Saturday, November 6, 2021

ஆன்மீக ஸ்தலங்கள்

 #சண்டேஸ்பெஷல்  

சித்ரா சந்தரசேகரன் சென்று வந்த / செல்ல விரும்பும் ஆன்மீக ஸ்தலங்கள் 

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே .

- பாடியவர் திருமூலர் . உடலில் சக்தி இருக்கும் வரை ஆலயங்களைத்  தேடித் தரிசித்தல் உத்தமம் .

த்வாதச ( பன்னிரண்டு ) ஜ்யோதிர் லிங்கங்களைத் தரிசிக்க வேண்டுமென்னும் ஆசை எனக்கு உண்டு . அவை , 

1. இராமேஸ்வரம்  ( தமிழ்நாடு )
2. ஸ்ரீசைலம் ( ஆந்திர பிரதேசம் )
3,4 . சோம்நாத் , நாகேஸ்வரம் ( குஜராத் )
5,6,7 : த்ரயம்பகேஸ்வரம் ,பீமா சங்கரம் , க்ருஷ்ணேஸ்வரம் ( மஹாராஷ்ட்ரா )
8,9 : ஓம்காரேஸ்வரம் , மஹாகாளேஸ்வரம் ( மத்தியபிரதேசம் )
10. கேதார்நாத் ( உத்தரகாண்ட் )
11. காசி ( உத்தரபிரதேசம் )
12. பரலி பைத்யநாத் ( சட்டிஸ்கர் )

2005 - ம் வருஷம் என்று ஞாபகம் . பெரிய பையன் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தபோது , அங்கிருந்து  காரில் , நான் என் கணவர் , மகன்களுடன் ஸ்ரீசைலம் சென்று வந்தோம் . அது ஆன்மீகத்தலம் என்பதோடு அதன் சுற்றுச் சூழலும் , அருகிலிருக்கும் அழகிய கிருஷ்ணா நதியும் அது  ஒரு சுற்றுலா மையமாகவும்  அமையக் காரணமாக உள்ளது. . 

மூர்த்தி , மல்லிகார்ஜுனர் ; அம்பாள் பிரம்மராம்பாள். எந்த ஸ்தலத்துக்குச் சென்றாலும் அந்தமூர்த்தியின் பெயரையும் சேர்த்து மனதில் பதித்து வைத்துக் கொள்வது நல்லது . அங்கே, நிறைய பேர் தம்பதி சமேதராய் பூஜை செய்வதைப் பார்த்தோம் . இதன் விசேஷம் அப்போது தெரியவில்லை . அங்கே தம்பதி பூஜை விசேஷமானது என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டோம் . மேலும் , அங்கு செல்லும்போது அது ஒரு ஜ்யோதிர் லிங்க ஸ்தலம் என்பதும் தெரியாது . 

பின் , 2009 -ல் அகமதாபாத்தில் சின்னப் பையன் படித்துக் கொண்டிருந்தபோது , குஜராத்தில் இருந்த சோம்நாத் , திருநாகேஸ்வரம் இந்த இரு ஸ்தலங்களுக்கும் சென்று வந்தோம் .  திருநாகேஸ்வரத்தில்தான் இந்த  12  ஜ்யோதிர்லிங்கங்கள்  பற்றிய விவரமும் , அவை எங்கெங்கே உள்ளன என்றும்  தெரிந்து கொண்டோம் . 

சோம்நாத் கோவில் கொள்ளை அழகு ; அங்கெல்லாம் ஆரத்தி ரொம்பவே விசேஷமானது. வட தேசத்து மக்களின் ஆழ்ந்த பக்தியை ஆரத்தியின்போது கண்டேன் . கஜினி முஹம்மது பலமுறை படையெடுத்தது இந்த சோம்நாத் கோவிலில் உள்ள ஸ்வர்ணத்தைக் கொள்ளையடிக்கத்தான் . இப்போதும் , கோவிலுக்குச் செல்லும் வழியில் security துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பர் .

2012- ல் , ஒருமுறை சீரடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது . அப்போது , நாசிக்கில் உள்ள த்ரயம்பகேஸ்வரரையும் , அவுரங்காபாத்தில்  உள்ள க்ருஷ்ணேஸ்வரரையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. இந்த 5 கோவில்களையும் பார்த்த பின்தான் மற்ற ஜோதிர்லிங்கங்களையும் காண வேண்டுமென்ற ஆசை எழுந்தது. 

2013- ல் , என் தங்கை மகன் திருமணத்திற்கு மும்பை சென்றபோது , அங்கிருந்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வரம் , மஹா காளேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்குப் போய்  வந்தோம் . 

ஓம்காரேஸ்வரம் , நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரர், காலடியிலிருந்து புறப்பட்டு  நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலத்தின் அருகில் ஒரு குகையில்தான்,  முதன்முதலில் தனது குருவான கோவிந்த பகவத் பாதாளை சந்தித்தார் . அதை எண்ணிக் கொண்டு அந்த குகையில் கால் பதித்தபோது மெய் சிலிர்த்தது. 

மஹா காளேஸ்வரம் வெகு நேர்த்தியான அமைப்புடன் விளங்கும் கோவில் . அங்கே , குறிப்பிட்ட நாளில் அர்த்தசாம பூஜையில் , விபூதியில் விசேஷமாக அபிஷேகம் செய்வார்களாம் . அங்கேயுள்ள பைரவர் கோவிலில் , இறைவனுக்கு சமர்ப்பிக்க சில பக்தர்கள் , கோவில் வாசலில் விற்கும் மதுபானத்தை வாங்கிச் செல்வதைப் பார்த்தோம் . 

ஒருமுறை , மும்பையில் என் மைத்துனர் வீட்டுக்குச் சென்றபோது , நங்கள் பீமாசங்கரம் செல்ல வேண்டுமென்று சொல்ல , அவருடைய காரிலேயே எங்களை அங்கே  கூட்டிச் சென்று வந்தார் . அந்தக் கோவிலுக்குப் படிகளில் இறங்கிச் செல்ல வேண்டும் .அது ஒரு  புது அனுபவமாக இருந்தது.

தவிர , கேதார்நாத்/ பத்திரிநாத் சென்று வந்ததை நான் ஏற்கெனவே மத்யமரில் ' சுற்றுலா ' என்ற தலைப்பில் ஒரு தனிப் பதிவாகப் போட்டிருக்கிறேன் . 

https://m.facebook.com/groups/Madhyamar/permalink/826653674189115/

 மற்றபடி , தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம்தான் சமீபத்தில் சென்று வந்தது . அங்கே கடலிலும், மற்றும் எல்லாக் கிணறுகளிலும் நீராடி இறைவனைத் தரிசித்தோம் .

இறையருளால் , இதுவரையில், 10 ஜ்யோதிர் லிங்கங்களைத் தரிசனம் செய்யும் பேறு பெற்றோம் . காசியும் , பைத்யநாத் ஸ்தலங்களும் சென்றதில்லை . மணிவாசகர் பாடிய , 'அவனருளால் அவன் தாள் பணிந்து  ' என்றவாறு அந்த ஸ்தலங்களை நாங்கள்  தரிசிக்க அந்த சிவனருளையே வேண்டுகிறேன் .

 (கிடைத்த போட்டோக்களப் போட்டிருக்கிறேன் )



No comments:

Post a Comment