Friday, November 26, 2021

கனியுமோகாதல்_27

கனியுமோகாதல்_27

கோர்டிலிருந்து நேராக ஆத்துக்கு வருகிறாள் மைதிலி.  அங்கு அப்பா ஆத்தில் இருப்பது கண்டு ஆச்சர்யம்.

'என்னப்பா?  ஆஃபீஸ் போகல?'

'போனேம்மா.  ரொம்ப தலைவலியா இருந்ததுன்னு சீக்கிரம் கிளம்பிட்டேன்.'

'டாக்டர் கிட்ட போனேளா?  இப்ப தேவலாமா?'

'நீ கவலைப் படும்படியா பெருசால்லாம் ஒண்ணுமில்ல குட்டி.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டா சரியாயிடும்.'

'இல்லப்பா ஸ்ரீனிவாசன் டாக்டர் சாயந்திரம் ஆறு மணிக்கு அவர் க்ளீனிக்குக்கு வந்துடுவார்.  போகலாம் வாங்கோ.'

'அதெல்லாம் வேண்டாம்மா.  நீ முதல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ.  டயர்டா தெரியற.'

'ஆமாம்பா.  இன்னிக்கு ரொம்ப டைட் ஒர்க்.  பிக்‌ஷேஸ்வரன் சார ICU ல அட்மிட் பண்ணியிருக்கா.  ச்செஸ்ட் கன்ஞ்செஸஷன்.'

'அடப் பாவமே.  என்ன திடும்னு?'

bப்ரீஃபாக விவரங்களை சொல்லிவிட்டு படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.  அடுத்த நிமிஷமே கண் அயர்கிறாள்.

'இப்பன்னு பார்த்து கரண்ட் கட் வேற.  ஆஞ்சு ஓஞ்சு குழந்தை வந்திருக்கா.  ஃபேன் கூட இல்ல.'

ஓலை விசிறியை கொண்டு வந்து வீசுகிறார் சுந்தரம்.  சட்டென்று வந்த இதமான காற்றில் கால் பக்கம் இருந்த தலையணையை பக்கத்தில் போட்டுக் கொண்டு இருக்க கட்டிக் கொண்டு தூக்கத்தின் ஆழத்திற்கு செல்கிறாள் மைதிலி.

'கௌரி, கொழந்த நன்னா தூங்கறா.  காஃபி அப்புறம் சாப்டட்டும்.'

'ஏன்னா, அந்த ஆடிட்டர் வரன போய் பார்த்தேளா?'

'ஆஃபீஸ் போகும்போதே வழியில இறங்கிண்டு பார்த்துட்டு வந்தேன் கௌரி.  மயில் குட்டி ஃபோட்டோவ அவா கிட்ட காமிச்சேன்.  பொண்ணு லட்சணமா இருக்காளேன்னு சொன்னா.  அத என் கிட்டயே சொன்னது தான் ஜோக்கு.  அவாளுக்கு பிடிச்சிருங்கற மாதிரிதான் தோணறது.  வெச்சிட்டு போங்கோ, பையன் பார்க்கணும்னு சொன்னா.  சரின்னு நானும் கொடுத்துட்டு வந்தேன்'

'வேற ஒண்ணும் சொல்லலையா?'

'அவாளப் பத்தி விசாரிச்சேன்.  பெரிய இடம் மாதிரிதான் தெரியறது.  ரெண்டு வீடு இருக்காம் அவாளுக்கு. கிழக்கு தாம்பரத்துல ஒண்ணும் மேற்கு மாம்பலத்துல ஒண்ணும்.  பையனும் தன் சம்பாத்யத்துல ஒரு ஃப்ளேட் (flat) வாங்க உத்தேசிச்சிண்டிருக்கானாம்.'

'நீங்க பையன் படத்த கேட்டு வாங்கலையா?  மைதிலி கிட்ட காமிக்கலாமே.'

'தோணல கௌரி.  ஆஃபீஸுக்கு போற அவசரத்துல மறந்துட்டேன்.'

'பூர்வீகம் என்னவாம்?'

'தலைஞாயிறுன்னு சொன்னா.  ஆனா இங்க வந்து பல வருஷம் ஆச்சாம்.  பையன் பொறந்தது வளர்ந்தெல்லாம் மெட்றாஸுல தானாம்.  இன்னும் சொல்லப்போனா அங்க இருந்த பூர்வீக சொத்தெல்லாம் கூட வித்துட்டுதான் தாம்பரத்துல வீடு வாங்கியிருக்கறதா சொன்னா.'

'அவா இப்ப இருக்கற வீடு சொந்தம் இல்லையா?'

'எல்லார் சௌகர்யத்துக்காக ராயப்பேட்டைல வாடகை வீட்டுல இருக்காளாம்.  தாம்பரம் மாம்பலம் வீடுகள வாடகைக்கு விட்டுருக்கா போல தெரியறது.'

'பையன் படிப்பு உத்யோகம் பத்தி கேட்டேளா?'

'அதான் ஜாதகத்துலேயே இருக்கே எம்காமும் ஸிஏன்னு.  வருமானத்தப் பத்தி லேசா கேட்டுண்டேன்.  மூணு நாலு பெரிய கம்பெனிக்கு ஆடிட்டிங் பண்றான் போல தெரியறது.  அவனோட ரூம காமிச்சா.  பெரிசு பெரிசா புத்தகமும் ஃபைல்களுமா இருக்கு.  எம்காம்ல மெட்ராஸ் யுனிவர்ஸிடில ஃபர்ஸ்ட் வந்தானாம்.  லயோலா காலேஜுல படிச்சானாம்.'

'மைதிலி கிட்ட வரனப் பத்தி எப்ப பேசப் போறேள்?'

'பையன் எஸ் சொல்லட்டுமே.  அப்பறம் சொன்னா போறாதா?  மைதிலி இப்ப ரொம்ப 

பிஸியா இருக்கே.  இப்ப சொன்னா காதுல கூட வாங்கிக்காது.  நீ என்ன சொல்ற.'

'சீக்கிரம் சொல்லுங்கோ நேரம் பார்த்து.'

'சரி கௌரி.  அந்த அமிர்தாஞ்சன் பாட்டில எடு.  தலவலி மண்டைய பொளக்கறது.'

அமிர்தாஞ்சன் பாட்டிலை கொடுக்கிறாள்.

'தேச்சி விடறையா?'

'நன்னா கேட்டேளே.  கல்யாண வயசுல பொண்ண வெச்சிண்டு.'

'பொண்ணு கல்யாணம் முடிஞ்சு தேச்சி விடறேங்கறையாக்கும்.  அதுவரைக்கும் தல தாங்காதேடி.'

அவருடைய ஜோக்கை காதில் வாங்கியும் வாங்காமலும் சிரித்துக் கொண்டே சமையலறைக்கு செல்கிறாள் கௌரி.

அமிர்தாஞ்சனை நெற்றியில் அழுத்தி தேய்த்துக் கொண்டு வாசலுக்கு வருகிறார் சுந்தரம்.

'புது வண்டி மாதிரியா வெச்சிண்டிருக்கா என்ன அழுக்கு.'

பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஒரு துணியையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.

மைதிலியின் TVS 50 பள பளப்பாகிறது.

'மயில் குட்டி எழுந்தோண்ண ஆச்சர்யப் படும்.  ஏம்ப்பா தலைவலியோட இதப் பண்ணினேள்னு கேட்கும்.'

மனதுக்குள் ஒரு சிரிப்பு.  கூடவே ஆடிட்டர் சிந்தனைகள் சேர்ந்து கொள்கிறது.  மாப்பிள்ளை படத்த அவாத்தில் பார்த்தது ஞாபகம் வருகிறது.

'படத்துல அப்பாவியா இருக்கானே.  நம்ம மயில் குட்டிய சமாளிப்பியாடா முரளி?  படத்துல 

ஸ்மார்ட்டா இருக்கான்.  நல்ல இன்டெலிஜெண்டாமே.  சின்ன வயசிலேயே வீடு வாங்கப் போறானாமே.  மைதிலி அவாத்துக்கு போய் புது வீட்டுல குத்து விளக்கேத்தணும்.'

மாப்பிள்ளை கனவுகள்னா சும்மாவா என்ன?

பைக்கை துடைத்து விட்டு வந்த சுந்தரம் ஹாலில் பாயைப் போட்டுக்கொண்டு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

ஐந்து மணி இருக்கும்.  ஆத்து ஃபோனுக்கு ஒரு கால்.

பாதி தூக்கத்தில் எழுந்து வந்து எழுந்து எடுக்கிறார்.

'மைதிலி அக்கா இருக்காங்களா?'

'நீங்க?'

'சந்தர்னு சொல்லுங்கோ.  தெரியும்.'

அப்பா பேசிக் கொண்டிருப்பது யார் என்று தெரியாவிட்டாலும் டெலிஃபோன் மணிக்கே எழுந்து விட்ட மைதிலி ரிஸீவரை அப்பாவிடமிருந்து வாங்கி ஒரு ஹலோ.

'அக்கா, நான் சந்தர் பேசறேன்.  அப்பா உங்கள அர்ஜென்டா பார்க்கணும்னு சொல்றார்.  எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறார்.   ஆஸ்பத்திரிக்கு உடனே வர முடியுமா?'

'இப்ப பேசிண்டிருக்காரா அப்பா?'

'அப்பைக்கப்ப பேசறார்.  ரொம்ப ஃபீபிளா இருக்கு பேச்செல்லாம்.  உங்க பேரை அடிக்கடி சொல்லிண்டிருக்கார்.  ஸாரி அக்கா உங்கள டிஸ்டர்ப் பண்றதுக்கு.'

'ஏய், என்ன பெரிய பேச்செல்லாம் பேசற.  நானே ஆஃபீஸ் கிளம்பற நேரம்தான் இது.  உடனே வந்து பார்க்கறேன்.  கவலப் படாதே.  நான் வந்துண்டிருக்கேன்னு அப்பா காதுல போட்டு வை.  கொஞ்சம் தெம்பாயிடுவார்.'

'ICU ல இல்ல அப்பா.  ஸ்பெஷல் வார்டுக்கு வந்துட்டா.  ரூம் நம்பர் நூத்தி ஒம்போது அக்கா.'

'சரி.  உடனே வரேன்.  நீயும் தைரியமா இரு என்ன?'

தூக்கத்துக்கு விடை கொடுக்க முகத்துக்கு ஒரு ரெஃப்ரெஷ்மெண்ட்.  முழுச் சூடு இல்லாமல் ஒரு அவசர காப்பி.

TVS 50 ன் பொதுப் பொலிவு.  அவளின் டெலிஃபோன் பேச்சை ஓரளவு புரிந்து கொண்டு வண்டியின் பக்கத்தில் சாவியோடு காத்திருந்த அப்பாவிடம் ஒரு சின்ன ஸ்மைல்.  அதற்கு மேல் பேசினால் லேட்டாகி விடுமோ என்ற கவலை.

'நானும் வேணா வரட்டுமா செல்லம்.'

'வேண்டாம்ப்பா.  நீங்க ரெஸ்ட் எடுங்கோ.  மறக்காம ஸ்ரீனிவாசன் டாக்டர பாருங்கோ.'

'இப்ப சரியாயுடுத்து கொழந்த'

'எதுக்கும் பாருங்கோளேன்.  அம்மா, இந்த அப்பாவ டாக்டர் கிட்ட விரட்டுங்கோ.  இன்னிக்கு இவர் போகலைனா நான் பேசமாட்டேன் இவர் கூடன்னு சொல்லி வையுங்கோ.'

'சரிடா செல்லம்.  கண்டிப்பா போறேன்.  நீ சமத்தா ஜாக்ரதையா போயிட்டு வா.  பதட்ட படாம வேண்டிய ஓட்டு.'

ஒரே ஒரு கிக் ஸ்டார்ட்டில் TVS 50 கிளம்புகிறது.  வீதி திரும்பும்வரை பெற்றோர்களின் கண்கள்.

தொடரும்...

No comments:

Post a Comment