உறவுபோட்டமுடிச்சு_38
விந்தி விந்தி நடந்து கொண்டு வலியையும் ஒரு பக்கம் பொறுத்துக்கொண்டு உபசார வரவேற்பை தொடர்கிறாள் கீதா.
'எப்படி இருக்கேள் பெரியம்மா? லீலா எப்படி இருக்கா? ஜானா? மறந்தே போயிட்டேனே. லீலா குழந்த எப்படி இருக்கான்? பெரியப்பா, நிக்கறேளே. ஊஞ்சல்ல வேணும்னாலும் உட்காருங்கோ? எத்தன வருஷம் ஆச்சு உங்கள பார்த்து? பெரியப்பாவோட சேர்ந்து நில்லுங்கோ. நமஸ்காரம் பண்ணிக்கறேன்.'
'நன்னா இருடியம்மா? இவ்வளவு கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி என் தம்பி எப்படி இருக்கான் சொல்லு? எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்க? அதச் சொல்லு மொதல்ல.'
'எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்க?' இப்படி பவானி பெரியம்மா கேட்டதை யதார்த்தமாகவே பார்த்தாள் கீதா. அந்த கேள்வியில் புதைந்துள்ள புகைச்சல் கீதாவுக்கு புரியவில்லை .
'நீங்க வேற பெரியம்மா. நான் எங்க அட்மிட் பண்ணினேன்? ரொம்ப நாளாச்சே மாமாவ பார்க்கலாம்னு பூவனூர் வந்த போது தான் மாமா உடம்ப பத்தி தெரியும். பாலாஜி தான் ஒண்டியா பாவம் அலஞ்சிண்டு இருக்கான் ஆஸ்பத்திரியும் டாக்டருமா?'
'சரி, ஞானமும் அங்கதான் இருக்காளா?'
'இல்ல பெரியம்மா. நேத்திக்குதான் மாமா தீவிர சிகிச்சைலேந்து வார்டுக்கு மாறியிருக்கா. சடகோபன் அங்கிள் கார் தஞ்சாவூர் போச்சு யதேச்சயா இன்னிக்கு. மாமிக்கு இருப்பு கொள்ளல. மாமாவ பாத்துட்டு வரேன்னு போயிருக்கா?'
'அது சரி, நீ ஏன் நொண்டற?'
'அத விடுங்கோ பெரியம்மா. சொன்னா சிரிப்பேள். ஒரு சின்ன கல்லுல எடறிண்டுட்டேன். கால பேத்துடுத்து. இப்பத்தான். சித்த நாழி முன்னாடி. பெரியம்மா, நான் பாட்டுக்கும் பேசிண்டே இருக்கேனே. காப்பிக்கு பால் மூணு மணிக்குதான் வரும். மோர் எடுத்துண்டு வரட்டுமா? வரட்டுமா என்ன, வரேன். சித்த இருங்கோ.'
விந்தி விந்தி சமையல் அறை. இதற்கிடையில் தம்பதிகளின் குசுகுசு பேச்சுகள்.
'பார்த்தேளா இப்ப? கிட்டத்தட்ட என் தம்பியோட பூவனூர் ஆம் கீதா கைக்கு வந்துடுத்து.'
'பவானி, எனக்கென்னவோ கீதா இங்க வேலக்காரியா தான் வீட்ட பார்த்துண்டு இருக்கா. யதேச்சயா வந்தவள தங்களோட சுயநலத்துக்காக ஆத்த பார்த்துக்க வளச்சு போட்டுருக்கு உன் தம்பி குடும்பம்.'
'எத எடுத்தாலும் தப்பு கணக்கு போட்டுண்டு இருங்கோ. சீதா லேசு பட்டவ இல்ல. காரணம் இல்லாம தன் பொண்ண நாள் கணக்கா இன்னொருத்தராத்துல தங்க விடுவாளா?'
'அப்பறம் பேசலாம். மோர் எடுத்துண்டு வரா அவ.'
'நீர்மோரில் கருவேப்பில இஞ்சியெல்லாம் போட்டு எடுத்துண்டு வந்திருக்கேன் பெரியம்மா. காப்பி தான் கொடுக்க முடியாம போச்சு.'
'அது இருக்கட்டும். நீ இங்க எத்தன நாளா தங்கியிருக்க?'
'வந்து பத்து நாளுக்கு மேல ஆயிடுத்து பெரியம்மா. இன்னும் மாச கணக்குல தங்கும்படியா வேற இருக்கும். மாமா ஆஸ்பத்திரி போறதுக்கு முன்னாடி கழனியையும் நான்தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டார்.'
தம்பதிகளுக்கு அதிர்ச்சி.
'அப்படின்னா என் தம்பியின் நிலம் கூட உன் கைக்கு வந்துடுத்துன்னு சொல்லு. பரவாயில்லடி நீ. நல்ல கெட்டிக்காரிதான்.'
கேள்வியில் உள்ள வித்தியாசம் கீதாவுக்கு புரிந்தாலும் உறவுகளை வித்யாசமாக பார்க்க தோன்றவில்லை.
'விளையாட்டா பேசறாளா பெரியம்மா, இல்ல மனசுல ஏதாவது இருக்குமா?' மனதில் வந்த இந்த சந்தேகம் பெரியம்மாவுடன் பேசுவதில் இருக்க வேண்டிய கவனத்திற்கு எச்சரிக்கையை உணர்த்தியது.
'பெரியம்மா நீங்க விளையாட்டா கேட்கறதா நெனச்சிண்டு பதில் சொல்றேன். எங்க அப்பா செத்துபோன போது மாமா எங்களுக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கா. உங்களுக்கும் தான் தெரியுமே. இன்னிக்கு மாமா ஒரு இக்கட்டான நிலமையில இருக்கும்போது உதவறதுதான முறை? மாமாக்கு விவசாயத்த விடவும் மனசு வரல. என் கிட்ட கேட்டா. என்னால மறுக்க முடியல.'
'பவானி, நீ ஏதோ விளையாட்டா கேட்டது கீதாவுக்கு பிடிக்கலைனு நெனைக்கிறேன்.'
'இல்ல பெரியப்பா. நான் எதுவும் தப்பா எடுத்துக்கவே இல்ல. மாமாவுக்கு தன்னோட உடம்பு சரியில்லாத நிலையிலேயும் இங்க இருக்கற அவரோட நிலத்த நம்பி ஜீவனம் பண்ணிண்டு இருக்கர குடியானவங்களுக்காக இந்த தடவ சாகுபடிய நிறுத்தக் கூடாதுன்னு ஆசப்பட்டார். எனக்கு இதப்பத்தி அக்ஷரம் தெரியாட்டாலும் சரின்னு சொல்லிட்டேன். ஏன் சரின்னு சொன்னேங்கறது எனக்கே இன்னமும் புரியல. பெரியம்மா எந்த அர்த்தமும் எடுத்துக்க கூடாதுங்கறதுக்காகத் தான் இத புரியும்படி இன்னொரு தடவ சொன்னேன்'
'நான் எதுவும் தப்பா நெனைக்கலையே. என் தம்பிக்கு உதவி செய்ய யாராயிருந்தாலும் தயாரா இருப்பா. அவன் உன்ன கூப்ட்டு நிலத்த பார்த்துக்கோன்னு சொன்னான்னா அதுலேயும் அர்த்தம் இருக்கும்.'
பெரியம்மாவின் பொடி வைத்து பேசும் போக்கை அறிந்து கொள்கிறாள் கீதா. பவானி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அர்த்தத்தோடு பதில் சொல்லி அதனால் உறவு எதாவது பாதிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனத்தை செலுத்தினாள்.
'சரி பெரியம்மா. நான் ஆரம்பத்துல கேட்டதுக்கெல்லாம் பதிலே சொல்லலையே நீங்க. லீலா எப்படி இருக்கா? கைக் கொழந்த எப்படி இருக்கான்? ஜானா எப்படி இருக்கா?'
'எல்லாரும் நன்னா இருக்கோம்டி. நீ தான் தஞ்சாவூர் பக்கம் வரமாட்டேங்கற.'
'எங்க பெரியம்மா வர்றது? எனக்கும் எங்க அம்மாக்கும் அப்பளாத்தையும் கருவடாத்தையும் இட்டு நாலு காசு சம்பாதிச்சு பொழப்ப ஓட்டறதுக்கே நேரம் சரியா இருக்கே.'
'கீதா, உங்க அம்மா இவ்வளவு கஷ்டப்படறது தெரியவே தெரியாது உண்மையிலேயே இந்த பெரியப்பாவுக்கு. உனக்கு நல்ல உத்யோகம் வாங்கித் தர்றது இந்த பெரியப்பா பொறுப்பு. ஒரு வார்த்த கலக்டர் கிட்ட நான் சொன்னா போதும். அரசாங்க உதியோகமே உனக்கு வாங்கி கொடுத்துடுவேன். சங்கோஜமே படாத துளிக்கூட. நேரா தஞ்சாவூர் வா. உத்யோகம் கெடச்சுதுன்னே வெச்சுக்கோ.'
'கண்டிப்பா வந்து பார்க்கறேன் பெரியப்பா. அம்மா கூட சொல்லிண்டு இருப்பா. உங்கள பார்த்தா நல்ல உத்யோகம் வாங்கி கொடுத்துடுவேள்னு. போஸ்டல்ல டிகிரி படிச்சிண்டிருக்கேன். இன்னும் ஒரு வருஷம்தான். முடிச்சோண்ண வரேன்.'
'போஸ்டல்ல தான படிக்கற. படிப்பு முடியற வரைக்கும் காத்துண்டிருக்க வேண்டாம். வேல வாங்கித்தரேன். அதப் பார்த்துண்டே படிக்கலாமே எப்போதும் போல.'
'நீங்க சொல்றது கூட நன்னாத்தான் இருக்கு பெரியப்பா. ஆனா மாமா உடம்பு குணமாகணும் மொதல்ல.'
'மத்தவாளுக்காக உன்ன பத்தி கூட கவலப்படாம இருக்கியே. நல்ல பொண்ணுமா நீ.'
'ஏன்னா, அவ பூவனூர்லியே இருந்துடலாம்னு நெனைக்கறாளோ என்னவோ? என் தம்பிய இப்ப நன்னா பார்த்துண்டா நாளைக்கு இந்தாத்து மாட்டுப் பொண்ணாவே இங்கேயே இருந்துடலாமே.'
ஏன் இப்படியெல்லாம் பெரியம்மா பேசுகிறாள் என்பது கீதாவுக்கு புரியவில்லை. இருந்தாலும் கேட்கப்படும கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லாமல் இருக்க முடியாதே?
'பெரியம்மா, மனுஷாளோட வாழ்க்கையே பகவான் விட்ட வழி. மொதல்ல உத்யோகம், லக்ஷியம். அப்பறம் தான் கல்யாணம். பாலாஜி எனக்குதான்னு பகவான் நெனச்சிருந்தா நடந்துட்டு போகட்டுமே. உங்களுக்கும் இது நடக்கணும்னு மனப்பூர்வமா ஆசையிருந்தா நன்னா ஆசீர்வாதம் பண்ணுங்கோளேன்.'
முகத்தில் அடித்தார்ப் போல் இவ்வளவு சாமர்த்தியமான பதில் கீதாவிடமிருந்து வரும் என்று பவானி நினைக்கவில்லை. பவானியிடமிருந்து எந்த வித உணர்ச்சியும் இந்த பதிலுக்கு வெளிப்படாமல் இருந்ததை கீதாவும் கவனிக்க தவறவில்லை.
நிலமையைப் புரிந்து கொண்டு ராமநாதன் பேச்சை மாற்ற முயற்சிக்கிறார்.
'நீ சொல்றது தாம்மா சரி. இப்பவே கல்யாணம் அது இதுன்னு மனசு போனா வாழ்க்கைல முன்னேற முடியாது. கஷ்டப்படற குடும்பம். நாலு காசு சம்பாதிச்சு சேர்த்தாதான கல்யாணத்த பத்தியெல்லாம் யோசிக்க முடியும்? தஞ்சாவூருக்கு வா. கலக்டர் கிட்ட சொல்லி உனக்கு கவர்மெண்ட் உத்யோகம் உடனே வாங்கி கொடுக்கறேன்.'
திரும்ப திரும்ப கீதாவை தஞ்சாவூர் அழைப்பதும் அவளுக்கு வேலை வாங்கித் தருவதில் முனைப்பு காட்டுவதும் கூட வித்யாசமாகவே தெரிந்ததது.
'சரி பெரியம்மா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. ரெண்டு நிமிஷத்துல ரசத்தையும் வெச்சுட்டு அரிசியையும் களஞ்சு அடுப்புல வெச்சுடறேன்.'
'எங்களுக்காக சமைக்க வேண்டாம். சாப்டுட்டு தான் வந்தோம். சபேசஸனையும் ஞானத்தையும் தான் பார்க்க வந்தோம். இவ்வளவு நடந்திருக்கும்னு தெரியாது எங்களுக்கு.'
கடைசி வரிக்கும் ஷார்ப்பாக பதில் கொடுக்கத் தான் நினைத்தாள் கீதா. ஏனோ அடக்கிக் கொண்டாள்.
'இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகல. தஞ்சாவூருக்கு பக்கத்துல தான செங்கிப் பட்டி இருக்கு? நேரா போங்கோ. மாமாவுக்கும் பாலாஜிக்கும் என்னன்ன தேவைனு கேட்டு செஞ்சுட்டா போறது.'
'கீதா, அப்படியே சீதாவோட குணத்த உரிச்சு வெச்சிருக்க. அவளோட சாமர்த்தியம் அப்படியே உன் கிட்ட இருக்கு.'
'சாமர்த்தியம் இல்லைனா இந்த காலத்துல பிழைக்கவே முடியாது பெரியம்மா.'
என்ன நினைத்தாரோ ராமநாதன். கிளம்புவதற்கு ஆயத்தமானார்.
'சரி கீதா. நாங்க கிளம்பறோம்.'
'எப்படியும் ஏழெட்டு மணிக்குள்ள மாமி வந்துடுவா. இவ்வளவு தூரம் வந்திருக்கேள். மாமிய பார்த்துட்டே போகலாமே?'
'இல்ல கீதா. இன்னொரு நாள் வரோம். நாங்க வந்துட்டு போனத மாமி கிட்ட சொல்லு.'
'கண்டிப்பா பெரியப்பா'
'அக்ரஹார தெரு மண்ணா இருக்கதால கார ஆம் வரைக்கும் எடுத்துண்டு வர முடியாது இல்லையா? அதனால பெரிய கோவில் பக்கத்துல காரை விட்டுட்டு வந்திருக்கோம். ராயப்பையன் சாவடி சுத்தி வேற போகணும்.'
'பெரியம்மா. இருங்கோ சித்த. குங்குமம் எடுத்துண்டு வரேன்.'
விந்தி விந்தி வாசலுக்கு வந்து அவர்களை வழி அனுப்புகிறாள். மீண்டும் உள்ளே வந்து படுக்கலாம் என்று நினைக்கும்போது கருப்பனின் குரல்.
'ஒன்ன மறந்துட்டேனா? அவா ரெண்டு பேர் வந்ததுல உனக்கு தீனி போட மறந்துட்டேண்டா. இதோ வரேன்.'
விந்தி விந்தி கொல்லைப்புறம் செல்கிறாள். கீதா வருவதைப் பார்த்து மணியோசை.
'வைக்கோலைப் போட்டா மூந்து பார்த்து விட்டு திரும்பத் திரும்ப என்னையே பார்க்கறையே? நேத்திலேந்தே நீ சரியில்ல. பேதியா போயிண்டிருக்க. உன் அடமெல்லாம் மாமா கிட்ட வெச்சிக்கோ. புண்ணாக்கு போடமாட்டேன்.'
ஏக்கம். பெருமூச்சு. தலையாட்டல். அவளைப் பார்த்துப் பார்த்து கெஞ்சல் பார்வைகள்.
'ஏய் கருப்பா. எனக்கு மூடு சரியில்ல. படுத்தாத. சொன்னா கேளு. பெரியம்மா பெரியப்பா வந்து வேற மனச கொழப்பிட்டு போயிட்டா. அடிபட்ட கால் வேற வலிக்கறது டா. ஏண்டா இப்படி என் நிலைமை தெரியாம படுத்தர.'
கொல்லைப்புற கதவைப் பூட்டிவிட்டு விந்தி விந்தி ஹாலுக்கு. விரித்த பாயில் உட்கார்ந்து ஆனந்த விகடனை ஓட்டுகிறாள். மனம் அதிலும் செல்லவில்லை.
'என் மேல ஏன் பெரியம்மாவுக்கு கோபம்? நான் என்ன பண்ணினேன்? மாமாவப் பத்தியோ மாமிய பத்தியோ அப்படி ஒண்ணும் பெரியம்மா பெரிசா கவலப்பட்டு நலம் விசாரிக்கலையே? அம்மாவப் பத்தி கூட பெரிசா கேட்கலைய? அடிபட்ட காலோட இங்கேயும் அங்கேயும் விந்தி விந்தி நடக்கறேனே, அது கூட ஏன் பெரியம்மா கண்ணு பச்சாதாபத்தோட பார்க்கல?'
காரணம் தெரிந்த உறவுகளிடத்தில் வெளிப்படையான பேச்சுக்கள் இல்லை. 'இல்லை' என்பதை புரிந்த உறவோ காரணம் அறிய மனதைக் குழப்பிக் கொள்கிறது.
வலிகள் அவளுக்கு மனமும் கொடுத்தது. படுத்துக் கொண்டு படித்த விகடனின் ரெண்டு அக்ஷரங்கள் கண்ணை சுழற்றி சுழற்றி நித்திரையை கொடுத்தது.
தொடரும்.....
No comments:
Post a Comment