உறவுபோட்டமுடிச்சு_34
இரவு முழுவதும் சரியாக தூக்கம் இல்லாதது கீதாவுக்கு அன்று சோர்வைக் கொடுத்தது. சீக்கிரமே சமையல் வேலையை முடித்துவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் முடியவில்லை.
பூலனூர் அக்ரஹாரத்து வாசிகள் சிலர் ஒவ்வொருவராக வந்து ஞானத்திடமும் கீதாவிடமும் சபேஸய்யரின் உடல்நிலை பற்றி விசாரிக்க வந்து கொண்டிருந்தார்கள்.
அதோடு மட்டும் கேட்டு விட்டு நின்றார்களா? சீதாவைப் பற்றி, கீதாவைப் பற்றி, பவானி மற்றும் சுசீலா பெரியம்மாக்கள் பற்றி..... இப்படியாக நீண்டு கொண்டிருந்தன அவர்கள் பேச்சு.
நான்கு மணிக்குதான் ஓரளவு ரெஸ்ட் கிடைத்தது. ஞானம் தூங்கி விட்டாள். கீதாவுக்குதான் தூக்கம் வரவில்லை. மூணு மணிக்கு வந்த பாலில் காஃபியைப் போட்டு தான் மாத்திரம் குடிச்சு விட்டு மாமிக்கு அடுப்பு சூட்டில் வைத்துவிட்டு கருப்பனை பார்க்க போகிறாள்.
என்னவோ கருப்பன் கூட மிகவும் சோர்ந்தே இருந்தான் இன்று முழுவதும்.
'என்னடா. உங்க ஐயா வந்து உன்ன பார்க்கலையேன்னு கவலப் படறியா? நன்னா குணமாகி உன்ன வந்து பார்ப்பார். அது வரைக்கும் இந்த கீதா பேச்ச கேட்டுண்டு சமத்தா இருக்கனும்.'
என்னென்னவோ பேச்சுகள் கருப்பனோடு. ஏதோ இவள் பேச்சை அது புரிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிற மாதிரி. மனதின் தவிப்புக்கு இதெல்லாம் கொஞ்சம் பூஸ்டர் மாதிரி.
கருப்பனோடு கொஞ்சிவிட்டு திரும்புகிறாள். அங்கு மாமி நின்று கொண்டிருக்கிறாள்.
'நீ பேசறதெல்லாம் அவன் கேக்கற மாதிரி என்னெல்லாமோ பேசிண்டே இருக்கியே அதோட?'
'மாமாவ அது கார்த்தாலேந்தே பார்க்கலையோன்னோ, அதான் அதுக்கு ஷொட்டு கொடுத்துண்டு இருந்தேன் மாமி. பயலுக்கு பயங்கர ஏக்கம். அடுப்புல கலந்த காப்பி வெச்சிருந்தேனே சாப்ட்டேளா?'
'சாப்டேன். ஆனா எதுத்துண்டு எதுத்துண்டு வரது. சாப்பிடவே முடியல.'
'அப்படித்தான் மாமி இருக்கும். ஆச்சு, இப்ப சந்தானம் வந்துடுவான். அவன் வந்து விஷயத்த சொன்னா கொஞ்சம் தெம்பாயிருக்கும். உங்கள நெனச்சா தான் கவலையா இருக்கு மாமி. ஒடிஞ்சு ஒடிஞ்சு போறேள். ஆத்துக்கு வந்தவா கிட்டேல்லாம் நீங்க அழரதப் பாத்துட்டு எனக்கே பாதி தெம்பு போயிடும் போல இருந்துது. தைரியமா இருங்கோ மாமி. நன்னாயிடுவா மாமா.'
'உன்ன மாதிரியே தான் அவரும் மத்தவாளுக்கு தெம்பூட்டறதுல. பாலாஜி மெட்ராஸ்ல இருந்தப்ப அவன நெனச்சிண்டு நெனச்சிண்டு அழுவேன். பின்னாடிலேந்து வந்து.....'
'ம்ம்..... பின்னாடிலேந்து வந்து ... பின்னாடிலேந்து வந்து.... சொல்லுங்கோ மாமி....அப்படியே ஊஞ்சல் பக்கம் அழச்சிண்டு போயி... கண்ண தொடச்சு விட்டு.... சொல்லுங்கோ மாமி.'
கேட்டுக் கொண்டே மாமியின் பின் பக்கமாக சென்று தோளில் கை கைகளை வைத்து அழுத்துகிறாள்.
'போடி பொல்லாதவளே. வலிக்கறது. கைய எடு மொதல்ல. ரொம்ப கெட்டு போயிட்ட நீ. சீதா வரட்டும். ரெண்டு மொத்து மொத்த சொல்றேன்.'
அவர்களுடைய இந்த விளையாட்டு அவர்களின் மனங்களில் உள்ள அழுத்தத்தை குறைத்திருக்க வேண்டும்.
'சொல்ல மறந்துட்டேனே உன் கிட்ட. பூரணி மொளகா வத்தல் ரெண்டு கிலோ கொடுத்தா. காம்ப ஆஞ்சு அந்த அலுமனிய சம்படத்துல போட்டுடறையா?'
'சரி மாமி. நானும் மொளகாய ஆஞ்சுட்டு கல்யாணி அம்மன் கோவிலுக்கு ஆறு மணிக்கு போய் விளக்கேத்திட்டு அப்படியே சந்தானத்தாத்துல பேசிட்டு வரேன். கார்த்தால சமச்சது அப்படியே இருக்கே. நான் வந்தோண்ண சாப்டலாம். மாமா குணமடஞ்சு வர வரைக்கும் தினமும் கல்யாணி அம்மனுக்கு வெளக்கேத்தறதா வேண்டிண்டிருக்கேன்.'
'என்னவோடி. உன்னோட பிரார்த்தனையாலயாவது மாமா குணமாயிட்டு வரட்டும். எனக்குதான் படபடன்னு இருந்துண்டே இருக்கு.'
மாலை கோவிலில் விளக்கேத்தி விட்டு சந்தானத்தாத்துக்கு வருகிறாள். அவன் தங்கையும் அம்மாவும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
ஏழு மணிக்கு சந்தானம் வருகிறான்.
'வா கீதா. உங்காத்துக்கு போய் பேசுவோம்.'
'ஏய், சொல்லுடா. எப்படி இருக்கா மாமா? டாக்டர் என்ன சொன்னா?
'சொல்றேன்ல. உங்காத்துக்கு போய் பேசலாம்.'
ஆத்துக்கு வந்து சந்தானம் திண்னையில் உட்காருகிறான். அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வத்தில் கீதா அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
'கீதா, ஒரு காப்பி கொடேன். டயர்டா இருக்கு.'
'ஏய் முண்டம். விளையாடாத. கொன்னே புடுவேன் உன்ன. கார்த்தாலேந்து நானும் மாமியும் எவ்வளவு பட படப் போட இருக்கோம். மொதல்ல சொல்லு.'
இனிமேலும் நீட்டினால் அடித்தாலும் அடித்துவிடுவாள் என்று மனதில் சிரித்துக் கொண்டு நடந்தவைகளை சொல்கிறான்.
'ஏன் திடும்னு மாமாக்கு ஆச்சுன்னு டாக்டர் கிட்ட கேட்டேளா?'
'குறிப்பா கேட்கல. ஆனா கன்ஜஷன்னாலன்னு புரிஞ்சிண்டோம்.'
'நெஞ்சுல பால வார்த்தடா. மாமிய கூப்படறேன். நீயே சொல்லிடு மாமா நன்னா இருக்கார்னு. கார்ல சிரமப்பட்டத சொல்லிடாத. வீணா கவலப்படுவா மாமி.'
'மாமிய அப்புறம் கூப்புடு. ஒரு முக்கியமான விஷயம். பாலாஜிக்கு அங்க ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கெடச்சுட்டா. மீனாட்சின்னு பேர். முதல் நாளிலேயே ரெண்டு பேர் வழிசலும் தாங்க முடியல. பாலாஜி உத்து உத்து அவளையே பார்த்துண்டு இருக்கான்.'
'நம்ம பாலாஜி? உத்து உத்து?? பார்த்துண்டிருக்கான்? நான் நம்பணும்.'
'ஏன் கீதா. பார்த்துட்டு தான சொல்றேன்.'
'போடா இந்த கதையெல்லாம் யார் கிட்டேயாவது சொல்லு. பாலாஜிக்கு என்னையே சரியா பார்க்கத் தெரியாது.'
வாய்தவறி இப்படி சடக் கென்று வந்துவிட்டது அவளுக்கு. சந்தானத்திற்கு ஒரே சந்தோஷம்.
'உன் மூஞ்சி அவனுக்கு பிடிக்கலையோ என்னவோ? ஆனா அந்த ரிஸப்ஷனிஸ்ட் மீனாட்சி அழகு தனிதான்.'
'சரி சரி போதும். மாமிய அனுப்பறேன். அப்படியே நீ கேட்டியே காப்பி... அதுல ரெண்டு உப்ப அள்ளி போட்டு கொண்டு வரேன். போயிடாத.'
'கீதா. நான்தான் ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லிட்டேனேன்னோ? நல்ல காப்பியா போட்டு கொண்டு வரணும் என்ன?'
உள்ளே போகும் போதே மனதோடு பேசிக் கொண்டே போகிறாள்.
'மீனாட்சியாம் மீனாட்சி. என் கையில இட்டுண்டிருக்கற மருதாணிய தொரைக்கு பார்க்க தெரியல. இதுல மீனாட்சிய உத்து உத்து பார்க்கறானாமா?'
'இந்த கிராமத்து பசங்களே இப்படித்தான். உள்ளூர் பொண்ணுங்கள பார்க்க மாட்டாங்க. தெரியும் அவங்களுக்கு வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்னு. வெளியூர் பேனா மாத்திரம் ஏதோ பட்டிக்காட்டான் யானைய பார்க்கற மாதிரி முழிச்சு முழிச்சு பார்ப்பாங்க.'
மாமியோடு சந்தானம் பேசிக் கொண்டிருக்கும் போது காப்பியோடு அங்கு வருகிறாள் கீதா.
'ஏண்டி இப்ப எதுக்கு சந்தானத்துக்கு காப்பி? மணி ஏழுக்கு மேல ஆகறது. சாப்பாடு சாப்படற நேரமாச்சே.'
'அவன கேளுங்கோ அதை. ஐயா ஆஸ்பத்திரி கதை சொன்னாரில்லையோ.... அதுக்கு கமிஇஇஇஸன். இந்தா புடியுங்கோ ஐயா சந்தானம் அவர்களே. உப்பு போதுமான்னு சொல்லுங்கோ. கல்லுப்பு அளவு தெரியல.'
சந்தானம் சிரித்துக் கொண்டே காப்பியை வாங்க எதுவும் புரியாமல் ஞானம் உள்ளே போகிறாள்.
'அவ பேர் என்ன சொன்ன?'
'மீனாட்சி. இன்னுமா அவளப் பத்தி நெனச்சிண்டிருக்க?'
'ம்ம்... நான் எதுக்கு நெனைக்கணும். உன்னோட கூட்டாளி தான் நெனைச்சிண்டே இருக்கானே.'
'அப்பைக்கப்ப செங்கிப் பட்டி போய் பார்த்துட்டு வந்து ஒன் கிட்ட சொல்றேன்.'
'ஒண்ணும் வேணாம். நான் ஏதோ அவ மேல பொறாம படறேன் பாரு? காப்பி குடிச்சாச்சோண்ணோ. நடைய கட்டு.'
'மன்னார்குடி பிசாசு ரொம்ப கோபமா இருக்கு போல இருக்கு. நான் கிளம்பறேன்.'
'பிசாசு கிசாசுன்னு சொன்னே....'
மேற்கொண்டு அவள் திட்டுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சந்தானம் செல்கிறான்.
தொடரும்...
No comments:
Post a Comment