உறவுபோட்டமுடிச்சு_29
வில்லு வண்டி கொஞ்ச தூரம் நகரும்வரை கீதா அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
'நெனச்சேன். வண்டி கல்யாணி அம்மன் கோவில் வாசல்ல ப்ரேக் போடும்ணு.'
சிரித்துக் கொண்டே நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதோ சட்டென ஞாபகம் வர, ஆத்துக்குள்ளே ஓடுகிறாள்.
நேற்று சாமி ஷெல்ஃபில் வைத்த சாமுண்டி ரக்ஷை.
'நான் ஒரு மடச்சி. எப்படி மறந்தேன்?'
எடுத்துக் கொண்டு ஓடுகிறாள் வில் வண்டியை நோக்கி. இவள் ஓடிவருவதைப் பார்த்து வண்டியில் ஏறப்போன சபேஸய்யர் நிற்கிறார்.
'கீதா கையில் என்ன? தாலிச் சரடாட்டம் இருக்கே.'
இப்பத்தான் கல்யாணி அம்மன் கிட்ட வெச்ச பிரார்த்தனையில் பாலாஜி அவள் கழுத்தில் கட்டணும்னு நெனச்ச தாலி. 'இவ ஏன் அதுக்குள்ள தூக்கிண்டு வரா.'
'மாமா.. மாமா... (மூச்சிரைப்பு). வலது கையைக் காட்டுங்கோ.' அவர் காட்டுவதற்குள் அவசரம். அவர் வலது கையை உசத்தி..
'ஏய். ஏய். என்ன இது? தாலிச் சரடு மாதிரி இருக்கே?'
'தாலிச் சரடு இல்லை மாமா. ரக்ஷை. சாமுண்டீஸ்வரி ரக்ஷை. நேத்திக்கு குருக்கள் மந்திரம் சொல்லி என் கிட்ட கொடுத்து உங்க கையில நீங்க கெளம்பறச்சே கட்டச் சொன்னார். நான் தான் மறந்துட்டேன்.'
'நல்ல பொண்ணும்மா நீ.'
சிரித்துவிட்டு வண்டியில் ஏறுகிறார்.
'சிவலிங்கம். பாலாஜியும் சந்தானமும் முன்னாடி போயிண்டிருக்காளோல்யோ?'
'போறாங்க சின்னம்மா.'
'பாலத்தடிலேந்து கார் கிளம்பறத பார்த்துட்டுதான் திரும்பணும். என்ன புரிஞ்சுதா?'
'உத்தரவு சின்ன எஜமானியம்மா.'
'கிண்டலா பண்ற. வா. திரும்பி வந்து தான ஆகணும் சிவலிங்கம். வந்தோண்ண உனக்கு தார்க்குச்சி போடறேன்.'
அத்தனை பேரையும் வசீகரிக்கும் கம்பீரம், கருணை, அன்பு. சபேஸ்யருடைய மைண்ட் இப்போது ப்ளாங்க். நினைத்துக் கொண்டிருக்கும் கல்யாணப் படம் மனத்திரையில்.
பாலத்தடி வந்தாச்சு. அம்பாஸடர் வண்டி தயார். தூரத்தில் தெரியும் பெரிய கோவில் கோபுரத்தைப் பார்த்து ஒரு கும்பிடு. கையில் கீதா கட்டிவிட்ட ரக்ஷையை தன்னுடைய கண் பக்கம் கொண்டு வந்து ஒரு சின்ன பிரார்த்தனை.
'சிவலிங்கம், அடிக்கடி ஆத்துக்கு போய் கீதாக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டுக்கோ. தனியா இருக்காளோன்னோ?'
'சரிங்க ஐயா. ஊர் கவலய வூட்டு போட்டு சிகிச்சை எடுத்துக்கங்க ஐயா. நல்லபடியா திரும்பி வருவீங்க நீங்க.'
'நல்லது.'
சபேஸய்யரும் பாலாஜியும் பின் ஸீட்டில். சந்தானம் ட்ரைவர் பன்னீர்செல்வம் பக்கத்தில்.
'பன்னீர் பொறுமையா போ. அவசரம் வேண்டாம். நிறைய டைம் இருக்கு.'
ஜன்னலுக்கு வெளியே தெரியும் வயல்களையும் கிராமங்களையும் பற்றி என்னென்னவோ சந்தானம் சொல்லிக் கொண்டு வருகிறான் பாலாஜியிடம். ஏதேதோ ஆர்வமில்லா பதில்கள் அவனிடமிருந்து.
அவன் சிந்தனைகள் முழுவதும் அப்பாவின் உடம்பைப் பற்றி மட்டும்.
'ஒரு மாசத்துல ஆத்துக்கு வந்தாச்சுன்னா மெட்ராஸ் போயிடலாம். நாம கேட்டுண்டா கீதா அப்பாவ பார்த்துக்க மாட்டாளா என்ன?'
'ஸ்கூலுலேயும் ட்யூஷன்லேயும் என்ன பெரிசா கெடச்சுடப்போறது? பேசாம பூலனூர்லேயே அத்தையும் கீதாவும் வந்து தங்கிடலாம்.'
நெருக்கடின்னு வரும்போது சுயநலம்தான பெரிசா தெரியறது. நம் ஞாயம் பொது ஞாயமாயிடறது. அடுத்தவா அப்ப நாம சொல்றத கேட்கலைனா கோபம் வரது. பழைய கணக்குகள போட்டு நாம அத்த செஞ்சோமே இத்த செஞ்சோமேன்னு பழைய கணக்கெல்லாம் பார்த்து நம்ம கோபத்துக்கு ஞாயப் பாடம் எடுக்கறது.
வண்டி நிதான வேகத்தில் தஞ்சாவூர் தாண்டி திருச்சி சாலையில். இன்னும் பத்து நிமிடத்தில் மஹாத்மா காந்தி நினைவு டி.பி. சானடோரியம்.
திடீரென்று சபேஸய்யருடைய ஸ்வாசத்தில் பிரச்சனை. இழுத்து இழுத்து.....
"என்னப்பா.... என்ன பண்றது?'
மூச்சு விடுவதில் சிரமம் என்பதை ஜாடையில் சொல்கிறார்.
'வண்டிய வேணா நிறுத்த சொல்லட்டுமா பாலாஜி'
வேண்டாம் ... வேகமாக போ ... என்ற ஜாடை சபேஸய்யரிடமிருந்தே.
அப்பாவுடைய மார்பை தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் பாலாஜி. அப்பாவின் கண்களுக்கு அவன் அழுவதைத் தெரியமாமல் பார்த்துக் கொள்கிறான்.
சர்ர்ர்ர்...... என்று காரின் வேகக் கூடுதலில் சானடோரியம் நுழஞ்சாச்சு.
அப்பாவின் ஸ்வாச சிரமத்தில் மாற்றம் இல்லை.
வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த டாக்டர் பசுபதி பாலாஜியின் கண்களில் பட்டுவிடுகிறார்.
'டாக்டர்....டாக்டர்...'
கத்திக் கொண்டே அவரை நோக்கி பாலாஜி.
அமைதியாக டாக்டர் வந்தது அவனுக்கு என்னவோ போலிருந்தது.
'பாக்டர். இன்னிக்கு அப்பாக்கு அட்மிஷன். கார்ல வந்துண்டிருந்தோம். நன்னா தான் பேசிண்டு வந்திருந்தார். பத்து நிமிஷமா மூச்சு திறைல்.'
பதட்டத்துடன் சொல்லி முடித்தான்.
தன் கைகளை தள்ளுவண்டி ஓட்டுவது போல ஒரு சைகை காண்பிக்க சில நொடிகளில் இருவர் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
அதற்குள் ஸ்டெத் வைத்து பார்க்கிறார்.
'எமெர்ஜென்ஸி போப்பா. வந்துண்டே இருக்கேன்.'
'பார்க்கலாம் பாலாஜி. ஃபார்மாலிடிஸ் முடிச்சிண்டு ரிஸப்ஷன்ல இரு. கூப்பிட சொல்றேன். Gகாட் இஸ் க்ரேட்'
கடைசியாக அவர் சொன்ன அந்த 'Gகாட் இஸ் க்ரேட்' என்பதன் அர்த்தம் தெரியாமல் ஸ்தம்பித்திருந்தான் பாலாஜி. சந்தானத்தின் கைகள் அவன் தோள்களில்.
தொடரும்.....
No comments:
Post a Comment