Monday, November 29, 2021

திருக்குருகாவூர்வெள்ளடை

 இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

சோழ நாடு காவிரி வடகரை தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

இன்று கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரம் 

13. திருக்குருகாவூர்வெள்ளடை
சிவஸ்தலம் பெயர்
திருக்குருகாவூர் வெள்ளடை (தற்போது திருக்கடாவூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
வெள்ளடையீசுவரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்
இறைவி பெயர்
நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னி அம்மை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
1. சுண்ணவெண் ணீறணி (3-124)
சுந்தரர்
2. இத்தனை யாமாற்றை (7-29)

எப்படிப் போவது

சீகாழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மி.ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும்.

ஆலய முகவரி

அருள்மிகு
வெள்ளடையீசுவரர் திருக்கோவில்
திருக்கடாவூர்
வடகால் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609115
தொடர்புக்கு: 92456 12705.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்காவலர் அருகில் வசிப்பதால் அவரை விசாரித்து தொடர்பு கொண்டால் எந்நேரமும் தரிசிக்கலாம்.

தல வரலாறு

சோழநாட்டு காவிரி வடகரையில் இது 13வது தலமாகும்.

ஊர் = குருகாவூர்; கோயில் = வெள்ளடை.

பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கியருளிய தலம்.

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப் போக்கிய கட்டமுது தந்த விழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது.

சிறப்புகள்

தை அமாவாசை நாளில் இறைவன் தல தீர்த்தமான பால் கிணற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது.

(சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் "வரிசைப்பற்று" என்றும், "இடமணல்" என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது; அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

இத்தலத்து இறைவன் பெயரை வெள்ளடை மகாதேவர் என்றும், குருகாவூர் வெள்ளடையப்பன் என்றும் மேற்படி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கல்வெட்டுக்கல் கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

ஊரின் பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி காவியங்கன்னி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன.

கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இறைவன் சுந்தரருக்கு அமுது படைத்தல்: சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளுகையில் தாகமும், பசியும் அவரையும் அவர் தொண்டர் கூட்டத்தினரையும் வருத்திற்று. இறைவர் அந்தணர் உருவம் கொண்டு வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரர் உண்டு உறங்குகையில் இறைவர் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரர் தூக்கத்தினின்று எழுந்து "இத்தனையாமாற்றை யறிந்திலேன்" எனத் தொடங்கும் பதிகம்பாடி கோயிலுக்குச்சென்று இறைவனை வழிபட்டார். சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

தொடரும் 

திருச்சிற்றம்பலம்

●●●●●திருக்குருகாவூர்●●●●●

.......................திமுநா......................

•••••••••••••••1••••••••••••••••

இந்த  ஊரைப் பற்றி  என்றாவது  ஒருநாள் திவேன் எனக் குறிப்பிட்டிருந்தேன். 

இன்று தொடர் பதிவு ஆரம்பம்!

குருகாவூர் வெள்ளடை

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

'குருகாவூர்'  என்பது பழமையான  பெயர்;

தேவாரப் பாடல்களில் காணப்படுவதும் இப்பெயர் தான்!

திரு என்ற அடைமொழி சேர திருக்குருகாவூர் ஆயிற்று! சித்தர்கள் சிலர் ' கருகாவூர் ' என இவ்வூரைச் சித்தரித்தாலும், பண்டைய பெயர் திருக்குருகாவூர்  தான் நிலைத்தது!  நாளடைவில் பேச்சு வழக்கில் அது முட்டி மோதி சிதைந்து 'திருக்கடாவூர்'  ஆகி  இப்போது  அலைகிறது! 

திருக்கருகாவூர் என புகழ்வாய்ந்த ஒரு ஊரும்  உள்ளது.

குருகாவூரும் கருகாவூரும்  ஒன்றே என தவறாகக் கருதுபவர்களும்  உண்டு. இரண்டிற்கும் சில ஒற்றுமைகளிருந்தாலும், இரண்டும் வேறு வேறு!

திருக்கருகாவூர்   தஞ்சைக்கு அருகில் உள்ளது. 'கருகாத்த நாயகி' யோடு முல்லைவனநாதராக எழுந்தருளி  இருக்கிறார், சிவபெருமான்  அங்கு!

நாம் இப்போது  திருக்குருகாவூரைப் பற்றியே பார்ப்போம்.

இன்று நீரின்றி காயும் பல கிராமங்களில் இதுவும் ஒன்றுதான்! ஆனால்,  அறுபதாண்டுகளுக்கு முன் இருந்த இந்த ஊரின் அழகுதான் இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது:

நீரோடும் வாய்க்கால்கள், நெல்விளையும் வயல்கள்,   தென்னந்தோப்புக்கள்,  துவான குளம்,  பழமையான சிவன்கோவில், வெண்மணல்வீதிகள் என வளமான ஊர்!

இதுவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  எப்படி இருந்திருக்கும்?

இந்த ஊரின் இயற்கை வளத்தை தேவாரம் பேசுவது தெவிட்டாத சுவை!

அச்சுவை அறியும் முன், ' வெள்ளடை' என்றால் என்னவென்றும் அறிய வேண்டும். அது  வெள்ளை அடை எனப்படும்  ஏதோ திண்பண்டமல்ல!

திருக்குருகாவூர்  கோவிலில் குடிகொண்டுள்ள  மூலவரின் தூய தமிழ்ப்பெயர்:  "வெள்ளடைநாதர்" !

தேவாரத்தில் வெள்ளடை எனக்குறிப்பிடப்படுவது குருகாவூர் கோயில்!
வெள்ளடை என்றால் " பெரும் அண்டம்" என்றும் பொருளாம்!
வெள்ளடையில் எழுந்தருளிய இறைவன்: வெள்ளடைநாதர்!
மூலவரின் மற்றொரு பெயர் : வெள்விடைநாதர்!
அவர் வெள்ளை காளை மீது வீற்றிருப்பவர்தான்!
வடமொழியில் "சுவேதரிஷபேஸ்வரர்"!
' வெள்விடை' தான் மருவி 'வெள்ளடை' ஆயிற்றோ
என்று கூட நினைக்கத் தோன்றும்!
ஊரின் முழுப்பெயர் "குருகாவூர் வெள்ளடை"
எனவும் கொள்ளலாம்! 

'குருகாவூர் வெள்ளடை உறைவானை '  என சுந்தரர்  குறிப்பிடுகிறார்!

(...தொடரும்...)



No comments:

Post a Comment