Wednesday, September 2, 2020

அழகர் கோயில் தோசை

அழகர் கோயில் தோசை

அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்” என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். 😦 ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. 🙂 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி –  3 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
மிளகு – 2 டீஸ்பூன்  
சுக்குப் பொடி –  1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை –  சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

* அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம். 

* வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை. 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment