Friday, November 5, 2021

தொண்டருக்குத் தொண்டு செய்த பரமாச்சார்யா.

 பெரியவா சரணம்

தீபாவளிக்கு  முந்தின நாள், தொண்டருக்குத்  தொண்டு செய்த பரமாச்சார்யா...

(இந்த மாத 'குமுதம் பக்தி ஸ்பெஷலில்' வந்த பி. ராமகிருஷ்ணன்  அவர்களின் பதிவு...) 

ஸ்ரீ மடத்தில்  மாப்பிள்ளை ராமமூர்த்தி னு  ஒருத்தர்  இருந்தார்..

ஸ்ரீ மடத்தில்  நைவேத்யத்துக்கானதை  சமைக்கற பாத்திரம், அன்னதானத்துக்கான  சமையலைச்  செய்யற பாத்திரம் இப்படி அண்டா, அண்டாவா  பெரிய, பெரிய பாத்திரங்களை  அலம்பற வேலையை அவர் தான் செய்து வந்தார்...

பெரிய பெரிய  பாத்திரங்கள்  அத்தனையும்  விறகு அடுப்புல சமைக்கறதனால  கரி ஏறி இருக்கும்.. தேங்காய் நார்ல  அடுப்பு சாம்பலைத் தொட்டுண்டும், புளியை  வைச்சுண்டும் மாங்கு மாங்குன்னு தேய்க்கணும்..

அதோட  அலம்பறதுக்கான  ஜலத்தையும் கெணத்துலேர்ந்து  இறைக்கணும்.. தேய்ச்சு  அலம்பி, கவிழ்த்து, காயவைச்சு உக்ராண அறையில போய்  வைக்கணும்.. இத்தனையும் அவர் ஒருத்தர் தான் செய்வார்..

ஒரு தரம் அலம்பி எடுத்து வைக்கறதுக்குள்ள,  அடுத்த  வேளைக்கான  சமையல் வேலை ஆரம்பமாயிடும்..

சாயந்தர  பூஜை முடிஞ்சு,  எல்லாரும் போஜனம்  பண்ணினதுக்கு அப்புறம் பாத்திரங்களை  அலம்பி வைச்சுட்டு அவர்  தூங்கறதுக்கு  நடுநிசிக்கிட்ட ஆயிடும்..

தெனம் தெனம்  இப்படியே இருந்தாலும் அவர்  கொஞ்சம் கூட  சலிச்சிண்டது இல்லை...

ஒரு  தீபாவளிக்கு  முதல் நாள் ராத்திரி, எல்லாரும்  தூங்கிண்டு  இருக்கறச்சே, ராமமூர்த்தி மட்டும்  பாத்திரங்களை கெணத்தடியிலே  போட்டுண்டு,  எண்ணெய் விளக்கு வெளிச்சத்துல உட்கார்ந்துண்டு  வழக்கம் போல தேய்க்க ஆரம்பிச்சார்...

கொஞ்ச நேரத்துக்கெல்லாம்  அங்கே ஏதோ  நிழலாடித்து..   யாரோ வர்ற ம தெரிஞ்சு, திரும்பிப் பார்த்தவர் அப்படியே திகைச்சுப் போனார்...

ரொம்பவே  மெதுவா  அடி மேல அடி வைச்சு  மத்தவாளுக்கு  சத்தம் கேட்காத படிக்கு  நடந்து அங்க வந்து நின்னார் மஹா பெரியவா..

மகானைப்  பார்த்ததும்  பரபரப்புடன் எழுந்து, "பெரியவா,  இந்த நேரத்துல  இங்கே  வந்துருக்கேளே, என்ன வேணும்?" என்று அவசர அவசரமா கேட்டார்...

மென்மையான புன்னகையுடன் பெரியவா, " தெனமும் நீ ஒருத்தனே இந்த கைங்கர்யத்தைப்  பண்ணின்டு  இருக்கியே, அதனால, இன்னிக்கு. நானும்  உன்னோட  சேர்ந்துக்கலாம் னு வந்திருக்கேன்! " ஆச்சார்யா சொன்னதும்  அப்படியே  நடுங்கிப் போய்ட்டார்  தொண்டர்..

"பெரியவா!  என்ன சொல்றேள்? நீங்கள் பாத்திரம்  தேய்க்கப் போறேளா, வேண்டாம் பெரியவா, உங்களை  அதைச் செய்ய  வைச்சா  எனக்கு  நரகம் தான் கெடைக்கும்! " என்று தழுதழுத்தார்..

" ஏன்  இப்படி பதட்டப் படறே? நீ  என்னை இதை  செய்யச்  சொல்லலயே.. நானாத்தானே. செய்யறேங்கறேன்.. அதோட,  உன்னோட  புண்ணியத்துல எனக்கும்  கொஞ்சம்  குடுன்னு யாசகமா கேட்கறேன்,  தர மாட்டியோ! " மென்னகை தவழச் சொன்ன  பெரியவா, தானே தொடர்ந்து  பேசினார்..

"ஒண்ணு பண்ணு  நீ அநுபவஸ்தன்... அதனால, பாத்திரத்தை எல்லாம் கரி போக,  பஸ்பத்தால  நீ தேய்ச்சுக் குடு... நான் கேணியிலிருந்து  ஜலம் எறைச்சு, அதையெல்லாம்  அலம்பிடறேன்... "

சொன்ன மகா பெரியவா. அதுக்கப்புறம் அந்தத் தொண்டர்  எவ்வளவோ  கெஞ்சிக் கேட்டுண்டும்,  தன்னோட வார்த்தைலேர்ந்து  பின் வாங்காம, சொன்ன  மாதிரியே  கெணத்துலேர்ந்து ஜலம்  இறைச்சு, பாத்திரங்களை அலம்பி வைச்சதோட,  அவரோட  தானும் சேர்ந்து எல்லாத்தையும் உக்ராண அறைக்கு எடுத்துண்டு  போய் கவிழ்த்தி வைச்சார்.. அப்புறம் தான் நித்திரை பண்ணவே போனார்..

மஹா பெரியவா  பண்ணின இந்த விஷயத்தை,  நெடு நாள் கழித்து, ஒரு தீபாவளியன்று  அந்தத்  தொண்டர் சொன்னதும் தான்  எல்லோருக்கும் தெரிய வந்தது...

கருணா ஸாகரம் நம் பெரியவா 🙏🙏

No comments:

Post a Comment