Friday, November 26, 2021

உறவுபோட்டமுடிச்சு_37

உறவுபோட்டமுடிச்சு_37

காலை ஏழு மணிக்கே 'அண்ணி.... கீதா' என்ற குரல் வாசலில்.  கருப்பனுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த கீதா தன் கையில் உள்ள அழுக்கை சிமென்ட் தொட்டி தண்ணீரில் கைவிட்டு அலம்பிவிட்டு புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே வாசலுக்கு வருகிறாள்.

'வாங்கோ மாமா.  என்ன காலங் கார்த்தாலையே!  என்ன விசேஷம்?'

வந்தவர் சாக்ஷாத் சடகோப முதலியார்தான்.

'நல்ல சமாசாரம் தான்.  சபேசன தீவிர சிகிச்சைலேந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாத்திட்டாய்ங்க.  நேத்திக்கு போனபோது தூங்கிட்டு இருந்தான்.  உன்னத் தான் வரலையா வரலையான்னு கேட்டு நச்சரிக்கரானாம்.'

'நெஜமாவே நல்ல தகவல் மாமா.  இருங்கோ மாமிய கூப்டறேன்.  நீங்களே மாமிகிட்ட சொல்லிடுங்கோ.'

திரும்பிப் பார்க்கிறாள்.  ஞானம் நின்றுகொண்டிருக்கிறாள்.

'சடகோபன் குரல கேட்டோண்ண அப்படியே சமையல் உள்ளுல கையில எடுத்தத அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்.'

'ரொம்ப சந்தோஷம் சடகோபா.  ஆகாரம் சாப்பிட ஆரம்பிச்சுட்டாராமா?'

பசியோடு பதி இருக்கக் கூடாது பத்தினிகளுக்கு.

'அண்ணி, அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்.  இப்பத்தான உசுரு பொழச்சு வார்டுக்கு வந்துருக்கான்.  நாளைக்கு கார் தஞ்சாவூர் போவுது.  வரியா அண்ணி, கூட்டியாண்டு போறேன்.  நீயும் வாம்மா கீதா.'

'இல்ல.  எனக்கு கழனி வேல இருக்கு. மாமிய வேணா கூப்டுண்டு போங்கோ.'

'ஒன்னதானமா பார்க்கணும் பார்க்கணுங்கறான்.  கார்த்தால போயிட்டு சாயந்திரமா திரும்ப போகறீங்க. ஒரு நாளுல வேலை ஒண்ணும் ஆகாது.'

மறுத்து விட்டாள் எவ்வளவு சொல்லியும்.

மறுநாள் காலை மாமியை முதலியார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் காரில் ஏற்றி விட்டு வயலுக்கு செல்கிறாள்.

'பேச்சி, நேத்திக்கே உன்ன கேட்டேன்.  உழறது எப்படின்னு எனக்கு சொல்லி தரமாட்டேங்கற பார்த்தியா?'

'அந்த பேச்செல்லாம் பேசாதிய,  எங்க வூட்டுக்காரு என்ன ஏசும்.  எம்புட்டு அழகா இருக்கிய.  கை கால்லாம் சுகமா இருக்கறது பிடிக்கலையாக்கும்.  இதெல்லாம் கஷ்டம் மா.  எங்களுக்கெல்லாம் படி அளக்கற லட்சுமி நீங்க.  அங்குட்டு போய் உக்காருங்க.  நாங்க உழர்றத வேடிக்க மாத்திரம் பாருங்க தாயி.'

பேச்சி  என்கிற பேச்சியம்மாள் சிவலிங்கத்தின் சம்சாரம்.

அப்போது அங்கு வந்த சிவலிங்கமும் அவள் களத்தில் இறங்குவதற்கு சம்மதிக்க மறுத்தான்.

'கீதா, சொன்னா கேளு.  ஊர் பெரிய மனுஷங்களுக்கு தெரிஞ்சா என்ன மரத்துல கட்டி அடிப்பாக.  அய்யர் பொண்ணு வேற நீ.  ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா ஆரு பதில் கொடுக்கறது.'

கீதாவின் பிடிவாதம் கடைசியில் ஜெயிக்கிறது 'ஒரு பத்து நிமிஷம் தான்' என்ற  அடிப்படையில்.

பேச்சி கலப்பையை கொடுக்கிறாள்.  சரியான கனம்.  முன்னால் மாடுகள்.   ஒரு கையில் சாட்டை மாடுகளின் நடையை சீர் படுத்த.  பழக்கப் பட்ட எருதுகள் தான்.  எதற்கும் பக்கவாட்டில் பேச்சி நின்று கொள்கிறாள்.

பேச்சி சொல்லிக் கொடுத்தபடி தயாரகிறாள்.

தோள்பட்டைகள் முழங்கைகள் மணிக்கட்டுகள் எல்லாவற்றிலும் வலி.  முதல் முறை ஆச்சே.  இருக்குமே. பொறுத்துக் கொள்கிறாள்.  எப்படியும் இன்னிக்கு பத்து நிமிஷமாவது உழுதுடனும்.

காலிலே கொடுக்கும் அழுத்தத்தில் முழங்கால் பகுதிகளும் தொடைகளும் சேர்ந்து வலிக்க ஆரம்பிக்கின்றன.

'அட, பரவாயில்லையே. அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும் போல இருக்கே.  பழக பழக வலிகளும் போயிடும்னு தான் நெனைக்கிறேன்.'

அவளுக்கு அவளே ஒரு ஷொட்டு.  ஒவ்வொரு இன்ச் மாடு நகரும் போதும் ஒரு பெருமிதம்.  பேச்சியைப் பார்த்து பார்த்து ஒரு சிரிப்பு.

அப்போது கீழே கவனிக்காமல் வயலில் இருந்த சற்று பெரிய கல் கலப்பையில் சிக்க .... மாடு அதன் கடமையில் பயணிக்க .... கலப்பை கீதாவின் கைவிட்டு நழுவி..... பிரண்ட கல் கீதாவின் காலைப் பதம் பார்க்க.... ரத்தம்.

'என்ன புள்ளம்மா நீ.  சொன்னா கேக்கியா? பேச்சி, கைத்தாங்கலா சின்னம்மாவ அழச்சிகிட்டு போய் அரசமரத்தடில உட்கார வெச்சு கட்டுப்போடு.  ரத்தம் எப்படி கொட்டுது பார்.  அய்யருக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ தெரியாது.'

'கவலப்படாத சிவலிங்கம்.  கல் தடுத்துதுன்னு மட்டும் சொல்லிக்கறேன்.  கலப்பையெல்லாம் சொல்ல மாட்டேன்.'

அங்குள்ள அரசமரத்தின் அடிப்பகுதியில் உள்ள கனமான வேரில் கீதாவை உட்கார வைக்கிறாள் பேச்சி.  குடிப்பதற்காக கொண்டு வந்திருந்த ஜலத்தால் அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை கழுவி விட்டு சர்ர்ர் என்று தன் புடவையின் தலைப்பிலிருந்து ஒரு கிழி.  

'ஏய் பேச்சி என்ன பண்ற?  நல்ல புடவைய போய் இப்படி கிழிப்பாளா?'

'அட நீங்க ஒண்ணு தாயி.  இது என்ன ஆஜுபத்திரியா மருந்து வெச்சு கட்டு போட?  ஒரு ஓரமாத்தான கிழிக்கறேன்.  சும்மா இருங்க.  கால காட்டுங்க.  கால நல்லா உதருங்க.  ரத்தம் எம்புட்டு போய் கிட்டு இருக்கு.'

பேச்சிக்கு தெரிந்த முதல் சிகிச்சை ஓவர்.  வலி கீதாவை அமைதியா இருக்க விடவில்லை.

'கீதா பொண்ணு, மொதல்ல நீ கெளம்பு வூட்டுக்கு.  வூட்டுக்கு போய் மருந்து போட்டுட்டு கொஞ்சம் கால நல்லா நீட்டி படுத்து தூங்கு.  நான் வேலய முடிச்சிட்டு வந்து பாக்கேன்.'

'இங்க வேல நெறைய இருக்கே?'

'நாங்க பார்த்துக்கறோம் புள்ள.  நீ கார்த்தால சொன்னத வுட கூட உழுதுபுட்டு போறோம்.  சரியா.  கௌம்பு புள்ள.  பேச்சி,    சின்னம்மாவ வூடு வரைக்கும் கொண்டு வட்டுட்டு வா.'

'நானே போய்க்கிறேன் சிவலிங்கம்.  பேச்சி அலைய வேணாம்.'

'ஆனாலும் நீ ரொம்ப புடிவாதம் புள்ள.  ஒன்ன கட்டிக்கப் போற அய்யருக்கு ரொம்ப கஷ்டம்.'

'அய்யே!  போய் வேலையப் பாரு. வந்துட்டாராம் பெரிசா... அய்யருக்கு பரிஞ்சுகிட்டு.  நான் போய்க்கிறேன்.'

விந்தி விந்தி ஒருவழியாக ஆத்துக்குள் வருகிறாள்.  ஒரே வலி.  மருந்து ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறாள்.  அப்பாடா சைபால் கிடைத்து விட்டது.

முன் கதவை தாழ்ப்பாளிட்டு வந்து ஒரு 'அப்பாடா' பெருமூச்சுடன் சைபால் மருத்துவம் மற்றும் படுக்கை. 

ஐந்து நிமிடங்களில் கண் அயர்கிறாள்.  ஆனால் டொக் டொக் சத்தம் தூக்கத்தை கலைக்கிறது.

விந்தி விந்தி போய் கதவைத் திறக்கிறாள்.

'வாங்கோ வாங்கோ... வாங்கோ பெரியம்மா... வாங்கோ பெரியப்பா.'

தஞ்சாவூர் பார்ட்டியை வரவேற்று அவர்களுடன் உள்ளே வருகிறாள்.

தொடரும்.....

No comments:

Post a Comment