Tuesday, November 9, 2021

சிவகங்கை சீமையின் மூன்று வீரமங்கையர் 1.1

 பாரதத்தின் வீரத்திருமகள்கள் - 1.1 


 சரித்திரம் : சிவகங்கை சீமையின்  மூன்று வீரமங்கையர் 

 அத்யாயம் :  மன்னர் முத்துவடுகநாதர் 

ராமநாதபுரம் மன்னரான செல்லமுத்து சேதுபதியின் மகளான வேலுநாச்சியாரை, பொ.யு 1746ம் ஆண்டில் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவருடைய மகனான முத்து வடுகநாதர் திருமணம் செய்து கொண்டார்.  ராணி வேலுநாச்சியார் கல்வியிலும் (சுமார் 6 மொழிகளில் ராணிக்கு சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும்) , வாள் வீச்சு, யுத்த சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்று அவற்றில் சிறந்த விளங்கினார். பொ.யு 1749ல்  சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாத  பெரிய உடையத்தேவர் ( மன்னர் முத்து வடுகநாத தேவர் ) சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.  சசிவர்ணத் தேவர் காலத்தில் இருந்து, முத்துவடுகநாதர் காலத்திற்கு பிறகும் "தாண்டவராயன் பிள்ளை" அவர்கள் சிவகங்கை சமஸ்தானத்திற்கு மந்திரியாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 

பொ.யு 1752 ம் ஆண்டு கும்பினியரின் தளபதி போப் துரையுடன் மதுரையில் நடந்த போரில் "வெற்றி வேல்! வீர வேல்!! " என்று கோஷமிட்டபடி மன்னர் முத்துவடுகநாதர் வெற்றி பெற்றார். மன்னர்  முத்துவடுகநாதரை எதிர்க்க முடியமால் போப் துரை யுத்தகளத்தில் இருந்து தப்பி ஓடினான்.  இந்த யுத்தத்தின் வெற்றியால்  மன்னர் முத்துவடுகநாததேவர், விஜயகுமார நாயக்கர் மீண்டும்  மதுரையின் மன்னராகினார். ஆனால் மீண்டும் மன்னரான வாய்ப்பை விஜயகுமார நாயக்கரால் தான் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. 

மன்னர் முத்துவடுகநாதரை கப்பம் கட்டுமாறு ஆற்காடு நவாப் மற்றும் கும்பினியர் நெருக்கடி கொடுத்தார்கள். முக்கியமாக பொ.யு 1762ல்  கும்பினியரின் கவர்னர் "லார்ட்பிகாட்" கப்பம் கட்டச்சொல்லி கடும் நெருக்கடி கொடுத்தார். அதற்கு மன்னர் முத்துவடுகநாதர் யாருக்குமே கப்பம் கட்ட முடியாது என்று திட்டவட்டமாக கூறி விரட்டி அடித்தார். அதேபோல பொ.யு 1764ல் மீண்டும் ஒரு முறை கப்பம் கட்டச் சொல்லி மதுரையின் புதிய நிர்வாகி முத்துவடுகநாதரை நிர்ப்பந்தம் செய்தான். வழக்கம் போல இப்பொழுதும் கப்பம் கட்ட  மறுத்து முத்துவடுகநாதர் அதில் வெற்றி பெற்றார். 

இந்த காலகட்டத்தில்  மருதுபாண்டிய சகோதரர்கள் என்னும் வெள்ளமருதுவும், கருத்தமருதுவும் முத்துவடுகநாதரிடம்  சேர்ந்தார்கள். மன்னர் முத்துவடுனாதர் அடிக்கடி வேட்டைக்கு செல்வது வழக்கம். ஒரு சமயம் அப்படி வேட்டைக்கு செல்லும் பொழுது அவரை ஒரு வேங்கையின் தாக்குதலில் இருந்து  மருதுபாண்டியர்கள் காப்பாற்றினர்கள். 

ஏற்கனவே வாள் வீச்சு, வேல் வீச்சு என்று அறிந்து இருந்தாலும் வேலுநாச்சியார் மருது சகோதர்களிடம் இருந்து "வளரி விசுதலை" கற்றார். முத்துவடுகநாதர் தெய்வ நம்பிக்கை மிக்கவர். ஒவ்வொரு வாரமும் காளையார் கோவிலுக்கு செல்வது  இவரின் வழக்கம். இந்த இக்கட்டான கால கட்டத்தில்  மன்னர் முத்துவடுகநாதர் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி கலகம் செய்த ராயப்பன் உதவியுடன்  தளபதி மார்ட்டின், தளபதி ஜோசப் ஸ்மித், லெப்டினன்ட் கர்னல் ஆபிரகாம் பான்சோர் தலைமையில் கும்பினியரின் படைகளும்  மற்றும் ஆற்காடு நவாப் படையினரும்  யாரும் எதிர்பாராத வேளையில் ராமநாதபுரத்தை கைப்பற்றினார்கள். அதன் பின்னர் இதுவரை சிவகங்கை சீமை கட்டாத திரை/ கப்பம் அல்லது வரியைத் மொத்தமாக தரவேண்டும், மேலும் ராமநாதபுரத்தை  குடக்கூலிக்குத் தர வேண்டும் அப்படி செய்தால் சமாதானம் என்று கும்பினியர் செய்தியனுப்பினார்கள். அதனால் ராமநாதபுரத்தை மீட்க மீண்டும் நடந்த யுத்ததில்  முத்துவடுகநாதர் முதலில் வெற்றி பெற்றார். அன்றைய தேதியில் தமிழகத்தில் கும்பினியருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது முத்துவடுகநாதர் தான். அதிலும் கும்பினியர்கள், மருதுபாண்டிய சகோதர்களின் வளரி விச்சுக்கு மிகவும் பயந்தார்கள். "என்ன ஆயுதம் இது? , எங்கிருந்து வருகிறது! , எப்படி வருகிறது!! என்று உணரும் முன் காற்றில் பறந்து வந்து எதிரியின் கழுத்தை அறுத்து மீண்டும் வந்த இடத்திற்கு விரைந்து திரும்பும் வளரி வீச்சு" அவர்களை குலை நடுக்க செய்தது. அதனால் சிவகங்கையுடன் நேரடியாக சண்டையிட்டு ஜெயிக்க முடியாது, என்பதால் சூழ்ச்சியாக 

மீண்டும் சமாதானம் பேசி, இனிமேல் சிவகங்கையுடன் யுத்தம் இல்லை என்றும் கூறினார்கள். அதன் பேரில் சமாதானமும்  எட்டப்பட்டதால் அதை உண்மை என்று நம்பினார் மன்னர் முத்துவடுகநாதர். அதேசமயம் சிவகங்கையில் இருந்த சிலரை யாருக்கும் தெரியாமல் ஆசைகாட்டி தங்கள் பங்கம் இருந்து அங்கு நடப்பதை எல்லாம் காட்டி கொடுக்கும் பணியை கும்பினியர் செய்ய வைத்தார்கள். 

உண்மையில் சமாதானம் எட்டியதாக நம்பிய மன்னர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் பொ.யு 1772 ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வழக்கம் போல காளையார் கோவிலுக்கு தரிசனம் செய்ய  தனித்து ஆயுதங்கள் இன்றி சென்றார். அப்பொழுது வேலுநாச்சியார் நிறைமாத கர்ப்பவதியாக இருந்தார், அதனால்  தனது கணவருடன் அவர் காளையார் கோவிலுக்கு செல்லவில்லை, மாறாக அவர் கொல்லங்குடியில் தங்க நேர்த்தது. (குறிப்பு : திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு பொ.யு 1770ல்   முத்துவடுகநாதர் – வேலுநாச்சியார் தம்பதிகளுக்கு "வெள்ளச்சி நாச்சியார்" பிறந்தார் என்று சில வரலாறு தகவல்கள் கூறுகிறது. அதேசமயம் பொ.யு 1772ல் முத்துவடுகநாதர் காளையார் கோவிலில் மரணமடைந்த காலத்தில் "வெள்ளச்சி நாச்சியார்" பிறந்தார் என்றும் சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன). 

சிலரின் துரோகத்தால் மன்னர் முத்துவடுகநாதர் காளையார்கோவில் தரிசனத்திற்காக தனித்து சென்றுள்ள விஷயம் கும்பினியர் காதுக்கு சென்றது. உடனே தளபதிகளான ஸ்மித் மற்றும் பாஞ்சோர் தங்கள் படைகளுடன் யாருக்கும் தெரியாமல் காளையார் கோவிலை நோக்கி விரைந்தனர்.  இவர்கள் நேரடியாக தாக்குதல் செய்யாமல் மறைந்திருந்து  காளையார்கோவிலில் மன்னர் முத்துவடுகநாதர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் மன்னரும், இளைய ராணியும் அவ்விடத்திலேயே வீர மரணமடைந்தார்கள். இதை தொடர்ந்து சிவகங்கையை நோக்கி கும்பினியர் படைகள் நகரத்துவங்கின. 

வயதான காலத்தில் இந்த துயர செய்தியை தாங்கமுடியாமல் தாங்கியபடி தாண்டவராயன் பிள்ளை கொல்லங்குடிக்கு சென்று மகாராணி வேலுநாச்சியாரிடம் இந்த துயர நிலையை தெரிவித்தார். அதை கேட்ட  பொங்கியெழுந்த வேலுநாச்சியாரை தாண்டவராயன் பிள்ளை சமாதானம் செய்து, முதலில் மன்னரையும் இளையராணியையும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். மகாராணி வேலுநாச்சியார் சும்மா இருக்க மாட்டார், நடந்தவற்றிக்கு பழி வாங்குவார் என்ற பயத்தில் அவரை கண்டுபிடித்து கொலை செய்ய அந்நிய படையினர் அவரை தேடியலைந்தார்கள். மகாராணியை துரத்திவரும் அந்நிய படையினரிடம் இருந்து அவரை காக்க தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்களுடன் அப்படி துரத்தி வரும் படையினரை தடுத்து சண்டையிட்டார்கள். அதேசமயம் கும்பினியர் படைகள் நாலுமுறமாக சிவகங்கை நோக்கி வந்தன.  தாண்டவராயன் பிள்ளையின் ஆலோசனை படி உதவிக்கு சிலருடன் ராணி வேலுநாச்சியார் கொல்லங்குடி காட்டுப்பாதையில் நாட்டரசன்கோட்டையில் இருக்கும் தாண்டவராயன் பிள்ளை இல்லம் நோக்கி நகர்ந்தார். காட்டுப்பாதையில் வழி புரியாமல் அவர் தவித்த பொழுது அங்கு ஒரு சிறிய அய்யனார் கோயிலை பார்த்தார். அரண்மனையில் பிறந்து ஊரே கொண்டாட வேண்டிய தன் குழந்தையை அய்யனாரின் திருவடியில் கிடத்தி, தனது மனக்குமுறலை எல்லாம் அய்யனாரிடம் கொட்டி......நீதான் என் குலத்தை காக்க வேண்டும், எனக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும். என் கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை நான் பழிவாங்குவேன், அதற்கு நீ கூட இருந்து அருள் செய்ய வேண்டும் என்று ப்ராத்தனை செய்த சமயத்தில் "யாரு இந்த அகால வேளையில் நம்ம அய்யனார் கோயிலுக்கு வந்திருக்காங்க" என்று பார்பதற்காக அங்கு ஆடு மேய்க்கும் சிறுமி ஒருவள் வந்தாள். அவளிடம் காட்டுப்பாதையில் நாட்டரசன் கோட்டைக்கு செல்லும் வழியை விசாரித்ததில் சரியான பதில் கிடைத்தது.  இக்கட்டான சூழ்நிலையில் அய்யனாரே அவள் வடிவில் பதில் கூறியதாக ராணி வேலுநாச்சியார் கருதினார். ராணியுடன் வந்தவர்களில் ஒருவர் அச்சிறுமியிடம் மகாராணியை தேடி யாராவது வந்தால் முக்கியமாக கும்பினியர் வந்தால் நாங்கள் செல்லும் பாதையை சொல்லாதே, எங்களை காட்டிக்கொடுக்காதே என்றதற்கு அவள் " நான் ஒன்றும் நம்பிக்கை துரோகம் செய்யற குடியில் பிறக்கல, முதுகில் குத்துற வழக்கம் எங்களுக்கு கிடையாது, காட்டிக்கொடுக்கற பாவத்தை செய்யமாட்டேன்... நீங்க விசனப்படாம போங்க, நான் சொன்ன பாதைல போனா வழில எந்த பிரச்சினையும் வராது, நம்ம அய்யனாரு உங்க கூடவே வழித்துணையா வருவாரு" என்றாள்.  குறுகுறுவென பார்வையும், சிரித்த முகத்துடன், தெளிவான பேச்சுமாக  இருக்கும் அந்த சிறுமிக்கு எதேனும் தரவேண்டும் என்று நினைத்த மகாராணி தனது கழுத்தில் இருந்த முத்துமாலைகளில் ஒன்றை கழற்றி அதை அந்த சிறுமிக்கு அணிவித்து, உன் பேர் என்னமா? என்றதற்கு அவள் " உமையாள் " என்று பதிலளிக்க அதை கேட்டபடி அவ்விடத்தில் இருந்து நகரத்துவங்கினார் மகாராணி வேலுநாச்சியார். 

இங்கு துவங்கியது தான் மகாராணி வேலுநாச்சியாரின் போராட்ட பயணம். இதில் எப்படி அவர் வெற்றி பெற்றார்? அதில் "உமையாளின்" பங்கு என்ன என்று அறிய சிறிது காத்திருக்கலாமா! 

 மருதுபாண்டிய சகோதரர்கள் பற்றிய குறிப்பு : 

1. வளரி வீச்சு என்பது பழந்தமிழர் ஆயுதம், மேலும் தமிழர்களின் பிரத்யேகமான அடையாளங்களில் ஓன்று. ஓடும் பிராணிகளில் முயலின் ஓட்டத்தை கணிக்க முடியாதது. முயல்  எப்படி ஓடும், திரும்பும், வேகத்தை கூட்டும், குறைக்கும் என்பது கணிக்கமுடியாத புதிர் போன்றது. நன்றாக பழக்கப்பட்ட வேட்டை நாய்களால் கூட இதை சரியாக கணிக்க முடியாதது. அப்படிப்பட்ட முயல்களை கூட பெரிய மருது தனது வளரி வீச்சில் அடித்து விடுவார் என்று கும்பினியரின்" மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்" மருது சகோதரர்களின் வளரி வீசும் திறமையைப் பாராட்டி வியந்து கூறியுள்ளதில் இருந்து அவர்களின் வளரி வீச்சுக்கு கும்பினியர் எந்தளவுக்கு பயந்து நடுங்கியிருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

2. மருதுபாண்டிய சகோதர்களில் ஒருவரான மாவீரர் சின்ன மருது அவர்கள் 16/6/1801ல் திருச்சியில் கும்பினியருக்கு எதிராக ஒரு பிரகடனம் வெளியிட்டார், அதற்கு "ஜம்புத்தீவு பிரகடனம்" என்று பெயர். இந்த பிரகடனத்தின் இறுதியில் அவர் கீழ்கண்டவாறு கையெழுத்து இட்டுள்ளது அவரின் உயர்ந்த தியாக மனநிலையை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. "................... இப்படிக்கு, மருதுபாண்டியன், பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய இழிபிறவிகளுக்குச் சென்ம எதிரி". 

3. காளையார்கோவிலிலின் பெரிய இராஜகோபுரத்தை மருது பாண்டியர் சகோதரர்கள் தான் கட்டினார்கள். இவர்கள் சிறுவயல், பிரான்மலை உள்ளிட்ட பல போர்முனைகளில் கும்பினியர் ராணுவத்தை தோற்கடித்து அவமானப்படுத்தினர்கள்.  எனவே, இவர்களை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று கும்பினியர் கர்னல் அக்னியூ, இன்னஸ், பிளாக்பர்ன், மெக்காலே & வெல்ஷ் போன்ற பல இராணுவ அதிகாரிகளை யுத்தகளத்தில் இறக்கினார்கள். காடுகளில் பதுங்கி யுத்தம் செய்யும் இவர்களை வெல்லுவது என்பது கும்பினியருக்கு இயலாத ஒன்றாக இருந்தது. இவர்களுடன் நேரடியாக யுத்தம் செய்து ஜெயிக்க முடியாது என்பதால்  வழக்கம் போல கும்பினியர் சூழ்ச்சி செய்தனர். இவர்களுக்கு காளையார்கோவிலின் மீது பற்று அதிகம் என்பதால் அதையே துருப்பு சீட்டாக பயன்படுத்த முடிவு செய்தனர். மருதுபாண்டிய சகோதரர்கள் நிராயுதபாணியாக வந்து சரணடையாவிட்டால் காளையார்கோவிலை வெடிவைத்து இடித்து விட போவதாகப் அறிவித்தனர். காட்டில் பதுங்கி தாக்குதல் செய்து  கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து காளையார்கோவிலின் பெரிய கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்தார்கள். அதன்பிறகு வெள்ளையர்களால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று அது நிறைவேற பட்டது, இறுதியில் இவர்களின் விருப்பப்படி காளையார்கோவிலின் நேர் எதிராக இவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. 

4. மருது சகோதர்களின் குடும்ப நகைகளுக்கு உரிமை கோரி அவர்களின் மருமகள் மீனாம்பாள் தொடுத்த வழக்கில் திருச்சி கும்பினியர் நீதிமன்றம் 1806ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் "மருதுசகோதரர்கள் சிவகங்கையின் அடிமைகள் அதனால் அவர்களின் மனைவியரும், வாரிசுகளும் அடிமைகள்.   அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது" என்று அவர்களுக்கு எதிராக திர்ப்பு வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. 

5. தாய் நாட்டுக்காக போராடி, தனது தெய்வத்திற்காக உயிர் கொடுத்த  உத்தம மாவீரர்கள் மருதுபாண்டிய சகோதரர்கள் 🙏. 

No comments:

Post a Comment