Friday, November 5, 2021

கனவு மெய்ப்பட வேண்டும்

 கனவு மெய்ப்பட வேண்டும்!

தன்னுடைய முதல் ஆப்பரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்து ஓய்வரைக்கு வந்த  டாக்டர் அனுஷா ,களைப்பும்,பரவசமுமாக தன் பாதுகாப்பு கவசங்களை கழற்ற ஆரம்பித்த போது , அங்கு இருந்த சக டாக்டரான ஜமுனா தன் மொபைலில் அவளை க்ளிக்கினாள்.

"கங்கிராட்ஸ் டாக்டர் அனுஷா! இப்ப எடுத்த பிக்கை உங்களுக்கு வாட்ஸப் பண்றேன்.ஸேவ் பண்ணி வையுங்கள் . 

பத்து வருஷம் கழித்து நீங்கள் பெரிய சர்ஜன் ஆனவுடன் , உங்கள் முதல் ஆப்பரேஷன் அன்று எடுத்த இந்த பிக்,

உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும்.நோட் த டேட் அண்ட் டீடெய்லஸ் " என்றாள்.

அவளுக்கு நன்றி சொன்ன அனுஷாக்கு பத்து வருடங்கள் முன்னால் நடந்ததெல்லாம் நினைவு வர ஆரம்பித்தது.

" ஏண்டி பயாலஜி எடுக்க போறியாமே! 

உன் ப்ரண்ட் சத்யா எங்கிட்ட சொல்லி உன்னை எப்படியாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க வைக்க சொல்றா! 

இந்த சின்ன வயசிலேயே அவ எவ்ளோ தெளிவா யோசிக்கறா! என்ஜினியரிங் 

படிச்சு மூணாவது வருஷமே கேம்பஸ்ஸில் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கலாம் . டாக்டர்னா சம்பாதிக்கவே பத்து வருஷமாவது கஷ்டப்படனும்கறா! " 

"நீ என்னன்னா வெறும் MBBS இல்ல. ,MS படிச்சு சர்ஜனாக போறேன்னு கனவு காண்ற. MS படிக்கறதும்,ஆப்பரேஷன் பண்றதும் அவ்வளவு ஈசின்னு நினைச்சயா? நம்ப ஒண்ணும் வசதியான  ஃபேமிலி இல்லைன்னு தெரியும்தானே உனக்கு? " 

"அம்மா! அவ துணி தைக்கற மாதிரி நினைக்கறா. நீ தெக்கறத பாத்து  ஆசை வந்திருக்கும்." 

" ஏய்  ! நீ கீழே விழுந்து அடிபட்டு டாக்டர்  ஸ்டிட்சஸ் போட்டாறே அப்ப அவர் தைக்கறத பார்த்ததிலேர்ந்துதான் இந்த கனவே எனக்கு வந்தது." 

"அய்யோ பாவம் உங்கிட்ட வரப்போற பேஷண்ட்ஸ்"

"எல்லோரும் சும்மா இருங்க ! அவளை குழப்பாதீங்க. நீ பயாலஜி எடுத்து , ப்ளஸ்டூ நல்ல மார்க் வாங்கி  கவர்மெண்ட்  காலேஜில் சீட் வாங்கி காமி! இது நடக்கலேண்ணா இருக்கவே இருக்கு என்ஜினியரிங்!

ப்ரைவேட் காலேஜில் மெடிக்கல் படிக்க வைக்க நமக்கு வசதியில்லேன்னு நான்  சொல்ல வேண்டாம் . உனக்கே தெரியும்."

" சரிப்பா! நான் சீட் வாங்கி காமிக்கிறேன்.

இது சாலஜ்ச்." 

பிறகு நடந்ததெல்லாம் ஒரு தவம் மாதிரிதான். இந்த கனவு மெய்ப்பட  செய்த உழைப்பு இன்றுமெய்ப்பட்டுவிட்டது. 

டாக்டர் ஜமுனா எடுத்த புகைப்படத்தை தன் பள்ளி தோழி சத்யாக்கு வாட்சப்பில் அனுப்பினாள் என் கனவு மெய்ப்பட்டது என்ற மெசேஜுடன்.

வீட்டிற்கு கிளம்ப ஆரம்பிக்கும் போதே சத்யாவிடமிருந்து மெசேஜ்.

" இது வரை எவ்வளோ வித விதமான உடைகளுடன் என் மகிழ்ச்சியான தருணங்களை பிக் எடுத்து உனக்கு அனுப்பியிருக்கிறேன். 

ஆனால் நீ உன் பிக் எதையும் ரொம்ப ஷேர் பண்ணியதில்லை. ஆனால் இந்த பிக்கில் இருக்கும் உடையில் உன்னை பார்த்த போது எனக்கு தோன்றியது இந்த உடையை இனி நான் போடவே கூடாது என்று. நான் போட்டால் அதை பேஷண்டாக தானே அதை போட முடியும்!

போன வாரம் என் அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி நடந்த போது உன்னை தான் நினைத்து கொண்டேன். நீ தேர்ந்தெடுத்த மெடிகல் ஃபீல்டின் அருமை நமக்கோ நம்  வீட்டில் உள்ளவர்களுக்கோ உடல் நலம் கெடும் போது தான் தெரிகிறது. 

நீ ஒரு நல்ல சர்ஜனாக எவ்வளவோ உயிர்களை காப்பாற்ற போகிறாய்.

வாழ்த்துக்கள் அனு இல்லையில்லை 

டாக்டர் அனுஷா"

ஒரு பெருமித புன்னகையுடன் வீட்டிற்கு கிளம்பினாள் டாக்டர் அனுஷா!

கௌசல்யா வரதராஜன்.

No comments:

Post a Comment