குல்பர்காவில் பெரியவா முகாம். அன்று மௌன வ்ரதம்.
ஒரு "டொக்கு" அறைக்குள் பெரியவா உட்கார்ந்து கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியே தீக்ஷதர் ஒருவர் "திருவீழிமிழலை" என்னும் திவ்ய க்ஷேத்ர மஹாத்மியம் படித்துக் கொண்டிருக்க, பெரியவா அதை ஸ்வாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அன்று கொஞ்ச நேரம் கழித்து பெரியவா தன் மௌன வ்ரதத்தை முடித்துக் கொண்டு அந்த தீக்ஷதரை "க்ஷேமமா இரு" என்று ஆசீர்வாதம் பண்ணினார்.
தீக்ஷதர் மெதுவாக பெரியவாளிடம் வந்து, "பொண்ணுக்கு கல்யாணம் நல்ல இடத்தில் குதிரணும். பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்" என்று விண்ணப்பித்தார்.
"காலேல பாப்போம்" ஒரே வார்த்தையில் அந்த தீக்ஷதரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மீதி வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
தீக்ஷதருக்கோ ஏக கவலை! கல்யாணப் பேச்சை எடுத்ததும், ஏன் பெரியவா இப்படி சொன்னார்? என்று உள்ளே குடைந்து கொண்டிருந்தது.
மறுநாள் காலை எட்டு மணி. தீக்ஷதரை பெரியவா அழைப்பதாக பாரிஷதர் வந்து சொன்னதும், ஓடிப்போய் நமஸ்காரம் பண்ணினார்.
"ஒண்ணும் கவலைப்படவேணாம். ஒம்பொண்ணுக்கு நல்ல எடத்ல கல்யாணம் நடந்து, க்ஷேமமா இருப்பா" என்று ஆசிர்வதித்துவிட்டு, குங்குமப் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
அதோடு பாரிஷதரிடம் " இவன் வெளில எங்கியும் சாப்ட மாட்டான். அதுனால, பொரில தயிரைக் கலந்து சாப்டக் குடு" என்று அன்பான உத்தரவும் இட்டார்.
அவர் சொல்வதை எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கடைப் பிடிக்க முயற்சி எடுத்தால் கூட போறும். பெரியவாளே அதற்கான பந்தோபஸ்த்தை பண்ணிவிடுவார்.
ஊருக்கு வந்தபின் தீக்ஷதருக்கு ஒரு பயங்கரமான,அதிர்ச்சியான விஷயம் காத்திருந்தது!
ஆம். நேற்று இரவு பெரியவாளிடம் எந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக விண்ணப்பம் செய்தபோது "காலேல பாப்போம்" என்று பெரியவா சொன்னாளோ, அதே நேரம். அதாவது ராத்ரி எட்டு மணிக்கு, அந்த பெண்ணின் ப்ராணனுக்கே ஆபத்து வந்து, ரொம்ப அவஸ்தை பட்டு பிழைக்கப் போராடியிருக்கிறாள்.
அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தாள்.
No comments:
Post a Comment