Saturday, November 6, 2021

விஞ்ஞானக் கதை : சுஜாதா

 *சுஜாதா எழுதிய மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம் - புத்தகத்திலிருந்து ஒரு விஞ்ஞானக் கதை*

# *விஞ்ஞானக் கதை : சுஜாதா *

சயின்ஸ் ஃபிக் ஷன் என்ற பாகுபாட்டின் கீழ் விஞ்ஞான கற்பனைகளை வைத்துக் கொண்டு மிகத் தேர்ந்த கதைகள் ஆங்கிலத்தில் வருகின்றன. அவற்றில் சமீபத்தில் நான் ரசித்த கதையைக் கீழே கொடுத்துள்ளேன்: 

இது ஒரு எழுத்தாளர் பற்றிய கதை. 

எழுத்தாளர் என்றால் உடனே மடக்கி விடுபவர்கள் அதிகம். மடக்காதீர்கள். இது வேறு தினுசு. இது சயின்ஸ் ஃபிக் ஷன் ! 

இந்த எழுத்தாளர் - ஆத்மா என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். இவர் முனைந்து ஒரு கதை எழுதுகிறார். எழுதி முடித்துவிட்டு, கடைசியில் திருப்திகரமான புன்னகை அவர் உதட்டில் தெரிகிறது. உடனே காகிதங்களை சேர்த்து ஓரத்தில் பின் அழுத்தி, ஒரு உறையில் இட்டு, முகவரி எழுதி, அவசர அவசரமாக சென்று தபால் பெட்டியில் சேர்கிறார்.

சற்று நேரத்தில் தபால் சேகரிப்பவன் வருகிறான். அந்த பிரத்தியேக உரையை அடையாளம் கண்டுகொண்டு, அவன் உள்ளம் துள்ளுகிறது. அட ! ஆத்மாவின் கதை………………. பிரித்துப் படிக்க ஆர்வம் இருந்தாலும், வேண்டாம்! அடுத்த வார இதழில் நிச்சயம் வரும். அதுவரை காத்திருக்கலாம் என்று உற்சாகமாக அதை எடுத்துச் செல்கிறான்.

தபால் ஆபீசில் முத்திரை குத்துபவன் அந்த உரையில் அனுப்புபவர் முகவரியை அடையாளம் கண்டு கொண்டு, ‘ அட ஆத்மா எழுதியிருக்கிறார், உடனே பட்டுவாடா செய்துவிடலாம். அடுத்த வாரம் நிச்சயம் படிக்க வேண்டும் !’

பத்திரிக்கை அலுவலகத்தில், ஆசிரியர் ‘ அட, ஆத்மாவின் கதை. உடனே உள்ளே அனுப்பு. வாங்கிக்கொண்டு வா !’ என்கிறார். ப்ரூஃப் பார்க்கிறவர் அந்தக் கதையை மிகவும் ரசித்து படிக்கிறார்.

அதன் முதல் வாசகன் கடையில் காத்திருந்து, அந்த இதழை வாங்கி அவசர அவசரமாக அங்கேயே படிக்கத் துவங்குகிறான்.

படித்து முடித்ததும், அவன் உடைந்து, விக்கி விக்கி அழுகிறான்.

ஏன் அழுகிறான் என்பதை சொல்லும்போது இந்தக் கதை ஒரு சாதாரண கதையிலிருந்து ஒரு தேர்ந்த சயன்ஸ் ஃபிக் ஷன் கதையாக எப்படி மாறுகிறது என்பதை பாருங்கள்.

அவன் அழுவதற்கு காரணம், நடந்தது எல்லாம் பாவனை. அவனே எழுத்தாளன், அவனே தபால் பையன், அவனே பத்திரிக்கை ஆசிரியர், அவனே ப்ரூஃப் பார்ப்பவன், அவனே முதல் வாசகன் !

ஏன்?

அவன் ஒருவன் தான் இந்த உலகில் பாக்கி இருக்கிறான். மூன்றாவது அணு ஆயுத உலக மகா யுத்தத்திற்குப் பிறகு தப்பிப் பிழைத்த ஒரே ஒரு குடிமகன் !

No comments:

Post a Comment