Tuesday, November 9, 2021

ஏர்போர்ட் அனுபவம்

 ஏர்போர்ட் அனுபவம்

தீபாவளிக்காக ஊருக்கு சென்று விட்டு கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பினேன். வழக்கமாக காரில், அல்லது புகைவண்டியில் அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் திரும்புவது தான் வழக்கம். நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் வரை மிக குறுகலான சாலையில் காரில் செல்வது மிகக் கொடுமை. அதிகாலையில் செல்வது அதைவிடக் கொடுமை… மழை நாட்களில் கொடுமையிலும் கொடுமை. ஆகவே இம்முறை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பலாம் என திட்டமிட்டேன். தூத்துக்குடி விமானநிலையம் செல்வது இதுவே முதல்முறை…  

காலை எட்டு மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம். என் வீட்டில் இருந்து தூத்துக்குடி விமானநிலையம் 115 கிலொமீட்டர் என கூகுள் காட்டியது.  கார் டிரைவரிடம் விசாரித்த போது இரண்டரைமணி நேரம் ஆகும் என சொன்னார். கோவிட் காலம், இரண்டு மணி நேரம் முன்னதாக விமானநிலையத்தில் இருக்க வேண்டும் என திட்டமிட்டு அதிகாலை மூன்றுமணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். சரியாக 5 மணிக்கு தூத்துக்குடி விமானநிலையம் போய் இறங்கிவிட்டோம்.

  அற்புதமான பறவைகள் ஒலி. ஒரு பறவை பூனை குரலில் கத்திக் கொண்டிருந்தது. ஆஹா என வியந்தபடி டிராலியில் பெட்டிகளை வைத்து தள்ளிக் கொண்டே காரை அனுப்பிவிட்டு திரும்பினால், அதிர்ச்சி. விமான நிலையம் பூட்டப்பட்டிருந்தது. யாருமே இல்லை.  என்னடா இது என திகைத்து நிற்க… ஒரு போலீஸ்காரர் வந்தார். அது 5.30 – 5.30 க்கு செயல்படும் விமானநிலையம் என்கிற விஷயத்தை அவர்தான் சொன்னார். கதவைத் திறந்து வெயிட்டிங் ஹாலில் உட்கார வைத்தார். அங்கே நான், மின்னு, என் தம்பி, அந்த போலீஸ்காரர் தவிர யாருமே இல்லை.. வெயிட்டிங் ஹால் சேர்கள் ஆடிக் கொண்டிருந்தன. தரையில் சில அட்டைப்பூச்சிகள்.  அந்த வெயிட்டிங் ஹால் என் வீட்டு ஹாலை விட சற்றுப் பெரிதாக இருந்தது. வலதுபக்கம் staff only என அட்டை தொங்கவிடப் பட்ட இன்னொரு ஹால்.

இண்டிகோ என டீ ஷர்ட் அணிந்த ஒருவர் வந்து ஃபேன் போட்டு, அங்கே இருந்த பழைய டிவியில் எங்களுக்கு சுப்ரபாதம் போட்டு விட்டு சென்றார். 5.30 மணி தாண்டியதும் இண்டிகோ என டீ ஷர்ட் அணிந்த பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். ‘’ஏழு , ஏழரைக்கு வந்தா போதாதா, இப்பவே என்னத்துக்கு வந்திய?’’ என ஒருவர் கேட்டுப்போனார். அந்த ஹாலில் வலது பக்கம் இருந்த சிறிய காஃபி கடையை ஒருவர் திறந்தார். காஃபி கேட்டால், நேரம் ஆகும் என சொன்னார். மூன்று சென்னை விமானங்கள், ஒரு பெங்களூர் விமானம் என அன்று மொத்தம் நான்கு விமானங்கள் என போர்டு காட்டியது.

’’இது பஸ் ஸ்டாண்டை விட சின்னதா இருக்கு, நெஜமாவே இங்க ஃபிளைட் வருமா’’ என மின்னு கேட்டுக் கொண்டிருந்தாள். ஆறரை தாண்டியதும், பயணிகள் சிலர் வரத் தொடங்கினார்கள். விமான நிலையப் பயணிகள் உட்பட எங்கும் தூத்துக்குடி முகங்கள்..  தூத்துக்குடி தமிழ். வழக்கமாக விமான நிலையங்களில் காணும் வெண்மை முகங்களோ, ஆங்கிலமோ இல்லை..  பயணிகள் மிக ரிலாக்ஸாக ஆர்.எம்.கே.வி. பயணப்பைகளோடும், கட்டைப்பைகளோடும் வரத் தொடங்கினார்கள். இண்டிகோ பணியாளர் அவர்களை வாசலில் போய் வரவேற்று, உடைமைகளை வாங்கி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

மூன்று மணிக்கு கிளம்பியதால், இரவில் தூங்கியிருக்கவில்லை. பசி பிறாண்டியது. காஃபி கடையில் காஃபியைத் தவிர ஒன்றும் இருக்கவில்லை. செக் இன் செய்து காத்திருப்பில் இருந்தபோதும், ‘’வெளிய போய் சாப்பிட்டு ஓடிவந்திருங்க’’ என அனுமதித்தார்கள். ஏழரைக்கு பாதுகாப்பு சோதனைக்கு உள்ளே செல்ல சொன்னார்கள். கரிய, உயரமான, விபூதி அணிந்த ஒரு தூத்துக்குடி போலீஸ்காரர் சிரித்த முகத்தோடு உள்ளே அனுப்பினார். ‘’இங்க ஸ்டார்பக்ஸ் இருக்குமா?’’என மின்னு கேட்டாள். ‘’உள்ள கண்டிப்பா நிறைய கடைங்க இருக்கும்’’ என சொன்னேன். பாதுகாப்பு சோதனை நடைபெறும் இடம் இன்னொரு சிறிய ஹால்.  அங்கும் முழுக்க தூத்துக்குடி முகங்கள்.. ‘’பையில என்னண்ணே, கருவாடா, இருக்கட்டும்.. இருக்கட்டும்.. ‘’, ‘’எக்ஸ்ரேல எதோ குத்துற பொருள் இருக்க மாரி இருக்கு, பையை தொறந்து காட்டுங்க.. ஓ திருக்கை மீன் வாலா, சரி, சரி இருக்கட்டும்’’ இப்படியான பாதுகாப்பு சோதனைகள்..

பாதுகாப்பு சோதனை முடிந்து ஒரு சிறிய ஹால். அதன்பிறகு ரன்வே… மொத்தமே மூன்று ஹால்கள் மட்டுமே உள்ள விமானநிலையம் அது. ஸ்டார்பக்ஸ் கேட்ட மின்னுவை திரும்பிப் பார்த்தேன். ‘’நெஜமாவே ஃபிளைட் வருமா, வீட்டுக்குப் போவோமா’’ என்று கேட்டாள். ‘’ இங்க செல்வின்னு யாராவது பேசஞ்சர் இருக்கீங்களா? , உங்க ஏடிஎம் கார்டு வெளிய ஏடிஎம் ல இருக்கு’’ என ஒரு போலீஸ்காரர் காத்திருக்கும் பயணிகளிடம் சத்தமாக கேட்டார். பின்னால் இருந்து வந்த போலீஸ்காரர், ‘’என்னோடது தான், நேத்து சாயங்காலம் பணம் எடுத்துட்டு விட்டுட்டு போயிட்டேன் போல, பொண்டாட்டியோட கார்டு’’என சிரித்தபடி வாங்கிக் கொண்டார்.

‘’பாத்ரூம் போகணும்’’ என சொன்ன மின்னுவின் முகத்தில் உற்சாகமே இல்லை. நாங்கள் இருவரும் அந்த குட்டியூண்டு வெயிட்டிங் ஹாலில் இருந்த கழிவறை அருகேசென்றால், பெண்கள் என தலைப்பிட்டிருந்த கழிவறையில் இருந்து ஒரு ஆண் வெளியே வந்தார். திடுக்கிட்டு திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டோம். மனைவியை வழியனுப்ப வந்த ஒரு கணவர் விமானம் வருகிறதா என எட்டிப் பார்த்துக் கொண்டே பாதுகாப்பு சோதனை நடைபெறும் இடத்துக்கு அந்தப் பக்கம் நின்றார். சோதனை முடிந்து இந்தப்பக்கம் இருந்த மனைவி சைகையில் அவரிடம் பேசிகொண்டே இருந்தார். அவ்வளவு தான் தூரம். அவ்வளவு தான் இடம்.

எதிரே ரன்வே வெறிச்சோடி இருந்தது. எந்த நேரமும் யாராவது வந்து, ‘’பிளைட் ஏறுறதுக்கு ஏன் இந்த சின்ன பஸ் ஸ்டாண்ட்ல உக்காந்திருக்க?’’ என கேட்டு விடுவார்களோ என நினைத்தபடியே இருந்தபோது ஒரு குட்டி இண்டிகோ விமானம் வந்து நின்றது. ‘’அப்பாடா, ஏர்போர்ட்ல தான் இருக்கோம்’’ என மின்னு முகத்தில் நிம்மதி வந்தது. எட்டுமணிக்கு மிகச் சரியாக கட்டைப்பைகளோடும், கருவாட்டுப் பைகளோடும் விமானத்தில் ஏறினோம். பைலட்டும், விமான பணிப்பெண்ணும் எதோ தூத்துக்குடிக் காரர்கள் தான் வருவார்கள்  என நினைத்தது பொய்யாகிப் போனது. எட்டுமணி விமானத்துக்கு 7.55 வரை செக் இன் செய்கிறார்கள். விமானம் ரன்வேயில் கிளம்பியதுபோது யாராவது வழியில் நிறுத்தி. ‘’இருங்கண்ணே, ஏறிக்கறேன்’’ என ஏறியிருந்தால் கூட ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன்.

விமானம் கிளம்பியதும் ஒரு கைக்குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. ‘’காது வலி காரணமாக இருக்கலாம், பால் கொடுங்கள்’’ என அதன் அம்மாவிடம் விமானப்பெண் சொன்னது அவருக்கு புரியவில்லை. அதன் பாட்டி குழந்தையை தூக்கிக் கொண்டு விமானத்தில் குறுக்கே நெடுக்கே நடக்க ஆரம்பித்தார். ‘’சரில, சரில.. ஒண்ணும் இல்ல. அவனை அடிச்சிரலாம். சரில.. சரில.. ஒண்ணும் இல்ல… நாசமத்துப் போவான், நடக்க கொஞ்சம் இடம் விட்டு சீட்டு வைக்கக் கூடாதா? நடக்கவே முடியல. சரிம்மா. என் தங்கம். அழாதீங்க. அடிச்சிடலாம் அவன’’

நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் வடக்கில் ஒரு கிராமத்தின் பஸ் பயணத்தை பற்றி எழுதியிருப்பார். மனிதர்களும், விவசாயப்பொருட்களும், ஆடுகளும், மாடுகளும் எல்லாம் பயணிக்கத்தக்க விதத்தில் அமைக்கப்பட்ட பேருந்துகள் அவை. கிராமங்களின் பேருந்துகள் அப்படித்தான் இருக்க வேண்டும் என. கன்னியாகுமரியில் மீனவ கிராமங்களின் பேருந்துகள் அப்படித்தான் இருக்கும். மீன்கூடை வைக்க கம்பிகள் பொருத்தப்பட்ட பேருந்துகள். சாதாரண மக்களுக்கு மிரட்சியை தராத, இதுபோன்ற விமான நிலையங்களும், பயணங்களும் சரியேதான். 

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பின்புதான்  மின்னு இயல்புநிலைக்கு வந்தாள். அருகே ஒரு ஏர் இந்தியா விமானம் நின்று கொண்டிருந்தது. அதை டாடா வாங்கிய கதையை அவளிடம் சொன்னேன். ‘’மொத்தமா எல்லாத்தையும் வாங்க அவ்ளோ பணம் இருக்குமா?’’எனக் கேட்டாள். ‘’எல்லாம் நீ வெஸ்ட் சைட்ல பர்சேஸ் பண்ற காசுல தான் அவன் ஃபிளைட் வாங்கிட்டான்’’என சொன்னேன். முறைத்தபடி… ‘’நான் வாங்குற காசுல இவ்ளோ ஃபிளைட்ஸ் வாங்க முடியும்னா, பேசாம அந்தக் காசுல நாகர்கோயில்ல நீ ஒரு ஏர்போர்ட் கட்டலாம்ல’’ என என்னிடம் திரும்ப சொன்னாள்.  நான் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்க விரும்புவதும் இதைத்தான். மூன்று ஹால்களும், ஒரு சிறிய ரன்வேயும் தான் தேவை எனில், நாகர்கோயிலில் ஒரு விமானநிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கக் கூடாதா? 😊

No comments:

Post a Comment