Friday, November 5, 2021

சிருங்கேரி கோவில்

சிருங்கேரி கோவில் பற்றிய வழிபாட்டு தகவல்கள், கோவில் வரலாறு என்னென்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

☘️சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

1.இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.

2.துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

3.ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

4.சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

5.ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

6.கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

7.சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

8.யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

9.சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

10.சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

11.குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

12.சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

13.நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

14.சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

15.அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

16.சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

17.யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

18.கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

19.அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

20.நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

21.உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

22.ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

23.நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

24.அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

25.ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.

26.சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது.

27.வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

28.மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

29.ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

30.இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

31.குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

32.சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

33.வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

34.வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

35.கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

36.துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

37.படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

38.சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான்.

39.சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

40.சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

41.சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

42.பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

43.துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

44.ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

45.சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

46.கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

47.சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

48.சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

49.தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

50.சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.

======================================

ஞானம் அருளும் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்

சிருங்கேரி சிறப்புகள் :

துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங் கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.

ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர்.

அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.

இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.

நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.

பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.

சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கு பவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சார தாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த் தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலை களும், ஆன்மீகச் சொற்பொழிவு களும் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.

முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.

கோவில் அமைப்பு :

சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.

கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.

பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.

சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.

அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.

கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.

இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.

பக்தர்களுக்கு ஸ்ரீசாரதா பீடத்தினால் செய்யப்பட்டுள்ள வசதிகள் :

சிருங்கேரிக்கு எண்ணற்ற யாத்ரீகர்களும் பக்தர்களும் வருகை புரிகின்றனர். அவர்கள் தங்க வசதியாக ஸ்ரீமடத்தினால் ஸ்ரீசங்கர கிருபா, ஸ்ரீசாரதா கிருபா, ஸ்ரீபாரதீ தீர்த்த கிருபா, யாத்ரீ நிவாஸ், ஸ்ரீசங்கர சதனம், ஸ்ரீ ஸ்ரீனிவாச நிலையம் முதலிய விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

விடுதிகளில் தங்க விரும்புவோர் ஸ்ரீமடத்தின் நுழைவாயிலின் அருகேயுள்ள வரவேற்பு மையத்தை அணுகலாம். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிம்மதியாக ஆலய தரிசனம் செய்வதற்கு வசதியாக சக்கர நாற்காலிகளை எவ்வித கட்டணமுமின்றி ஸ்ரீமடம் வழங்குகிறது.

தேவைப்படுவோர் இவற்றை வரவேற்பு மையத்தில் பெற்றுக்கொண்டு, பயன்படுத்திவிட்டு பின்பு மையத்திலேயே திரும்ப ஒப்படைத்துவிடலாம். ஸ்ரீசாரதாம்பாளின் பிரசாதமாக தினமும் மதியம் (12.15 மணி முதல் 2.30 மணி வரை) மற்றும் இரவு (7.15 முதல் 8.30 வரை) வேளைகளில் ஸ்ரீமடத்தின் அன்னக்கூடத்தல் சுவையான உணவு வழங்கப்படுகிறது. ஸ்ரீபாரதீ தீர்த்த பிரசாதா என அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸ்ரீமட உணவுக்கூடத்தில் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களில் வருகை புரியும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திட ஸ்ரீமடத்தின் அருகே துங்கையின் வடகரையில் இடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பக்தர்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு உதவிட ஸ்ரீமடத்தால் நடத்தப்படும் ஸ்ரீசாரதா தன்வந்திரி இலவச மருத்துவனையும் உள்ளது.

திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் :

ஜனவரி மாத மத்தியில் (தை மாத தொடக்கத்தில்) மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. அதே மாதத்தில் லலிதா பஞ்சமி பூஜையும், சூரிய பூஜையான ரதசப்தமியும் நடைபெறுகின்றன.

பிப்ரவரி- மார்ச் மாத தருணத்தில் சிவராத் திரியின் போது ஜகத் குருநாதர் இரவு முழு வதும் கண் விழித்து இடைவிடாது ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு விதவிதமான அபிஷேக ஆராதனை களுடன் கூடிய பூஜை யைச் செய்வார். குருநிவாஸ் என அழைக்கப்படும் பிரம்மாண்டமான பூஜா வளாகம் அன்றைய இரவு எள் விழக்கூட இடமில்லாத வகையில் பக்தர்களால் நிரம்பியிருக்கும் மார்ச், ஏப்ரல் தருணங்களில் உகாதி (கன்னட புதுவருடம்) மற்றும் ஸ்ரீராமநவமி பண்டிகைகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஏப்ரல்,மே மாத தருணத்தில் ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா ஸ்ரீ பீடத்தில் ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. விசேஷ ஆராதனைகள் மற்றும் வித்வத் சதஸ் எனப்படும் பண்டிதர்களின் சபைச்கூட்டங்களும் வெகு விமரிசையாக நடைபெறும். இம்மாதங்களின் பொழுது தான் ஸ்ரீகிரிஜா கல்யாணம் மற்றும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங் களில் சாதுர்மாஸ்ய விரதத்தை பீடத்தின் ஜகத் குரு கடைப்பிடிக்கிறார். சன்னியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதமாக இது கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஜகத்குருநாதர் இருக்கும் இடத்தை நாடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவருக்கு தங்கள் மரியாதைகளை சமர்பித்து அவரது ஆசிகளை பெற்றுச் செல்வார்கள்.

ஸ்ரீவியாஸ் பூஜையுடன் தொடங்கப்படும் இந்த சாதுர்மாஸ்ய காலங்களில் தான் மிக விசேஷமான பூஜைகளான சிராவண சோமவார பூஜை, ஸ்ரீ வரமகாலட்சுமி பூஜை, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, ஸ்வர்ண கௌரி விரதம், ஸ்ரீவரசித்தி விநாயக பூஜை, ஸ்ரீ கேதாரீஸ்வர விரதம், ஸ்ரீவாமன ஜெயந்தி, ஸ்ரீ அனந்த பத்மனாப விரதம், ஸ்ரீஉமா மகேஸ்வர விரதம் ஆகியவை ஜகத்குருநாதரால் நடத்தப்படுகின்றன. ஸ்ரீசாரதா பீடத்தின் பிரதான திருவிழா நவராத்திரி விழாவாகும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்த கொள்ள நாடெங்கி லுமிருந்து ஆயிரக்கணக் கான பக்தர்கள் சிருங்கேரிக்கு வருகை புரிவார்கள்.

ஸ்ரீசாரதா பீடத்தின் 12-ம் குருவான ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகளிடம் விஜய நகர மன்னர்கள் வேண்டிக் கேட்டுக் கொண் டற்கு இணங்க நவராத் திரியின் ஒன்பது தினங்களில் மட்டும் பீடத்திலுள்ள ஆசார்யசுவாமிகள் மன்னர்களால் சமர்பிக்கப்பட்ட இராஜ குக்கள் அணியும் தர்பார் உடைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.

நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் ஸ்ரீசாரதாம்பாள் விதவிதமான அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அளிக்கும் தரிசனத்தை காண கண்கோடி வேண்டும் என்றால் அது மிகையாகாது.

நவம்பர், டிசம்பர் தருணங்களில் கார்த்திகை சோமவார பூஜை, ஸ்ரீவித்யாசங்கர ஆராதனை, சிராப்தி த்வாதசீ, லஷ தீ போத்சவம் மகா பிரதோஷம், ஸ்ரீசுப்மண்ய லஷ்டி, அந்த காசுர வரதம், ஆர்த்ரோத்சவம், ஸ்ரீகாலபைரவ அஷ்டமி போன்ற பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருக்கார்த்திகை யட்டி நிகழ்த்தப்பெறும் லஷ தீ போத்சவம் மிக பிரசித்தி பெற்ற ஒன்று.

அன்றைய தினம் இரவு சிருங்கேரி ஊர் முழுவதிலும் ஒரு லஷம் தீபங்கள் ஏற்றுப் படுகின்றன. மலகானிகரேசுவரர் குன்றிலிருந்து பார்த்தோமானால் சிருங்கேரி ஊரே வைர வைடூரியங்கள் நிறைந்த ஓர் ஆடையை தரிதிருப்பது போலவே தோன்றும்.

மேற் கூறப்பட்டவை தவிர, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா ரதோத்சவம், ஸ்ரீதுர்காம்பாள் ரதோத்சவம், ஸ்ரீமலகானிகரேசுவரர் ரதோத்சவம், ஸ்ரீவித்யாசங்கரர் ரதோர்சவம் ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன.

ஸ்ரீசாரதா பீட ஆலய தரிசன நேரங்கள் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்

ஸ்ரீஜகத்குருவை தரிசிக்கும் நேரங்கள்

காலை 10.30மணி, மாலை5.30மணி, இரவு பூஜை 8.30 ( இவை பொதுவாக ஜகத்குரு மகாசுவாமிகள் தரிசனம் அளிக்கும் நேரங்கள். எனினும், திருவிழா சமயங்களிலும், விஜய யாத்திரை செல்லும் இடங்களி லும் இந்நேரங்கள் மாறுபடலாம்.)

காலை தரிசனத்தின் போது ஜகத்குருநாதர், வந்திருக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர அபிஷேக தீர்த்த பிரசாதத்தை வழங்குகிறார்.

நாடெங்கி லுமிருந்து வருகை புரியும் பக்தர்கள் ஜகத் குருவிற்கு பிக்சாவந்தனம், வஸ்த்ர காணிக்கை, பாதுகாணிக்கை, பூஜா காணிக்கை முதலியனவற்றைச் சமர்பித்து தங்களது மரியாதைகளைச் செலுத்துகின்றனர்.

அச்சமயமே பக்தர்கள் முந்தைய ஆசார்யரின் பாதுகைகளுக்கும், ஸ்ரீசாரதாம்பாளின் பாதுகை களுக்கும் பாத பூஜைகளையும் செய்கின்றனர். மாலை தரிசனத்தின் போது ஜகத் குருநாதர் தம்மை நாடு வோரது சந்தேகங்களை தீர்த்து வைத்து, அவர்களது பிரச்சினைகளுக்கு பரிகாரங்களையும் தந்தருள்கிறார்.

இரவு ஜகத்குரநாதரே ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையைச் செய்கிறார். சிருங்கேரிக்கு வரும் பக்தர்கள் இறையருள் நிறைக்கும் இந்த பூஜையைக் காணாது செல்வதில்லை.

ஆலய தரிசன நேரங்கள் :

• ஸ்ரீசாரதாம்பாள் ஆலயம்
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை.
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

• ஸ்ரீவித்யாசங்கரர் மற்றும் ஸ்ரீ தோரண கணபதி ஆலயங்கள்
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

• ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம்
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

• இதர ஆலயங்கள் மற்றும் சன்னதிகள்
காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.

சிருங்கேரி மடத்தின் பணிகள் :

சிருங்கேரி மடத்தின் சார்பில் சிருங்கேரியில் ‘சத்வித்யா சஞ்சீவினி பாடசாலை’ என்று ஒரு பள்ளி, அரசாங்க உதவி எதுவும் பெறாமல், தனித்து 100-க்கு மேற்பட்ட மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இந்த மாணவர்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் குருகுல முறையில் பயின்று வருகிறார்கள். பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், காலடியிலும் தர்க்கம், வேதாந்தம், மீமாம்சம் போன்ற உயர் வகுப்பு வேதக் கல்வி பயிலும் வசதிகள் கொண்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உணவு மற்றும் தங்குமிட வசதிகளோடு, கல்வியானது உயர் தரத்தில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். நஞ்சன்கூடு, கோபிச்செட்டிப்பாளையம், ராமேஸ்வரம் மற்றும் பல இடங்களில் சிறிய அளவிலான வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

சிருங்கேரியில் 125 படுக்கை வசதி கொண்ட நவீன இலவச மருத்துவ மனை ஒன்று இயங்கி வருகிறது. பெங்களூருவிலும், சேலத்திலும் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைகள் உள்ளன. காலடி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நவீனக் கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் சிருங்கேரி மடத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன. ஆன்மிக பக்தர்கள் திருத்தல யாத்திரை செல்கையில், திருமலை, வாரணாசி, ஹரித்துவார், கயா, ராமேஸ்வரம், ஸ்ரீ சைலம், கோகர்ணா, காலடி போன்ற இடங்களில் தங்குமிட வசதிகளை சிருங்கேரி மடம் செய்து தருகிறது இவை தவிர, பல தர்ம காரியங்களையும் சிருங்கேரி மடம் செய்து வருகிறது.

சிருங்கேரியை அடையும் பயண மார்க்கங்கள் :

விமான மார்க்கம்:

மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் 100 கி.மீ தொலைவில் சிருங்கேரி திருத்தலம் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிருங்கேரிக்கு வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன.

ரெயில் மார்க்கம்:

சிருங்கேரிக்கு அருகில் மங்களூர் (110 கி.மீ), உடுப்பி (80 கி.மீ), ஷிமோகா (105 கி.மீ) ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

பேருந்து மார்க்கம்:

சென்னை, பெங்களூர், மைசூர், மங்களூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சிருங்கேரிக்கு நேரடி பஸ் வசதி உண்டு.

சிருங்கேரி மடத்தை தொடர்பு கொள்ள....

நிர்வாக அதிகாரி
சிருங்கேரி மடம்,
சிருங்கேரி, சிக்மகளூர் மாவட்டம்
கர்நாடகா-577 139
போன்: +91 8265 250123,
+91 8265 250594, +91 8265 250192
பேக்ஸ்: +91 8265 250792

Related Tags :

அம்மன் கோவில் | கோவில் |

No comments:

Post a Comment