மாற்றம் நிகழ்ந்தது
ஒரு அதிகாரி ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்க வந்தார். அந்த அதிகாரி லஞ்சம் வாங்குவதில் கில்லாடி என்று பேசிக் கொள்வார்கள். நன்றாகச் சம்பாதித்து விட்டார். அந்த ஆபீஸில் இவர் திருந்தவில்லை என்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று கூடப் பேசிக்கொண்டார்கள்.
அந்த அதிகாரி கோயில்களுக்குப் போவார். கடவுளை வணங்குவார். உண்டியலில் பணம் போடுவார். லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை. அவர் லஞ்சம் வாங்கியதாகச் சிக்கவில்லை. சிக்கினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பார்.
அவருக்குச் சிலநாட்களாக மனம் நெருடிக்கொண்டே இருந்தது. ஸ்வாமிகளைத் தரிசித்தால் மன அமைதி கிட்டும் என்று ஒரு நாள் பெரிய பை நிறைய பழங்கள் வாங்கிக் கொண்டு காஞ்சி மடத்துக்குச் சென்றார்.
சற்று நேரம் காத்திருந்தார். ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வாய்ப்பு அமைந்தது. பை நிறையப் பழங்கள் கொடுத்தார் அந்த அதிகாரி.
ஸ்வாமிகள் அதைத் தொடவில்லை. மடத்துச் சிப்பந்தியை அழைத்து “இந்தப் பழங்களையெல்லாம் இங்கே இருக்கிறவர்களுக்குக் கொடுத்துடு…” என்று சொன்னார் ஸ்வாமிகள்.
அந்தச் சிப்பந்தியும் பழங்களை அங்கு காத்திருந்தவர்களுக்குக் கொடுத்தார்.
அந்த அதிகாரி ஆசாரிய ஸ்வாமிகளுக்குப் பாதபூஜை செய்தார். கருணை உமிழும் பார்வையை அந்த அதிகாரி மீது வீசினார். பிரசாதமாகப் பூவைக் கொடுத்தார். அதிகாரியின் உடலில் ஜில் என்ற உணர்வு. ஏதோ மாற்றம் நிகழ்ந்தது அதிகாரியின் மனதில்.
அந்த அதிகாரியின் மனம் பக்குவப்பட்டது.
அவர் பிரசாதமாகக் கொடுத்த பூ மகிமை வாய்ந்தது. பேராசை கூடாது என்பதை மிகவும் கனிவாகச் சொல்லிவிட்டார் என்று நினைத்துக் கொண்டு அந்த அதிகாரி ஊர் திரும்பினார்.
என்ன…. அந்த ஆபீஸர் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்துவிட்டு வந்த பிறகு உத்தமனாகிவிட்டார்” என்று அந்த ஆபீஸில் வியந்தார்கள்.
**************
அன்று ஈரோட்டிலிருந்து ஒருவர் வந்தார் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க. கரம் குவித்தார் வந்தவர். பாத பூஜையும் செய்தார். “என்ன… தொழில் நன்னா இருக்கா?” புன்னகையுடன் கேட்டார் மஹான்.
“உங்கள் ஆசியில் நல்லாயிருக்கு ஸ்வாமி.. நான் ஏதாவது கைங்கரியம் செய்யணும். ஸ்வாமிகள் வழி காட்டணும்” என்று சொன்னார்.
சற்று யோசித்தார் ஸ்வாமிகள்.
முடிந்தால் ஒருவருக்கு உதவி செய். இன்னும் மனசு இருந்தால் ஒரு குடும்பத்துக்கு புதுத் துணிகள் கொடுத்து கொஞ்சம் உதவி பண்ணு. இது கட்டளை இல்லை. ஆலோசனை தான்”.
“ஸ்வாமி, தங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். போன வருஷம் தொழிலில் நொடித்து வேதனையுடன் வந்து தங்களைத் தொழுதேன்.
காமாட்சியம்மனையும் ஏகாம்பரேஸ்வரரையும் தரிசிக்கச் சொன்னீர்கள். தரிசித்தேன். என் கஷ்டம் தீர்ந்தது. தொழிலில் லாபம் வந்தது. நான் கடுமையாக உழைத்துக் கஷ்டத்தைக் கடந்துவிட்டேன். இப்பொழுது நான் திருப்தியாக இருக்கிறேன்.”
புன்னகைத்தார் ஸ்வாமிகள்.
“நீ இப்ப காமாட்சியம்மனைத் தரிசிக்கப் போறே. உண்டியலிலும் பணம் போடப்போறே. அப்படியே அங்கே ஒருவர் தாடியுடன் நாலரை முழ வேஷ்டி கட்டிண்டு வெள்ளைச் சட்டையும் காவித்துண்டும் போட்டுண்டு இருப்பார்.
அவருக்கு உதவி செய்…. ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஸ்வாமியைத் தரிசிச்சுட்டு உண்டியலில் பணம் போட்டுட்டு அங்கே ஒரு குடும்பத்தைப் பார்ப்பே.
நாலு பேர், அப்பா, அம்மா, ரெண்டு குழந்தைகள். துணிகளில் கிழிசல் இருக்கும். காபிகலர் சேலை உடுத்தியிருப்பா அந்த அம்மா. ப்ளூ தாவணி போட்டிருப்பா பெண். பையன் காக்கிக் கால்சட்டை போட்டிருப்பான்.
அவர் அரைக்கை சிலாக் சட்டையும் நாலு முழ வேட்டியும் உடுத்தியிருப்பார். புரிந்ததோ?”
புரிந்தது ஸ்வாமி. இப்பவே போய் சேவிச்சுட்டு அவர்களைப் பார்க்கிறேன்” என்ற அந்த மனிதர் பழங்களும் பூவும் இருக்கிற புதுப்பையை ஸ்வாமிகளிடம் கொடுத்துவிட்டு காமாட்சியம்மன் கோவில் நோக்கிச் சென்றார்.
காமாட்சியம்மனுக்கு மாலை மரியாதை செய்து வணங்கினார். உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு சுற்றும் பார்த்தார். தாடியும் காவித்துண்டும் அணிந்த மனிதர் இருந்தார்.
அவரிடம் பேசினார். அவர் எதையும் எதிர்பார்த்து இல்லை. மனக்கஷ்டம் இருந்தது.
ஸ்வாமிகளைத் தரிசித்துவிட்டு காமாட்சியம்மனைத் தரிசித்துவிட்டு சற்று நேரம் தியானம் செய்தபடி இருந்தார்.
“ஐயா… மடத்திலேயே இருங்கள். நான் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசித்துவிட்டு வருகிறேன். உங்களிடம் பேசணும்”.
அந்த தாடி மனிதர் சரி என்றார்.
ஏகாம்பரேஸ்வரரைத் தரிசித்தார் ஈரோடு மனிதர். உண்டியலில் பணம் போட்டார். சுற்றும் பார்த்தார். சிரமம் இல்லாமல் அந்தக் குடும்பத்தைப் பார்த்துவிட்டார்.
“அம்மா, ஏகாம்பரேஸ்வரரைத் தரிசனம் செஞ்சுட்டீங்களா?”
“செஞ்சுட்டோம்..”
“உங்க கூட கொஞ்சம் பேசணும். இது ஆசாரிய ஸ்வாமிகள் உத்தரவு…”
மரியாதையுடன் அந்தக் குடும்பம் இவரைப் பார்த்தது.. “சரிங்க” என்றார் கணவர்.
முதலில் தாடி மனிதரைப் பார்த்து ”ஸ்வாமிகள் உத்தரவு…. என்ன உதவி வேண்டும்?” கேட்டார். தாடிக்காரர் சிரித்தார்.
“ஒரு மாதமா சமையல் வேலை இல்லை. குடும்பத்தில் வறுமை”. இவ்வளவுதான் சொன்னார் தாடிக்காரர்.
ஒரு மாதத்துக்கான அரிசி, மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தார். “ஐயா, இதை நான் திருப்பிக் கொடுத்துடுறேன்” என்றார் சமையல்காரர்.
ஸ்வாமிகளைத் தரிசித்ததில் அந்தச் சமையல்காரருக்குப் பிரகாசம் தெரிந்தது.
“நீ நன்னா சமையல் செய்றே… ஆனா கூலியை தாறுமாறாகக் கேட்கறே…. அதனால் வேலை கிடைக்கறதில்ல… வேலையைச் செய். கூலி கிடைக்கும். உன் கஷ்டம் தீரும்”
என்று ஒரு பழத்தைக் கொடுத்தார் ஸ்வாமிகள்.
அவரைத் தரிசித்துவிட்டு காமாட்சியம்மனை சேவித்துவிட்டு மண்டபத்தில் இருந்தபோதுதான் ஈரோட்டுக்காரர் பார்த்தார். உதவினார்.
அதன்பிறகு அந்தச் சமையல்காரர் அடாவடித்தனமாக கூலி கேட்கவில்லை. நன்றாகச் சமைக்கச் சென்றார். வாய்ப்புகள் குவிந்தன.
அவரது கஷ்டம் தீர்ந்தது. ஸ்வாமிகளையும் தரிசித்தார் “மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று ஸ்வாமிகளிடம் சொல்வார்.
அந்தக் குடும்பத்தாரைப் பார்த்து விவரம் கேட்டார். “நாங்க நெசவுத் தொழில் செய்றவங்க. சொந்தத் தறி இருந்தும் வேலை இல்லை. துணி நெய்றவங்க துணிக்குக் கூடக் கஷ்டப்படுகிற நிலை” என்றார்கள் கணவனும் மனைவியும்.
ஈரோட்டுக்காரரும் நெசவுத் தொழில்தான் செய்தார்.
நான் நூல் தர்றேன். அம்பத்திரண்டு இன்ச் அகலமும் நாலரை முழ நீளமும் கொண்ட வேட்டிகள் நெசவு செய்து கொடுங்க. நான் உங்களுக்குக் கூலி தருகிறேன். வேலை நேர்த்தியா இருக்கணும். எவ்வளவு நெய்ய முடியுமோ அவ்வளவு நெய்ங்க”.
அவர்கள் முகத்தில் பிரகாசம். “நாங்க நேர்த்தியா நெசவு செய்வோங்க…. நீங்க சொன்னபடி வேட்டி நெய்ஞ்சு தர்றோம். பார்த்துட்டுக் கூலி கொடுங்க”.
அவர்களுக்கு இரண்டு செட் துணிகள் எடுத்துக் கொடுத்தார். மளிகைச்சாமான்கள் வாங்கிக் கொடுத்தார். நூலும் கொடுத்தார். தறி இயங்கியது. வேலையில் நேர்த்தி இருந்தது. அந்தக் குடும்பத்தின் வறுமை போனது. மகிழ்ச்சியுடன் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள் அந்தக் குடும்பத்தார். அவர்களும் மனிதநேயத்துடன் அடுத்தவர்களுக்கு உதவும் நிலை வந்தது.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
No comments:
Post a Comment