகளை எல்லாம் அமைதிப் படுத்தி தைரியத்த கொடுத்து ஆத்துக்கு அனுப்பி வைக்கறதுல அவள யாரும் ஜெயிக்க முடியாது.

'அயிகிரி நந்தினி.....'  

கீதாவின் கணீர் குரலில் மஹிஷாஸுர மர்த்தினி.  சாமுண்டி பிரத்யக்ஷம் மனசுல.

ஒரு கையிலே தொங்கிக் கொண்டிருந்த மணியை ஆட்டிக்கொண்டே மற்றொரு கையால் திரைச்சீலையை இழுக்கிறார்.

கர்ப்பக்கிரஹத்திலிருந்த தொங்கும் வெண்கல விளக்கு ஜ்வாலையில் வெள்ளிக் கண் மலர் ஒரு 3D எஃபக்ட் கொடுத்தது கீதாவுக்கு.

கேட்க வந்தவை சுத்தமாக மறந்து கண்கள் குளமாகி சாமுண்டியின் பிம்பத்தை மறைத்தது.

'அம்மா, சூடம் கொண்டு வந்திருந்தா அதையே கொடு.  ஈஸ்வரிக்கு அதையே ஏத்தறேன்.'

அனிச்சை செயலாக கொண்டு வந்ததை குருக்களிடம் கொடுத்தாளே தவிர கலங்கிய கண்கள் சாமுண்டியை விட்டு விலகவில்லை.

'பிரசாதத்த வாங்கிக்கோ.  ரெண்டு பொட்டலமா தரேன்.  மாமாவ ஆஸ்பத்திரியில தினமும் இட்டுக்க சொல்லு.  சரியாயிடுவார்னு நான் சொன்னேன்னு சொல்லு.'

மனச விட்டு வார்த்தைகளா வெளிவராத பிரார்த்தனைகளுக்கும் குருக்கள் மூலம் பதில் கொடுக்கிறாள்.

'ரொம்ம தேங்க்ஸ் மாமா.'

'கொஞ்சம் இரு.  வயக்காட்டுல இந்த ஊர்ல வேலை செய்யறவாளுக்கு விஷக்கடி ஏதாவது பட்டுதுன்னா இவ கிட்ட வந்து  ஒரு ரக்ஷையை கட்டிப்பா.  இருந்த எடம் தெரியாம விஷம் முறிஞ்சுடும்.  அதே ரக்ஷையை நான் தரேன்.  மாமா கையில அவர் ஆஸ்பத்திரி கிளம்பறச்சே உன் கையாலயே கட்டு.  ரோகத்த தீர்த்து சௌகர்யமாக்கி ஆத்துக்கு மாமாவ அனுப்புவா இந்த சாமுண்டி.'

எல்லா தெய்வக்குரல்களும் கேட்ட ஒரு ஃபீல் கீதாவுக்கு இப்போது.  கண்களில் கவலைக் கண்ணீர் போய் ஆனந்தக் கண்ணீர். 

கோவிலை விட்டு வரும் போது ஒரு கம்பீர நடை.

'அட ராமா, மனச படுத்தற வாலுப் பையன் படிப்புக்கு அப்ளிகேஷன் போடணும்னு நெனச்சேனே.  மறந்தாச்சா?'

'அதுக்கென்ன சாயந்திரம் வந்தா போச்சு இன்னொரு தடவை.'

கல்யாணி அம்மன் கோவில் வந்தாள்.

'கல்யாணி, மாமா உன்னயே நம்பி இருக்கார்.  அவர் வியாதிய போக்கி அவர் என்ன ஆசப் படறாரோ அத நிறைவேத்தணும், என்ன?'

கீதாவின் சுயநல பிரார்த்தனை கல்யாணி அம்மனிடம் மாமாவைக் கோர்த்து ஒரு கள்ளச் சிரிப்பு கலந்து.

தொடரும்.....

No comments:

Post a Comment