Friday, November 26, 2021

உறவுபோட்டமுடிச்சு_30

உறவுபோட்டமுடிச்சு_30

'விசு அழுதானா?' என்று கேட்டுக் கொண்டே ஆத்துக்குள்ளே நுழைகிறாள் பவானியின் பெண் லீலா.

'இல்லை.  அவன் பாட்டுக்கும் தா பூ ன்னு என்னவோ விளையாடிண்டே தூங்கிட்டான்.  உன்னோட பர்ச்சேஸ் முடிஞ்சு தோண்ணோ?'

'ம்ம்.. முடிஞ்சுதும்மா.  அப்புறம் ஒரு விஷயம்.  பஸ் ஸ்டாண்டுல ரவியை பார்த்தேன்.  கல்யாணமான ஜோர்ல ஒரு சுத்து குண்டாயிருக்கான்.'

'ரவியா? யார சொல்ற?'

'என்னம்மா நீ.  ரவிய தெரியாதா?  அதாம்மா  கடலூர் சுசீலா பெரியம்மா பையன்.  போன வருஷம் கல்யாணத்துக்கு கூட போனோமே?'

'ஓ.  அவனா?  ஆத்துக்கு கூப்படலையா அவன?'

'ஆஃபீஸ் விஷயமா தஞ்சாவூர் வந்தானாம்.  கூப்டேன்.  இன்னொரு தடவ வரேன்னு சொல்லிட்டான்.'

'அவன் ஆம்படையாளுக்கு ஏதாவது விசேஷம் உண்டா?'

'அஞ்சாம் மாசமாம்.  அத விடு.  அத விட முக்கியமான மேட்டர்.'

'என்னடி அத விட முக்கியமான மேட்டர்?'  ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் லீலாவைப் பார்க்கிறாள் பவானி.

'நம்ம பாலாஜி கடலூருக்கு போயிருக்கான்.  மாமா உடம்ப பத்தி சொன்னானாம்.  செங்கிப் பட்டியில மாமாவ சேர்க்கப் பேறானாம்.  மாமா ட்ரீட்மெண்ட் முடிஞ்சு திரும்பி வர வரைக்கும் பெரியப்பாவ பூவனூர்ல உள்ள நிலத்த பார்த்துக்க முடியுமான்னு கேட்டிருக்கான்.'

'என்னடி சொல்ற?  நாம இங்க இருக்கும்போது நம்மள கேட்காம ஒரு கோடி கடலூர் போவானேன்?  நம்மள கேட்டா ஏதாவது ஏற்பாடு உங்க அப்பாவே செஞ்சு கொடுத்திருப்பாரே.'

'எனக்கு என்னமா தெரியும்.  அவன் சொன்னத உன் கிட்ட சொல்றேன்.'

'சுசீலா ஆத்துக்காரர் சரின்னு சொல்லிட்டாராமா?'

'நிலத்த பாத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.  கடலூர்ல அட்மிட் பண்ணினா மாமாவ வேணா பார்த்துக்கறேன்னாராம்.  அப்பா கிட்ட பேசிட்டு வரேன்னு போனான்னாம்.  ரவி என்ன கேட்கிறான் மாமா உடம்ப பத்தி ஏதாவது எனக்கு தெரியுமான்னு.'

'நமக்கே தெரியாம எவ்வளவு நடக்கறது பார்?  அப்பவே ஒங்க அப்பா கிட்ட சொன்னேன்.  இப்ப மாமா வாத்துக்கு உதவி செஞ்சா பின்னாடி நாலு நல்ல விஷயம் பேசறதுக்கு சௌகரியமா இருக்கும்.  எங்கே கேட்டார்?'

'இப்பதான் என்ன கொறஞ்சு போச்சு?  இங்கதான இருக்கு பூவனூர்.  நேர போய் தான் பார்த்துட்டு வாயேன்.'

'நன்னா விட்டுடுவாரே உங்க அப்பா என்ன?  உடப்பொறந்தான பார்க்கறதுக்கு கூட அந்த கெஞ்சு கெஞ்சணும்.'

'ஏம்மா  மாமாவ பார்க்க எதுக்குமா அப்பாகிட்ட பர்மிஷன் கேட்கணும்.  சொன்னா போதாதா?'

'நன்னா கேட்ட போ.  சொன்னா தொத்தும் பார்.  ஒட்டிக்கும் பார்.  வேணாம் பார்.  நீ கைக் கொழந்த காரின்னு சொல்லுவார்.  சரி, அவராவது போய் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வருவாரா?  கலெக்டர் மெட்ராஸ் போறார், இப்ப முடியாதும்பார்.  கலெக்டர் ஆஃபிஸே எல்லாமே இவர் தலையிலதாம்பார்.  ஆனா, பாலாஜி மட்டும் ஜானாக்கு மாப்பிள்ளையா வரணும்.'

'இப்படியெல்லாம் மனசுல வெச்சிருக்கேளே.  ஒரு வார்த்த ஜானா கிட்ட கேட்டேளா பாலாஜிய பிடிக்கறதான்னு.'

'அவளப் போய் இப்ப கேட்பாளா.  அவ சின்ன பொண்ணு.  பாலாஜி படிப்ப முடிக்கணும்.  நல்ல உத்யோகத்துல சேரணும்.  அப்ப பாலாஜிய பத்தி பேசினா வெக்கப்பட்டு ஜானா ஓடப்போரா'

'ஏம்மா நாலஞ்சு வருஷம் கழிச்சு நடக்கப் போறதுக்கு இப்ப ஏன் அலுத்துண்டு மண்டைய போட்டு உடச்சுக்கறேளோ?'

'பொண்ண பெத்தவாளுக்கு தான் இருக்கும் அக்ஞானம் எப்போதும்.  ஏற்கனவே பாலாஜிக்கு நம்மாத்து மனுஷாளுலேயே போட்டா போட்டி.  சீதா பொண்ணு கீதா.  சுசீலா பொண்ணு சுபத்ரா.  இதுல சீதா அண்ணாவாத்தையே சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கா.  அவளுக்கு தோதா மன்னார்குடி வேற பக்கமாயிடுத்து.   ஆத்துக் காரர் வேற இல்லையோண்ணோ அவளுக்கு?  அண்ணாவோட பச்சாதாபம் பரிபூரணமா கெடச்சுடறது.'

'சரியான சுயநலம் மா உனக்கு.  கீதா தான் பாலாஜிய பண்ணிக்கட்டுமே?  நீயும் பெரியம்மாவும் நன்னா இருக்கேள் நல்ல ஸம்பத்துகளோட.  சித்திதான கஷ்டப்பட்டுண்டு இருக்கா.'

'நீ ஒருத்தியே போறும்டி எனக்கு. பாலாஜி மாதிரி பையன் இந்தாத்துக்கு மாப்பிள்ளையா வர எவ்வளவு கொடுத்து வெச்சிருக்கணும்?'

அப்போது உள்ளே நுழைந்த ராமநாதன் பவானி பேச்சிலிருந்த கடைசி வார்த்தைகளை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு, 'என்ன ஜானாக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா எனக்கு தெரியாம?'

'என்னன்னா, புதுசா மாப்பிள்ளைய யார் பார்த்தா?  ஏற்கனவே பேசிண்டது தான.  நம்ம ஜானாக்கு பாலாஜின்னு நம்ம ரெண்டு பேரும் மனசுல வெச்சிண்டு இருக்கறத லீலா கிட்ட சொல்லிண்டு இருந்தேன்.'

'இப்ப என்ன தீடீர்னு அந்த பேச்சு?'

' லீலா கடைக்கு போயிருந்தா.  பஸ் ஸ்டாண்டுல ரவியை பார்த்தாளாம்..  லீலா.... சொல்லேண்டி அப்பாகிட்ட.'

மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து அப்பாவிடம் சொல்கிறாள் லீலா.

'பவானி, நாம பேசிண்டது என்னவோ வாஸ்தவம் தான்.  இப்ப உங்க அண்ணா இருக்கர நிலைமைலே கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.  டிபி தொத்தெல்லாம் அவ்வளவு லேசு பட்ட சமாச்சாரம் இல்ல.  இப்ப ஒண்ணும் உடனேயே பாலாஜிக்கு பொண்ணு பார்க்க போறதில்ல.  நாம மட்டும் ஏன் ஜானாவ பார்க்கலாம்னு முந்திரி கொட்டையாட்டம் இப்பவே சொல்லிண்டு.'

'அண்ணாக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல மன்னிய போய் பாத்து ஆறுதலா நாலு வார்த்த சொல்லிட்டு வரணும்னா.  நாளைக்கு கல்யாண பேச்சு ஆரம்பிக்கரத்த அப்ப வராம இப்ப மாத்திரம் வரயே பவானின்னு கேட்டுட்டா ஜானாக்கு நல்ல வரன் அமையறது அமையாம போயிடுமோன்னோ?'

'நான் சொன்னா கேட்க மாட்ட.  இப்ப போனா உங்க மன்னி அண்ணாக்கு உங்காத்துல வெச்சு ட்ரீட்மெண்ட் பார்த்துக்க ஹெல்ப் கேட்டுட்டான்னு வெச்சுக்கோ.  அப்ப என்ன சொல்லுவேன்னு ஒரு தடவை நன்னா யோசிச்சிண்டு பூவனூர் கிளம்பு.  நல்ல வேளை பாலாஜி டாக்டர பார்த்துட்டு திரும்ப இங்க வரலைன்னு சந்தோஷப் பட்டுண்டு இருக்கேன்.  இப்ப நீயா போய் மாட்டிக்க போறியாக்கும்.'

'அண்ணாவாத்துல இவ்வளவு நடந்துண்டு இருக்கு.  கேள்விப் பட்டும் நாம போய் பார்க்கலைனா எப்படின்னா?'

'அதையே நாம அவா கிட்ட திருப்பி கேக்க முடியாதா.  பக்கத்துல இருக்கற மாப்பிள்ள நான், என் கிட்ட கூட எதுவும் சொல்லாம ஒரு கோடி திருவேந்திபுரம் போய் பாலாஜி பேசிட்டு வந்திருக்கான்.  அது உனக்கு தப்பா தோணலையா?'

'எதையோ சொல்லி என்ன குழப்பி என் வாய அடக்கிடுங்கோ.'

'உனக்கு அண்ணா மன்னிய பார்க்கணும் அவ்வளவு தான.  ஒரு பத்து நாள் கழிச்சு போகலாம்.  நாம ரெண்டு பேரும் சேர்ந்து.'

'பத்து நாளா?  உங்க இஷ்டம் இனிமே.'

வருத்தப்பட்டு கண்ணை துடைத்துக் கொண்டே சமையல் அறை சென்று கொண்டிருந்த பவானியை சமாதானப் படுத்த முயற்சிக்கிறார் ராமநாதன்.

அவர்களுக்குள் தீர்மானம் செய்து கொள்ளட்டும் என்று நினைத்து லீலா தன் குழந்தையைப் பார்க்க ரூமுக்கு செல்கிறாள்.

'புரிஞ்சுக்கோ பவானி.  அடுத்த வாரம் லீலாவ அவ புக்காத்துல கொண்டு விட்டுட்டு கிளம்பலாம்.  எங்க போப்போறது பூவனூர்?  நான் எப்பவாவது நீ பொறந்தாத்துக்கு போறத தடுத்திருக்கேனா?  நான் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.'

பவானி அழுதாத்தான் ராமநாதனுக்கு தாங்காதே?  அவளை சமாதானப் படுத்த கெஞ்சாத குறையாக பேச்சை தொடர்கிறார்.       

'மொத்தத்துல நம்ம ஜானாக்கு கிடைக்கப் போற நல்ல வரன் உங்களோட தேவையில்லாத சந்தேகத்தால கெட்டுப் போகப் போறது?  பாலாஜி மாதிரி ஒரு நல்ல பையன் வல போட்டு தேடினாலும் கெடைக்காது.  பிக்கல் புடுங்கல் கெடையாது.  இதெல்லாம் எத்தன தடவ சொன்னாலும் நீங்க கேட்க போறதுல்ல.'


'என்னவோ இப்பவே பாலாஜி தாலிய கையில வெச்சிண்டு அலஞ்சிண்டிருகற மாதிரி பேசற.  எனக்கு தெரியும் பவானி, எப்ப பேச்ச ஆரம்பிக்கணும் எப்படி கச்சிதமா முடிக்கணும்னு.  கொஞ்சம் பொறுமையா இரு.  நம்ம ஜானு குட்டிக்கு பாலாஜி தான்.  போதுமா?  எப்படியாவது முடிக்கறேன் நீ வேணா பார்.'

'ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கோ.  பணம் காசு அந்தஸ்து பார்த்து பொண் எடுக்கற குடும்பம் இல்ல எங்க அண்ணா குடும்பம்.  பணம் காசு இல்லைனாலும் குணம் இருந்தாச்சுனா கட்டின புடவையோட பொண்ண கூட்டிண்டுடுவா எங்க அண்ணா மன்னி.  எனக்கு என்னமோ என் தங்க பொண்ணு கீதாவ கூட்டிண்டுடுவாளோன்னு ஒரு சந்தேகம் இருந்துண்டே இருக்கு.'

'சரி, சரி.  இப்ப என்ன?  பத்து நாள் பொறுத்துக்கோ.  பூவனுாருக்கு போய் அவாளுக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சுடுவோம்.  உன் தங்கைய பத்தி கவலப்படாத.  அவாளோட முன்னேற்றத்துக்கு ஏதாவது கைய காமிச்சுட்டா நம்மளயே சுத்தி சுத்தி வருவா.  நம்ம பேச்ச மீற மாட்டா.'

அவா அவா கணக்குகள்ல அவா அவாளோட கற்பனைகளும் களவுகளும்.  நாம அதுல குறுக்க நிக்கவா முடியும்?


தொடரும்.....

No comments:

Post a Comment